காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 7) தனது பாத யாத்திரையைத் தொடங்கினார். இதில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தமிழகத்தைச் சேர்ந்த 100 காங்கிரசார் யாத்திரை செல்கின்றனர்.
2024ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து அதற்கான செயல்பாடுகளில் தற்போதே ஈடுபட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
அதன் முக்கிய பகுதிதான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண யாத்திரை. கடந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பாத யாத்திரை குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அப்போது முதலே காங்கிரஸ் கட்சியினர் ராகுலின் பயணத்திட்டத்தை வகுக்கத் தொடங்கினர். எங்கிருந்து தொடங்கலாம் என்பது தொடங்கி, எந்த வழியாகப் பயணிக்கலாம், எத்தனை கிராமங்கள், நகர மக்களைச் சந்திக்கலாம், ராகுலுடன் செல்வது யார், அவர் தங்குவதற்கான கேரவன், உணவு, மருத்துவ வசதி என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து காங்கிரசார் திட்டமிட்டு வகுத்தனர்.
மொத்தம் 150 நாட்களில் 3,570 கிமீ மேற்கொள்ளும் இந்த பயணத்தை எந்த மாநிலத்திலிருந்து தொடங்கலாம் என்று திட்டமிடப்பட்ட போது, இந்தியாவின் மையப் பகுதியில் யாத்திரை பாதை போகும் வகையில் மேப் போடப்பட்டது.
அதன்படியே கன்னியாகுமரியில் அதாவது தமிழகத்திலிருந்து தொடங்கி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப் இறுதியாக ஜம்மு காஷ்மீர் என பயண திட்டம் வகுக்கப்பட்டது.
குமரி தொடங்கி திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூர், பெல்லாரி, ராய்ச்சூர், விகாராபாத், நான்டெட், ஜல்கான், இந்தூர், கோட்டா, தௌசா, அல்வார், புலந்த்ஷாஹர், டெல்லி, அம்பாலா, பதன்கோட் ஆகிய ஊர்களைக் கடந்து இந்த பாதை காஷ்மீரில் முடிகிறது.
பயணத் திட்டத்தைத் தொடர்ந்து ராகுலுடன் பயணிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கட்சித் தலைமை அறிவித்தது. bharatjodoyatra என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டு அதில், ராகுலுடன் செல்ல விரும்புவர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழகத்திலிருந்து ராகுல் காந்தியுடன் செல்வது யார் என்று பல்வேறு கட்ட ஆலோசனைகள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடத்தப்பட்டன. இதில் யார் யார் செல்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, 2000 பேர் ராகுலுடன் பயணிக்க விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்தனர். இதில் சரியில்லாத விண்ணப்பங்களை நிராகரித்து 600 விண்ணப்பங்களைத் தேர்வு செய்தது கட்சித் தலைமை. இந்த 600 பேருக்கும் நேர்காணல் வைக்கப்பட்டது.
நேர்காணலில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 250 பேருக்கு மருத்துவ உடற் தகுதி சோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா, நீரிழிவு நோய் இருக்கிறதா என்றெல்லாம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 250 பேரிலும், 150 பேரை வடிகட்டி 100 பேரை தேர்வு செய்தது காங்கிரஸ் தலைமை.
இந்த 100 பேரில் 40 பேர் பெண்கள், 60 பேர் ஆண்கள். இந்த 100 பேரும் குமரி தொடங்கி காஷ்மீர் வரை ராகுலுடன் பயணிக்கவுள்ளனர். காயத்ரி ராஜ் முரளி, முகமது ஆரிப் மற்றும் வழக்கறிஞர் ஆர்.சுதா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் கடைசி வரை ராகுலுடன் பயணிக்கும் நிலையில், ஒரு நாள் யாத்திரையோடு திரும்புவது, 3 நாள் யாத்திரையோடு திரும்புவது என பலர் ராகுல் காந்தியுடன் பயணம் மேற்கொள்கின்றனர்.
அதன்படி பார்த்தால், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவிலிருந்து சுமார் 250 பேர் பயணிக்கவுள்ளனர். இவர்கள் ராகுலுடன் ஒரு நாள் பயணித்துவிட்டு மீண்டும் திரும்புகின்றனர்.
இந்திய ஒற்றுமை பயணத்தில் தமிழக விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே வி இளங்கீரன் சார்பாக 3 நாட்கள் கலந்து கொள்ளவிருக்கும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 40 பேர் பயணிக்கவுள்ளனர்.
இதுபோன்று ராகுல் பயணிக்கும் 12 மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பாத யாத்திரையில் சேர்ந்துகொள்ள இருக்கின்றனர். அதன்படி மொத்தம் 3000 பேர் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் பயணிக்கின்றனர்.
பிரியா
இறந்து போன காங்கிரசுக்கு ராகுல் உயிர்தர முடியுமா?: வானதி ஸ்ரீனிவாசன்