ராகுலின் பாத யாத்திரையை துவக்கிவைத்தார் ஸ்டாலின்

Published On:

| By Prakash

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்குவதற்காக தமிழகம் வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, இன்று (செப்டம்பர் 7) காலை, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் நினைவிடத்திற்குச் சென்றார்.

அங்கு, ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ராகுலின் வருகையையொட்டி திருப்பெரும்புதூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ராஜிவ் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய ராகுல், அங்கேயே சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடி தியானம் செய்தார்.

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் கங்கை, கோதாவரி, யமுனா, நர்மதா உள்ளிட்ட நதிகளின் புனித நீர் தெளிக்கப்பட்டது.

அத்துடன் ராஜிவ் காந்திக்கு பிடித்த, அவரது நினைவாக ஆந்திராவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட 3 மாம்பழங்களை ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி வைத்து வணங்கினார்.

அதன்பிறகு, ராஜிவ் காந்தி படுகொலையில் உயிர்நீத்த நபர்களின் குடும்பத்தினருடன் உரையாடினார். இந்நிகழ்வுக்குப் பிறகு ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி சார்பாக அங்கு அரசமரம் நடப்பட்டது.

அதன்பிறகு, இசைக்கலைஞர் வீணை காயத்ரி நடத்திய இசையஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ராஜிவ் நினைவிட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை புறப்பட்ட ராகுல், திருவனந்தபுரம் சென்றார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி படகுத்துறையில் இருந்து தனிப் படகு மூலம் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் சிலைகளைப் பார்வையிட்டார் ராகுல்.

பின் அங்கிருந்து காந்தி மண்டபம் சென்ற ராகுல், மகாத்மா காந்தியின் புகைப்படங்களையும், நினைவுச் சின்னங்களையும் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அங்கேயே சிறிதுநேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

அதன்பிறகு காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ராகுல் சந்தித்தார். ராகுலை, தமிழக முதல்வர் வரவேற்றார்.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, சசிதரூர், திக் விஜய் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ராகுல் அறிமுகப்படுத்திவைத்தார்.

அங்கு, தமிழக முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன்பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ராகுல் உரையாடினார். அதன்பிறகு, ராகுல் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிறகு, அவர்கள் இருவரும் காந்திக்கு நிகழ்த்தப்பட்ட இசையஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

ஜெ.பிரகாஷ்

தமிழகத்தில் இன்று ராகுல் சுற்றுப்பயணம்! எங்கெல்லாம் செல்லப் போகிறார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share