வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் ஃபேஸ்புக் பக்க நிகழ்வுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் முக்கிய தலைவரான ராகுல் காந்தி நாடு முழுதும் நடை பயணம் செய்வது என்று ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.
பாரத் ஜூடோ யாத்ரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறார் ராகுல் காந்தி.
செப்டம்பர் 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து துவங்கி கேரளா சென்று அங்கிருந்து கர்நாடகா சென்று இந்தியா முழுதும் நடந்தே பயணிக்கிறார் ராகுல் காந்தி.
ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 25 கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் பற்றி பிரச்சாரம் செய்ய இருக்கிறார் ராகுல் காந்தி.
ஒவ்வொரு நாள் முடிவிலும் ஒரு பொதுக்கூட்டம். இப்படியாக 148 நாட்களில் 3500 முதல் 3700 கிலோ மீட்டர் என்று இந்த பாதயாத்திரைக்கு பக்காவாக பிளான் செய்திருக்கிறார்கள் காங்கிரஸார்.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடியும் யாத்திரை இது என்பதால் தமிழ்நாட்டில் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்திட முடிவு செய்திருக்கிறது தமிழக காங்கிரஸ்.
கடந்த ஒரு வாரமாகவே சத்தியமூர்த்தி பவனில் தினந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி.
காங்கிரஸின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள், பல்வேறு துணை அமைப்புகள் பல பிரிவுகளின் பங்கேற்பையும் முழு அளவில் பயன்படுத்துவது என்பதில் அழகிரி தீவிரமாக இருக்கிறார்.
சென்னை வரும் ராகுல் காந்தி மறுநாள் செப்டம்பர் 7 ஆம் தேதி காலை சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்கிறார்.
1991 மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடி குண்டால் கொல்லப்பட்ட தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு செல்கிறார் ராகுல் காந்தி. சுமார் முப்பது வருடங்களுக்குப் பின் ஸ்ரீபெரும்புதூருக்கு ராகுல் காந்தி வருகை தருகிறார்.
அங்கே தனது தந்தையின் ஆசியோடு கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். கன்னியாகுமரியில் காந்தி, காமராஜர் ஆகியோருக்கு மரியாதை செலுத்திவிட்டு நடைப் பயணத்தைத் தொடங்குகிறார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரியில் தொடங்கி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை வழியாக கேரளா செல்வதுதான் ராகுல் காந்தியின் பயணத் திட்டம்.
இந்த நடைப் பயணத்துக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்டமான கூட்டம் திரட்டப்பட வேண்டும் என்பதுதான் தமிழக காங்கிரஸின் திட்டம்.
தமிழக காங்கிரசில் மொத்தம் 72 மாவட்ட அமைப்புகள் உள்ளன. எல்லா மாவட்ட அமைப்புகளும் ஒரே நாளில் கன்னியாகுமரிக்கு வரவேண்டாம் என்றும், ராகுல் காந்தி பயணம் செய்யும் மூன்று நாட்களும் பலமான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதால்… மொத்த மாவட்ட அமைப்புகள் மூன்றாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளிலும் அந்த நாளுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் வரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேர் ராகுல் காந்தியோடு நடக்க வேண்டும் என்பதுதான் காங்கிரசின் திட்டம். இதற்கான காவல்துறை அனுமதி உள்ளிட்ட வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் முதல் வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் விவேகானந்தா கேந்திரம் தவிர மற்ற அனைத்து விடுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்காக புக் செய்து வருகிறார் குமரி எம்பியான விஜய்வசந்த். இந்த பாத யாத்திரையை தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் ஆசியளித்து ராகுலுக்கு பொன்னாடை அணிவித்து தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில்தான் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் இந்த பாத யாத்திரையில் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்கிறார்களா என்று ஒரு கேள்வி கேட்க, ‘எங்களின் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் பாத யாத்திரையின் ஒவ்வொரு நாளிலும் அழைப்பது என்ற ஆலோசனையில் இருக்கிறோம். அதை முடிவு செய்த பிறகு சொல்கிறோம்’ என்று பதிலளித்தார் அழகிரி.
பாஜக ஆட்சிக்கு எதிராகத்தான் இந்த பாத யாத்திரையை தமிழகத்தில் தொடங்குகிறார் ராகுல் காந்தி. இந்த பாத யாத்திரையில் கட்சியின் தோழமைக் கட்சிகள் பங்கேற்கலாம் என்றும் உதய்பூரில் தெரிவித்தனர் காங்கிரஸ் நிர்வாகிகள். அந்த வகையில் தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அண்மையில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்காக சென்னை வந்தபோது அவருக்கு தமிழக அரசின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடிக்கு தமிழக பாஜக பல இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒருபடி மேலே போய் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த இருந்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை மூலம் கண்டித்தார். பாஜகவும் திமுகவும் நெருங்குகிறதோ என்று விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழக தலைவர்கள் கூட சந்தேகப்பட்ட நிலையில்தான் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது’ என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் இந்திய அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கும் ராகுல் காந்தியின் பாத யாத்திரை துவக்க விழாவில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை அழைக்கலாம் என்றும், இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிதானே இதில் ஸ்டாலினை அழைத்தால் அங்கே திமுக கொடிகளும் பறக்கக் கூடும் ஏதோ திமுகதான் கூட்டத்தை கூட்டியது என்று திமுகவினரே பேசுவார்கள் எனவே இதை 100 சதவிகிதம் காங்கிரஸ் நிகழ்ச்சியாகவே நடத்திவிடுவோம் என்றும் இருவேறு கருத்துகள் காங்கிரஸுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று சொன்னவர் ஸ்டாலின் தான். எனவே அவரை யாத்திரை துவக்க விழாவுக்கு அழைக்கலாம் என்கிறார்கள் காங்கிரசில் உள்ள திமுக ஆதரவு தலைவர்கள். ஆனால், ‘ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தியின் ஆசி பெற்றுக் கொண்டுதான் கன்னியாகுமரிக்கு செல்கிறார்.
இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து ஆரத் தழுவிய ஸ்டாலினையும் அந்த பாத யாத்திரைக்கு அழைத்தால் அது சரியாக இருக்குமா? தேர்தல் வரும்போது திமுக கூட்டணி இருக்கட்டும். ஆனால் இப்போது தமிழகத்தில் காங்கிரஸின் தனித்துவத்தை இந்த பாத யாத்திரை மூலம் நிலை நாட்டுவோம்’ என்றும் பட்டிமன்றமே நடந்து வருகிறது காங்கிரஸ் கட்சிக்குள்.
இதனால்தான் கூட்டணித் தலைவர்கள் பாத யாத்திரையில் கலந்துகொள்வார்களா என்ற கேள்விக்கு, ‘ஆலோசித்து முடிவெடுப்போம்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் அழகிரி. திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சென்னையிலேயே சந்தித்து ராகுல் காந்தி உரையாடும் திட்டமும் இருக்கிறது.
திமுக தரப்பில் விசாரித்தால் காங்கிரஸோடு எங்களுக்கு உறுதியான உறவு தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக சரிவை சந்தித்து வரும் இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து முறையான அழைப்பு வந்தால் எங்கள் தலைவர் பரிசீலிப்பார் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
நலத்திட்டமும் இலவசமும் ஒன்றல்ல: எம்.பி கனிமொழி