கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு சிறுவர்களுடன் விளையாடிய கால்பந்து வீடியோ வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ’பாரத் ஜோடோ யாத்ரா’ எனும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார்.
மொத்தம் 150 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் துவங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 10ம் தேதி தமிழகத்தை நிறைவு செய்தார்.
பின்னர், செப்டம்பர் 11ம் தேதி முதல் கேரளாவில் நடைப்பயணத்தை தொடர்ந்தார். நடைப்பயணத்தின் 9ம் நாளான செப்டம்பர் 15ம் தேதி ஓய்வுநாளாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் செப்டம்பர் 16ம் தேதி காலை கொல்லம் மாவட்டத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கினார், ராகுல்.
அதைத் தொடர்ந்து நடைப்பயணத்தின்போது செப்டம்பர் 19ம் தேதி, கேரள ஆலப்புழாவில் காட்சி படகு போட்டியில் பங்கேற்று மகிழ்ந்தார்.
இந்தப் போட்டியில் ராகுல் காந்தியும் தன் பங்கிற்கு படகை இயக்கி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
படகுப் போட்டியில் பங்கேற்றது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”நாம் அனைவரும் ஒன்றிணைந்து சரியான நோக்கத்துடன் செயல்பட்டால், நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கேரள பாலக்காட்டின் ஷோரனூரில் இன்று (செப்டம்பர் 26) தன்னுடைய 19வது நாள் நடைப்பயணத்தைத் தொடங்கினார், ராகுல் காந்தி.
ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, நடைப்பயணத்தினூடே சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட ராகுலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெ.பிரகாஷ்
குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சி!
தசரா: குடியரசுத் தலைவரின் முதல் மாநில பயணம்!