பாரத் ஜோடோ யாத்திரையில், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷம் எழுந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரள மாநில வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி, அக்கட்சியை வலிமைப்படுத்தும் நோக்கில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைக் கடந்த நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் பகுதியில் ராகுல்காந்தியுடன் அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டபோது, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷம் எழுப்பப்பட்டதாக பாஜக கூறியிருப்பதுடன், அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

பா. ஜ. க சமூக வலைதள பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில்தான் இதுபோன்ற சத்தம் கேட்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் தவிர பாஜக மாநிலத் தலைவர் வி. டி. சர்மா மற்றும் பிற கட்சித் தலைவர்களும் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
வீடியோ தொடர்பாக வி. டி. சர்மா, “ஜோடோ யாத்திரையில், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கங்கள் முழங்கப்பட்டன.
இது, நாட்டை பிளவுபடுத்தும் காங்கிரஸின் மன நிலையை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது.
இந்த செயலுக்கு ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ’இதுபோன்று முழக்கமிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
பாஜக வைக்கும் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்திருப்பதுடன் அது போலியான வீடியோ என தெரிவித்துள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தை அவமானப்படுத்தவே பாஜக இதுபோன்று சதி வேலைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”பாஜக வின் போலி வீடியோவான அது, ராகுலின் பாரத் ஜோடோ யாத்ரா வை இழிவுபடுத்துகிறது.
பாரத் ஜோடோ யாத்ரா வுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமாக இருக்கும் ஆதரவைக் கண்ட பாஜக, பொறாமை கொண்டு, யாத்ராவையும் ராகுல் காந்தியையும் அவதூறு செய்யும் வகையில் எடிட் செய்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாஜக வின் இத்தகைய கேவலமான தந்திரங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தகுந்த பதில் அளிக்கப்படும்” என பாஜக வுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
நள்ளிரவில் களைகட்டிய பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!
”ஆளுநரும் அண்ணாமலையும் மெண்டல்கள்”- மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி