நாட்டைக் காக்க ஒரு மகத்தான நடைபயணம்

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

நடப்பதால் என்ன நடந்துவிடும் என்று பலரும் கேட்கின்றனர். அதாவது ராகுல் காந்தி பங்கேற்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின்’பாரத் ஜாடோ யாத்திரை’யில் அவர்கள் 3,500 கிலோமீட்டர் நடப்பதால் என்ன பெரிதாக அரசியலில்  நிகழ்ந்துவிடும் என்பது அவர்கள் கேள்வி.

ஒன்றும் பெரிதாக நிகழாது என்று அவர்கள் நம்புகின்றனர். கூறுகின்றனர். அவர்கள் அவ்வாறு சொல்லும் ஒவ்வொரு முறையும் ஏதாவது நடந்துவிடும் என்ற எண்ணமும் கூடவே தோன்றியவாறுதான் உள்ளது. ஏனெனில் நடப்பது என்ற சொல் நடத்தல் என்ற செயலையும், நிகழ்வு என்ற பொருளையும் கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வர் தேசியக் கொடியை வழங்கி துவக்கி வைக்க ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த யாத்திரையின் பெயர், இந்திய இணைப்பு யாத்திரை என்பதாகும். அப்படி என்ன தேவை இன்றைக்கு எழுந்துள்ளது, இந்தியாவை இணைப்பதற்கு என்றும் பலருக்கு கேள்வி எழலாம்.

நாட்டை காக்கும் நடைபயணம் என்று நான் தலைப்பிட்டுள்ளேன். நாட்டை எதிலிருந்து காக்க வேண்டும்? அப்படியென்ன ஆபத்து வந்துவிட்டது என்றும் பலர் கேட்கலாம். அதற்கெல்லாம் விளக்கம் சொல்லத்தான் இந்தக் கட்டுரை.

நாட்டை இணைப்பது என்றால் என்ன?

காலனீய ஆதிக்கத்திலிருந்து இந்திய நிலப்பகுதி விடுதலை அடையும்போது இந்து, முஸ்லிம் மத அடையாளங்கள் நவீன அரசியல் அடையாளங்களாகவும் மாற தலைப்பட்டன என்பதில்தான் பிரச்சினை துவங்கியது.

இதில் என்ன பிரச்சினை என்று புரிந்துகொள்ள வேண்டும். அது நவீன தேசத்தின் குடிமக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதுதான் பிரச்சினை. அதனை மறுதலித்து இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்துவதுதான் நாட்டை இணைப்பதாகும்.

நவீன அரசியல் தோன்றுவதற்கு முன் மதமும், அரசும் எல்லா காலங்களிலும் நெருங்கிய தொடர்புடன் இருந்தாலும், நவீன கால அரசியலமைப்பு என்பது குடிநபர்களை மையமாகக் கொண்டது என்பதால் அது குடிமைச்சமூக விழுமியங்களின் அடிப்படையில் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும் என்ற கருத்தாக்கம் கொண்டது.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சுதந்திரவாத மக்களாட்சி கருத்தியலுடன் இணைந்து இத்தகைய மதச்சார்பற்ற அரசு என்ற கருத்தாக்கம் உருவாகியிருந்தது. மதம் என்பது குடி நபர்களின் தனிப்பட்ட வாழ்வு சார்ந்தது; அதற்கும் பொது வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்பதே இந்த சிந்தனை. ஒருவருக்கு தனி நபர் என்ற அளவில் மதம் இருக்கலாம்; குடி நபராக மதம் கிடையாது என்பது சுதந்திரவாத மக்களாட்சி.

ரஷ்யாவிலும், சீனாவிலும் வலுப்பெற்ற பொதுவுடமை சித்தாந்தமோ மனிதர்களை உழைப்பாளிகள் என்றே அடையாளப்படுத்தியதால் அதுவும் மதத்திற்கு அப்பாற்பட்ட உழைப்பு என்ற பொதுத்தன்மையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இவற்றின் பின்னணியில் இந்திய நிலப்பகுதியில் மக்களை காலனீய ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலைக்குப் போராட வழி நடத்தியவர்கள், அவர்களை தங்கள் சுயாட்சியைத் தேர்வு செய்துகொள்ளும், தங்கள் வாழ்வை வடிவமைத்துக்கொள்ளும் சுதந்திரம் மிக்கவர்களாக மாற்ற விழைந்தார்களே அன்றி, மத அடையாளத்தின் அடிப்படையில் அவர்கள் தங்கள் அரசுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை.

குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் எல்லா மதத்தவர்களும் பங்கேற்கும் இயக்கமாகவே இருந்தது. அதே சமயம், முஸ்லிம்களுக்கான முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளும், இந்துக்களுக்கான அமைப்புகளும் இயங்கிவரத்தான் செய்தன. இந்து மகா சபா (தோற்றம் 1915), ஆர்.எஸ்.எஸ் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் ராஷ்டிரீய சுயம்சேவக் சங் (தோற்றம் 1925) ஆகியவையும் இயங்கி வந்தன.

mahathma gandhi

விடுதலை போரில் உருவான தேசம்

இந்திய விடுதலைக்கான வெகுமக்கள் எழுச்சியை தேசமெங்கும் தூண்டிய அபூர்வ மனிதராக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி உருவானார். அவருடைய தன்னலமற்ற சேவை பண்புகளால் மகாத்மா என்று போற்றப்பட்டார்.

ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்ட அவர், மக்களின் இறை நம்பிக்கையைப் பெரிதும் மதித்தார். ஆனால் எல்லா இறை அடையாளங்களும் ஒன்று என்று நினைத்தார். அதனால் பல்வேறு மதங்கள், மார்க்கங்களுக்கிடையே ஒற்றுமை நிலவுவதே சரியான இறை நம்பிக்கை என்று கருதினார்.

“ரகுபதி ராகவ ராஜா ராம்” அவருடைய புகழ்பெற்ற பஜனை பாடலில்  “ஈஷ்வர் அல்லா தேரோ நாம்” என்று ஒற்றுமைப்படுத்தி பாடினார். மத நல்லிணக்கத்தை தேசிய வாழ்வின் அடிப்படையாக மாற்ற விரும்பினார்.

அவரால் தன்னுடைய அரசியல் வாரிசு என்று அறிவிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு, இறை நம்பிக்கையை எதிர்க்கவில்லை என்றாலும் பகுத்தறிவை நம்பினார். சோசலிசவாதியான அவர் குடி நபர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் தேசிய வாழ்வினை உருவாக்கிக்கொள்வதை ஆதரித்தார். அந்த வகையில் அவர் நவீன அரசியல் விழுமியங்களின்படி உருவான தலைவராக இருந்தார்.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவானபோது அந்த நவீன விழுமியங்களின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்க வேண்டிய பெரும் தேவை இருந்தது. காங்கிரஸ் கட்சியிலும், அதற்கு வெளியிலும் பல சனாதனிகள் இருந்தார்கள். இவர்கள் மரபு என்ற பெயரில் ஜாதீயம், ஆணாதிக்கம் ஆகியவற்றினை அனுசரிக்கும் விதிகளை ஆதரிக்கக் கூடியவர்களாக இருந்தனர்.

இவர்களுடைய எண்ணங்களுக்கு இடம் கொடாமல் முற்போக்கான ஓர் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பினை ஏற்றவர் பாபாசாகேப் அம்பேத்கர். அவர் பார்ப்பனீய இந்துமதத்தின் சனாதன வர்ண தர்ம கோட்பாட்டுக்கும், ஜாதீய நோக்குக்கும் முற்றிலும் எதிரானவராக இருந்தார். ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் தலைவராக, அவர்களை புத்த மதத்துக்கு அழைத்துச் சென்றவராக இருந்தார்.

Bharat Jodo Yatra by Rahul Gandhi thandhai periyar

தமிழகத்திலோ தந்தை பெரியார் ஜாதீய கருத்தியலை, பிறப்பிலேயே பேதம் கற்பித்து, ஏற்றத்தாழ்வை நிலைப்படுத்தும் சமூகப் பார்வையை, அதனை வலியுறுத்தும் சனாதன பார்ப்பனீய மதத்தை அறவே மறுதலித்தார். அதற்கெதிரான திராவிட-தமிழ் அடையாளத்தை வலியுறுத்தினார். அவர் வழிவந்த அறிஞர் அண்ணாவும், கலைஞரும் அதனை திராவிட கருத்தியலாக, அரசியலாக வளர்த்தெடுத்து நிலைபெறச் செய்தனர்.

இவர்களுக்கெல்லாம் மாறாக, எதிராக இந்து மத அடையாளத்தையே அரசியலின் அடிப்படையாக மாற்ற வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துவதாகவே இருந்தன இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும். அதன் அரசியல் கொள்கைதான் இந்துத்துவம்.

அதை எழுதிய சாவர்க்கர் செய்த வரையறை என்னவென்றால் இந்திய நிலப்பரப்பினை மட்டுமே புண்ணிய பூமியாக கொள்பவர்கள்தான் அதன் குடிமக்கள் என்பது. இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இந்திய நிலப்பரப்பிற்கு வெளியே தங்கள் புனிதத் தலங்களை கொண்டிருப்பதால் அவர்கள் இந்தியாவில் வசித்தாலும் பிறருக்கு இணையான குடியுரிமை தகுதி கொண்டவர்களாக இருக்க முடியாது என்பதுதான்.

தேசப் பிரிவினையும், தொடரும் அரசியல் பிரிவினையும்

தேர்தல் மூலம் அரசமைக்கும்போது பெரும்பான்மையாக இந்துக்களே இருப்பதால், தங்களுக்கு அதிகாரத்தில் சரியான பங்கு கிடைக்காது என்று நினைத்த முஸ்லிம் லீக் கட்சியும் தங்களுக்கென தனி நாடு கோரியதால் இந்தியா, பாகிஸ்தான் என இரு தேசங்களாக காலனீய ஆட்சி உருவாக்கி இரண்டுக்கும் அரசியல் விடுதலை அளித்தது. இதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும், பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும் கணிசமாக இடம் பெயர்ந்ததால் பெரும் கலவரங்கள் மூண்டன.

இரண்டு நாடுகளாகப் பிரிந்த பின்னும்கூட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு செல்வது சாத்தியமாக இல்லை. முதலில் அவர்கள் எல்லாம் இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பேசும் மொழிவாரி மக்கள் தொகுதிகளின் அங்கமாக இருந்தார்கள். உதாரணமாக தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் எல்லோரும் தங்களை தமிழ் மொழி ஒன்றுபடுத்துவதை, இணைப்பதைக் கண்டார்கள்.

அது போலவே இந்தியாவின் பல பகுதிகளிலும் மதங்களைக் கடந்த பிற வாழ்வியல் அம்சங்கள் மக்கள் தொகுதிகளை உருவாக்கியதால் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இந்திய குடிமக்களாக, இந்தியாவின் தேசிய வாழ்வில், குடிமை சமூகத்தில், அரசியலில் தேசப் பற்றுடன் பங்கெடுப்பவர்களாக விளங்குகிறார்கள். இந்தியாவிலுள்ள முஸ்லிம் குடிமக்களின் எண்ணிக்கை எந்த ஐரோப்பிய நாட்டின், உலகின் பெரும்பாலான நாடுகளின் மக்கள் தொகையை விட பெரியது.

Bharat Jodo Yatra by Rahul Gandhi

இந்த நிலையில், இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் அரசியல் வழித்தோன்றலான பாரதீய ஜனதா கட்சி, அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறி அந்த மசூதியை 1992ஆம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக இடித்துத் தள்ள வழி வகுத்தது. அந்த இயக்கத்தின் மூலம் மீண்டும் இந்துத்துவ அரசியலை முன்னெடுத்த அது, தேர்தல் அரசியலில் வெற்றி பெறத் துவங்கியது. இப்போது பல பத்தாண்டுகள் நிகழ்ந்த வழக்குகளின் முடிவில் உச்ச நீதிமன்றமே அளித்துவிட்ட அனுமதியின் அடிப்படையில் அங்கே ஒரு ராமர் கோயிலைக் கட்டுகிறது.

அது மட்டுமல்லாமல் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் என்பதன் மூலம் குடியுரிமையையும், மத அடையாளத்தையும் தொடர்பு படுத்தவும் முயல்கிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில்தான் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொது வாழ்க்கை முடங்கியது.

நவீன அரசியலின் அடிப்படை மக்களை ஒருங்கிணைப்பதே!  

நவீன அரசியலின் விடுதலை கருத்தாக்கத்தை நாம் ஒரு வரியில் புரிந்துகொள்ள வேண்டுமானால், அது ஒரு  நபரின் அடையாளமும், வாழ்க்கையும் பிறப்பு சார்ந்து அமையாமல், தனிப்பட்ட நம்பிக்கைகள் அடிப்படையில் அமையாமல், பொது வாழ்க்கை விழுமியங்கள் சார்ந்து அமைவதுதான்.

ஏனெனில் பிறப்பு என்பது ஒருவரது தேர்வு அல்ல. அரசியல் என்பது ஒருவர் தனக்கான தேர்வை மேற்கொள்வதுதான்.

அதனால்தான் பிறப்பு சார்ந்த அடையாளத்தை வலியுறுத்தும் எந்த அரசியலும் பிற்போக்கானது. ஒருவரது தன்னுணர்வின் விகசிப்பில் செய்யும் தேர்வுகளின் அரசியலே முற்போக்கானது.

பிறப்பு சார்ந்த பால் அடையாளத்தை பாலியல் அடையாளமாக்குவதும் பிற்போக்குதான். இதைத்தான் பால் புதுமையினர் அரசியல் கூறுகிறது.

இந்த இடத்தில் சில குயுக்திக்காரர்கள் ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு வருவார்கள். அது என்னவென்றால், பிறப்படையாளத்தால் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அணி சேர்க்கையும் அந்தப் பிறப்பு அடையாளங்கள் அடிப்படையில் அமைகின்றனவே என்பார்கள். அது பிறப்பு அடையாளமல்ல; சமூக வரலாற்றில் வஞ்சிக்கப்பட்டதன் அடையாளம்.

அவ்வாறு தங்களது ஒடுக்கப்பட்ட அடையாளத்தின் பேரின் அரசியல் செய்பவர்கள் யாரையும் அடையாளத்தின் அடிப்படையில் வெறுக்க மாட்டார்கள்; எதிரிகளாக கட்டமைக்க மாட்டார்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய மட்டுமே விரும்புவார்கள். அதன் பெயர்தான் சமூக நீதி அரசியல்.

இவ்வாறான முற்போக்கு சிந்தனையை அரசியலின் அடிப்படையாகக் கொள்ளும்போதுதான், எல்லா அடையாளங்களையும் கடந்த சமத்துவம், சமூக நீதி கருத்துகளின் அடிப்படையில் மக்களின் ஒற்றுமையைக் கட்டமைக்க முடியும்.

Bharat Jodo Yatra by Rahul Gandhi Rahul Gandhi

ராகுல் காந்தியும், காங்கிரஸும்…

இந்தியாவின் எழுபத்தைந்து ஆண்டுக் கால மக்களாட்சி என்பது ஒரு வகையில் பெருமை கொள்ளத்தக்கது என்றாலும், அதில்  நிலவும் முக்கியமான போதாமை என்னவென்றால் தேர்தலில் வெல்வதே அரசியல் என்ற எண்ணம்தான்.

பெரும்பாலான ஊடகங்களில் இந்த நடைபயணத்தால் பயன் இருக்குமா என்று விவாதிக்கும்போது இந்தப் பயணம் தேர்தலில் வெல்வதற்கு உதவுமா என்றுதான் கேட்கிறார்கள். அதுவும் அடுத்து வரும் தேர்தலிலேயே பெரும்பான்மை தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்துவிட வேண்டும். அதற்கு எது உதவுமோ அதுதான் முக்கியமானது, மற்றவை முக்கியமானதல்ல என்று நினைக்கிறார்கள்.

இது மிகவும் தவறான ஓர் அணுகுமுறையாகும். இந்திய நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் பெரும்பான்மை இடங்களை வென்றதில்லை. கூட்டணி அரசில் கூட பங்கு வகித்ததில்லை. ஆனால் அவை அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் பங்காற்றியுள்ளன. தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கான தேவைகளுக்குக் குரல் கொடுத்து வந்துள்ளன. உபரியினை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

அதே போல எந்த மாநில கட்சியும்  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாது. ஆனால் அவையும் மக்களுக்கு தேவையான சமூக நீதி சார்ந்த பார்வைகளைத் தொடர்ந்து ஒலித்து வந்துள்ளன. இந்திரா காந்தி வங்கிகளை தேசிய மயமாக்கும் புரட்சிகர முடிவிற்கு வந்தபோது திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கு உறுதுணையாக நின்றது. வங்கிகளை தேசிய மயமாக்குவது தி.மு.க-வின் கொள்கையாகவே அதன் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த அம்சம்தான்.  

ராகுல் காந்தியும் இந்திய தேசிய காங்கிரஸும் மேற்கொள்ளும் இந்த வரலாறு காணாத நடைபயணத்தை வெறும் தேர்தல் உத்தியாக சுருக்குவது இந்த நாட்டுக்கு செய்யும் துரோகம் என்றால் மிகையாகாது.

பாரதீய ஜனதா கட்சியே தொடர்ந்து தேர்தலில் வென்றாலும், மக்களாட்சியின் விழுமியங்களை, லட்சியங்களை காத்து நிற்கும் தேவை அரசியலில் அக்கறை கொண்ட அனைவருக்கும் உள்ளது.

அது என்னவென்றால் பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காமல், தனிப்பட்ட நம்பிக்கைகள் அடிப்படையில் பிரிக்காமல், தேசத்தின் பொது நலத்தின் பேரால், பொதுவான சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சி போன்ற லட்சியங்களின் பேரால் ஒன்றுபடுத்துவதேயாகும்.

கட்டுரையாளர் குறிப்பு:

Bharat Jodo Yatra by Rahul Gandhi Rajan Kurai Krishnan

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

காங்கிரஸ் தலைவர் பதவி : ராகுல் காந்தி விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *