3ஆவது நாள் பயணம் : வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் ராகுலுடன் சந்திப்பு!
மூன்றாவது நாள் இந்திய ஒற்றுமை பயணத்தைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 9) காலை தொடங்கினார். அவருடன் கரூர் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் 3500க்கும் அதிகமான கிமீ நடைப்பயணமாகப் பயணித்து 150 நாட்களுக்குக் காஷ்மீரை அடைகிறார் ராகுல் காந்தி.
செப்டம்பர் 7ஆம் தேதி இந்த பயணம் குமரியில் தொடங்கியது. முதல்நாள் மாலை முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை கொடுத்து ராகுலின் பயணத்தை தொடங்கி வைத்தார்.
முதல் நாள் பயணத்தில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிவரை நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நேற்று இரண்டாவது நாளாக அங்கிருந்து தொடங்கி, ஸ்காட் கல்லூரியில் தனது பயணத்தை நிறைவு செய்தார்.
நேற்றைய நடைபயணத்தில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதாவின் அண்ணன் மற்றும் சகோதரர் ராகுல் காந்தியை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாவது நாள் பயணம் இன்று காலை நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலிருந்து துவங்கியது.
குமரி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டு ராகுல் காந்திக்கும் நடைப்பயணத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய பயணத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்தித்த “வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை” சேர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசினார். டிவிஎம் சாலையில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
ராகுலின் நடைபயணம் காலை 10 மணிக்கு புலியூர் குறிச்சி பகுதியில் உள்ள முட்டிடைச்சான் பாறை சர்ச் பகுதிக்கு வந்தடைகிறது.
இதையடுத்து கேரவனில் ஓய்வெடுக்கும் அவர், மதியம் 1 மணிக்குப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். பின்னர் 4 மணிக்குப் பயணத்தைத் தொடங்கும் ராகுல் காந்தி 7 மணியளவில் அழகிய மண்டபம் ஜங்சன் பகுதியில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
பிரியா
அன்று காந்தி இன்று ராகுல் : கே.எஸ்.அழகிரி பேச்சு!