அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களிடையே வெறுப்பை விதைத்து வரும் பாசிச சக்திகளை ஒழிக்கவே ராகுல்காந்தியால் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின் தொடர்ச்சியாக இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மணிப்பூரில் இன்று (ஜனவரி 14) தொடங்கியது.
முன்னதாக மணிப்பூரின் தவுபல் மாவட்ட மைதானத்தில் நடைபெற்ற யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
சர்வாதிகார மனோபாவம் உள்ளது!
அவர், “பிரதமர் மோடி மணிப்பூருக்கு வாக்கு கேட்க வருகிறார். ஆனால் அதே மாநில மக்கள் பிரச்சனையில் இருக்கும்போது அவர் முகத்தை கூட காட்ட வருவதில்லை.
அவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் அல்லது ராம் ராம் கோஷமிடுகிறார்.
பாஜக அரசியலுடன் மதத்தைக் கலக்கிறது. அதன் வழியாக மக்களிடையே கலவரத்தை தூண்டுகிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் எழுதப்பட்டுள்ள ஒற்றுமை, மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதிக்காக காங்கிரஸ் போராடுகிறது.
ஜவஹர்லால் நேரு முதன்முதலில் மணிப்பூருக்குச் சென்றபோது, அதை இந்தியாவின் மாணிக்கம் என்று வர்ணித்தார். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரும் இதையே சொன்னார்கள்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது. நாங்கள் அதனை எதிர்த்து போராடினோம், ஆனால் மத்திய அரசு எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. நம் நாட்டில் இப்போது சர்வாதிகார மனோபாவம் இயங்குகிறது.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நாட்டு மக்களிடையே தொடர்ந்து வெறுப்பை விதைத்து வரும் பாசிச சக்திகளை ஒழிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்த யாத்திரை மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது, மேலும் விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகளின் உரிமை மறுப்புக்கு எதிரானது என்று மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
இது சித்தாந்தத்துக்கான போராட்டம்!
தொடர்ந்து பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசுகையில், “இது ஒரு கருத்தியல் போராட்டம். மகர சங்கராந்தி, பொங்கல் திருநாளின் புனிதமான சந்தர்ப்பத்தில், நீதிக்கான இந்த யாத்திரை மணிப்பூரில் இருந்து தொடங்குகிறது. ராகுல் காந்தி தலைமையிலான இந்த யாத்திரை கிழக்கிலிருந்து மேற்காக, மணிப்பூரில் இருந்து மும்பை செல்லும். வெற்றியோ தோல்வியோ வேறு விஷயம், இது சித்தாந்தத்துக்கான போராட்டம்” என்று அவர் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ தொடங்கியது!
யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை: அண்ணாமலைக்கு தமிழக அரசு பதிலடி!