டெல்லியில் இன்று (செப்டம்பர் 9) தொடங்கி நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் இந்தியாவிற்கு பதில் பாரத் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று இந்தியாவிற்கு வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று மாநாடு தொடங்குவதற்கு மாநாட்டு அரங்கிற்கு வந்த தலைவர்களை பிரதமர் மோடி கைக்குலுக்கி வரவேற்றார். இதனையடுத்து காலை 10.30 மணிக்கு ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. மதியம் 1 மணி வரை “ஒரே பூமி” என்ற தலைப்பில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
பின்னர் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மாநாடு தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனிடையே பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று அச்சிடப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஜி20 இரவு விருந்திற்கான அழைப்பிதழில் “President of Bharat” என்று இருந்தது. பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. செப்டம்பர் 6 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணம் மேற்கொண்ட போது அவருடைய பயண விவரத்திலும் பாரத பிரதமர் என வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன்பு பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மோனிஷா