இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா போன்ற 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி20 கூட்டமைப்பானது இந்த வருடம் இந்தியா தலைமையின் கீழ் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்கிறது.
இதன் உச்சி மாநாடு செப்டம்பர் 9 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட, ஜி20 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இதற்கான அழைப்பிதழ் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில், இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில், பாரத் குடியரசு தலைவர் என பதிவிடப்படுள்ளது.
இதனை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ”President of Bharat’ என்று குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் ”President of India” என்றே குறிப்பிடப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1ன் படி “இந்தியாவானது மாநிலங்களின் ஒன்றியமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது இந்த “ஒன்றிணைந்த மாநிலங்கள்” என்பதில் கூட ஆளும் கட்சி திருத்தம் செய்துள்ளது” என விமர்சனம் செய்துள்ளார். மேலும், ”மோடி தொடர்ந்து வரலாற்றை திரிக்கலாம் ஆனால் எங்களை தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.