ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நிச்சயம் கைக்கு கை கொடுப்பார் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில், கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், பாசத்துக்குரிய கமலஹாசனை சந்தித்து திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டேன்.
திமுக கூட்டணியில் அவர் சேரவேண்டும் என்ற விருப்பத்தை சொன்னேன். நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாகச் சொன்னார்.
கமல்ஹாசனின் ரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்த ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவருடைய தந்தை காங்கிரசில் தியாகியாக இருந்தவர். தலைவர் காமராசருக்கு நெருக்கமாக இருந்தவர்.
காங்கிரசையும், கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை.
இருந்தாலும் அவர் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டோம். ஒரு நல்ல முடிவை அவர் அறிவிப்பார்.
அத்தோடு ஈரோட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற விருப்பத்தையும் சொல்லியிருக்கிறோம். அவர் நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல, கைக்கும் வாக்கு சேகரிப்பார் என்று முழுமையாக நம்புகிறேன். என் மனதில் அவர் உத்தரவாதம் தந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன்.
உள் அன்போடு எங்களை அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
சிறிய கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எல்லோரின் ஆதரவையும் கேட்கிறோம்.
ஜனநாயக முறைப்படி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளை பதவி இழக்கச் செய்து, பணத்தால் அதிகாரத்தை வைத்து மிரட்டி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை கமல்ஹாசன் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர், சாதி வித்தியாசங்கள் அவருக்கு இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். அதனால் அவர் நிச்சயம் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று தெரிவித்தார்.
அதிமுக குறித்த கேள்விக்கு, அதிமுக 4 ஆக உடைந்திருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை 4 அணிகளும் சேர்ந்து பாஜகவை ஆதரிக்கும் நிலையை உண்டாக்கி வைத்திருக்கிறது என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமா இது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ஜனநாயக முறைப்படிதான் தேர்தலை சந்திப்போம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பின் உறுப்பினரை விலைக்கு வாங்கலாம், மிரட்டலாம் என்ற பாஜக பாணியை பின்பற்றமாட்டோம் என்று இளங்கோவன் கூறினார்.
கலை.ரா