எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் தேதி மாற்றம்: காரணம் என்ன?

Published On:

| By Monisha

bengaluru opposition meeting date

பெங்களூருவில் 2வது எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. கடந்த ஜூன் 23 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் கூட்டம் இமாசல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் அடுத்த கூட்டத்தை பெங்களூருவில் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதனடிப்படையில் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஜூன் 29 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 2வது எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாட்னாவில் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்திற்கு பிறகு அடுத்த கூட்டத்தை பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளோம். பாசிச மற்றும் ஜனநாயக விரோத சக்திகளைத் தோற்கடித்து, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான தைரியமான பார்வையை முன்வைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டதற்கு 2 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. பீகார் மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 10-ல் தொடங்கி 14 வரையிலும் கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-ல் (இன்று) தொடங்கி ஜூலை 14 வரையிலும் நடைபெற உள்ளது.

இதனால் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மோனிஷா

சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment