கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 1996 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
அப்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் 468 வகையான 7,040 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், 700 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள், 740 விலையுயர்ந்த காலணிகள், 11,344 பட்டுப் புடவைகள், 250 சால்வைகள், 12 குளிர்சாதனப் பெட்டிகள், 10 டிவிகள், 8 விசிஆர் எனப்படும் நீராவி சுருக்க குளிர்பதனக் கருவிகள், 1 வீடியோ கேமரா, 4 சிடி பிளேயர்கள், 2 ஆடியோ டிஸ்க்குகள், 24 டூ இன் ஒன் டேப் ரெக்கார்டர்கள், 1,040 வீடியோ கேசட்டுகள், 3 இரும்பு லாக்கர்கள், ரூ.193,202 ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இந்த பொருட்கள் அனைத்தும் கடந்த 17 ஆண்டுகளாக கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை எல்லாம் ஏலம்விட்டு அதில் வரும் நிதியை வைத்து சொத்து குவிப்பு வழக்கிற்கு செலவு செய்த தொகையை ஈடு செய்ய வேண்டும் என்று பெங்களூர் சிட்டி சிவில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி 2022 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பெங்களூரு சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமச்சந்திர டி ஹூத்தார், ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி மனுவில் முகாந்திரம் உள்ளது என உத்தரவு பிறப்பித்தார்.
அந்த தீர்ப்பில், ”சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானது. எனவே உடனடியாக கர்நாடகா அரசு மற்றும் நீதித்துறை, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துகளையும் ஏலம் விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், “சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ நகைகள் மட்டும் தான் கர்நாடகா கருவூலத்தில் உள்ளது என்றும், இதர பொருட்களை கர்நாடகா அரசிடம் உடனடியாக வழங்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். jayalalitha jewels to TN govt
இந்நிலையில் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கலாம் என பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன், ”ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த நகைகளை பெற்றுக் கொண்டு ரூ.5 கோடியை வரைவோலையாக சொத்துக் குவிப்பு வழக்கு செலவிற்காக கர்நாடக அரசுக்கு கொடுக்க வேண்டும்” என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
உலக அரங்கில் இந்திய பங்குச்சந்தை படைத்த புதிய சாதனை!
மத அரசியலா? மனித அரசியலா? ஒரு கை பார்த்து விடுவோம்: உதயநிதி
jayalalitha jewels to TN govt