திருச்சியில் முதல்வரின் புகைப்படக் கண்காட்சியைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 30) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
“எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியினை நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
இன்றோடு நிறைவு பெறும் கண்காட்சியை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பார்த்தனர்.
இதன்பின் அமைச்சர்கள் நேரு, உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலினிடம் வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
வருமான வரி சோதனை நடத்தக் கூடிய பாஜக அரசுக்கும், மிசாவை கொண்டு வந்த காங்கிரஸ் அரசுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு, “ எந்த வித்தியாசமும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.
அப்படியானால், பாஜகவோடு கூட்டணி வைக்கப்போகிறோம் என்று மறைமுகமாகச் சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு,
“பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது நீங்கள், நாங்கள் கிடையாது” என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்துச் சொன்ன உதயநிதி ஸ்டாலின், 76ல் நடந்ததை பற்றி இப்போது வந்து பேசுகிறீர்கள் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
மேலும், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், உங்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறதே உண்மையா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின் யார் சொன்னது? யார் தகவல் கொடுத்தது என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த செய்தியாளர் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது எனச் சொல்ல, “நீங்க தான் அந்த சமூக வலைதளம்” என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார் உதயநிதி ஸ்டாலின்.
பிரியா