எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தொடர்ந்ததே எங்களால்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
பாமக குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தது தொடர்பாக பாலு இன்று(ஜனவரி 3) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்பதை நேற்றுதான் பார்த்தேன்.
புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே உரையாற்றும்போது தமிழ்நாட்டின் அரசியல் நிலவரங்களை எடுத்துச்சொன்னார்.
திமுக மீதுள்ள விமர்சனங்கள், அதிமுக பிளவுப்பட்டிருக்கக் கூடிய சூழலை எல்லாம் எடுத்துச்சொல்லி பாமகவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது, எனவே தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று சொன்னார்.
அதிமுக பிளவுப்பட்டிருக்கிறது என்பது அவர்களது உள்கட்சிப் பிரச்சினை என்றும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிமுக பிளவுப்பட்டிருக்கிறது என்பது சாதாரண குழந்தைக்குகூட தெரியும்.
இதைப்பற்றி கருத்து சொன்ன ஜெயக்குமார், பாமகவுக்கு வாய்ப்பு கொடுத்தோம், அன்புமணி எம்பி ஆவதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார். உடன்படிக்கையின்படி எம்.பி சீட் பாமகவுக்கு வழங்கப்படுகிறது.
அந்த இடத்தை யாருக்கு கொடுக்கவேண்டும் என்பதை எங்கள் கட்சிதான் முடிவு செய்கிறது. 1996ஆம் ஆண்டை ஜெயக்குமார் திரும்பி பார்க்கவேண்டும்.
அதிமுக பலவீனப்பட்டிருந்தபோது 1998ஆம் ஆண்டு ஜெயலலிதாவே நேரில்வந்து எங்களுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அதிமுகவுக்கு பல நேரங்களில் உயிரூட்டியது பாமகதான்.
எங்களால்தான் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார், எடப்பாடி முதல்வராக தொடர்வதற்கு நாங்கள்தான் காரணம் என ஒருபோதும் நாங்கள் சொல்லியதில்லை. ஜெயக்குமார் கவனத்துடன் பேச வேண்டும்.
ஜெயக்குமார், நுனிமரத்தில் அமர்ந்து கொண்டு, அடி மரத்தை வெட்டும் வேலை செய்கிறார். ஜெயக்குமார் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்கவேண்டும். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் நேரம், சூழல் இப்போது இல்லை” என்று பாலு தெரிவித்தார்.
கலை.ரா
பணமதிப்பழிப்பு நடவடிக்கை: தீர்ப்பை வரவேற்ற நிதி அமைச்சர்!
ரூ. 42,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை: வெள்ளி விலையும் உயர்வால் அதிர்ச்சி!