மோடி ஆவணப்படம்: மாணவர்கள் பற்றவைத்த நெருப்பு!

இங்கிலாந்து நாட்டின் பிபிசி ஊடகம் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து விசாரணை நடத்தி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது.

இந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தை தடுக்க அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போது பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

bbc documentary controversy

2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 790 முஸ்லீம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 233 பேர் காணாமல் போயினர் மற்றும் 2500 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கலவரத்திற்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்றும், முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், கலவரத்தின் போது முஸ்லீம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை செய்து யூடியுப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியது. மேலும், ஆவணப்படத்தின் லிங்குகளுடன் பகிரப்பட்ட 50 ட்வீட்களையும் நீக்கியது.

ஆவணப்படத்தின் லிங்குகள் மற்றும் காட்சிகள் வெளியிட்டால் அதனை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்கம் சார்பில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட மாணவர்கள் முடிவு செய்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் ஆவணப்படத்தை திரையிட்டால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் சீர்குலையும் என்று அனுமதி வழங்கவில்லை.

இருப்பினும் நேற்று இரவு 9 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் சங்க அலுவலகத்தில் ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் மொபைல் மற்றும் மடிக்கணினிகளில் ஆவணப்படத்தின் லிங்கை பகிர்ந்து ஒன்றாக அமர்ந்து பார்த்தனர்.

அப்போது மாணவர்களின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஜே.என்.யூ கல்லூரி வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவியது.

ஜேன்யுவில் நடந்த சம்பவம் குறித்து மாணவர் சங்க தலைவர் ஐஷே கோஷ் கூறும்போது, “நாங்கள் ஆவணப்படத்தை திரையிடுவதை நீங்கள் தடுக்கலாம். ஆனால் எங்கள் கைகளில் ஒளிரும் ஆயிரக்கணக்கான செல்போன்களை உங்களால் தடுக்க முடியாது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த அரசை நீங்கள் விமர்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் விமர்சனம் ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை ஜேஎன்யு நிர்வாகத்திற்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். நாங்கள் அவருடைய வார்த்தைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

bbc documentary controversy

கேரளாவில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கேரள காங்கிரஸ் கமிட்டியின் இளைஞரணி சார்பில் மாநிலம் முழுவதும் பிபிசி ஆவணப்படம் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட்டால் கலவரம் நிறைந்த மாநிலமாக மாறும். இதனால் ஆவணப்படம் திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் முதல்வர் பினராயி விஜயனிடம் வலியுறுத்தினார்.

மேலும், கேரளா பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த ஆவணப்படம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறு உருவாக்கம் செய்துள்ளது. எனவே கேரளாவில் ஆவணப்படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பிபிசி ஆவணப்படம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இம்ரான் ஹூசைன் பிபிசி ஆவணப்படம் குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பிய நிலையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தில் தாம் உடன்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

bbc documentary controversy

நேற்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெத் பிரஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் மோடி பிபிசி ஆவணப்படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, “நீங்கள் கேட்கும் ஆவணப்படம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்தியா, அமெரிக்கா இடையிலான அரசியல் பொருளாதார உறவுகள் குறித்து மட்டுமே எனக்கு தெரியும்.” என்று கூறினார்.

மாணவர்கள் பிபிசி ஆவணப்படம் திரையிடல் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து ஆவணப்படத்தை நீக்கியதால் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டால் மோடி ஆவணப்படம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

செல்வம்

அதிமுக குறித்து பாஜக சொல்வதற்கு ஒன்றுமில்லை : அண்ணாமலை பளீச்

வாத்திக்கு போட்டியாக வரும் அகிலன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts