தெலங்கானா இடைத்தேர்தல் : நள்ளிரவில் கைதான முக்கிய தலைவர்!

Published On:

| By Selvam

தெலங்கானா மாநிலம் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று (நவம்பர் 3) காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலையிலிருந்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா, பீகார், ஹரியானா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தெலங்கானா, முனுகோடு சட்டமன்ற தொகுதியில் 2.41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 298 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 105 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முனுகோடு சட்டமன்ற உறுப்பினர் ராஜ் கோபால் ரெட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜ் கோபால் ரெட்டி பாஜக சார்பில் மீண்டும் முனுகோடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற முனுகோடு சட்டமன்ற தொகுதியில், பாஜக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜக சார்பில் ராஜ் கோபால் ரெட்டி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் பிரபாகர் ரெட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வை ஸ்ரவந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதே வேளையில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராஜ் கோபால் ரெட்டிக்கு முனுகோடு தொகுதியில் செல்வாக்கு உள்ளதால், டிஆர்எஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், நேற்று இரவு முனுகோடு தொகுதியிலிருந்து வெளி மாவட்ட நபர்கள் மற்றும் டிஆர்ஆஸ் நிர்வாகிகளை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் தெலங்கானாவில் உச்சக்கட்ட அரசியல் பதற்றம் நீடிக்கிறது.

battle for munugode crucial bypoll for trs bjp

அதேசமயம் காலை முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 11.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

குஜராத் தேர்தல்: இன்று அறிவிப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில்… 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share