இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9
பார் கவுன்சில் தேர்தல் பிரச்னைகள் பற்றிப் பார்த்துவருகிறோம். ஒரு மாநில பார் கவுன்சிலின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள். அந்த ஐந்தாண்டுகள் முடிந்து மீண்டும் உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் நடைபெற வேண்டும், புதிய நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் பார் கவுன்சிலின் தேர்தல் நடைமுறை.
ஆனால், தமிழக பார் கவுன்சில் உட்பட இந்தியாவில் இருக்கும் மொத்தம் 19 பார் கவுன்சில்களில் பதவிக்காலம் முடிந்த பிறகும் சில பல ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இன்னும் இழுபறியாகவே இருக்கின்றன.
பார் கவுன்சிலில் தேர்தல் நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன என்று பேசாமல் இருந்துவிட முடியாது. ஏனெனில் வழக்கறிஞர்களின் அடிப்படை பிரச்னைகளில் இருந்து இன்று முக்கியமாக பேசப்படும் போலி வழக்கறிஞர்கள் பிரச்சினை வரை அனைத்துக்கும் தீர்வு காண வேண்டியது பார் கவுன்சில்கள்தான்.
ஆனால், பார் கவுன்சில்களின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு வலிமையாக அமைந்தால்தானே வழக்கறிஞர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்?
ஆனால், பார் கவுன்சில்களின் நிலை அப்படி இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை.
நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி தமிழக பார் கவுன்சிலின் பதவிக்காலம் முடிந்து ஒரு வருடம் எட்டு மாதங்கள் ஆகின்றன.
வழக்கறிஞர்கள் சட்டத்தின் 8(A) பிரிவின்படி மாநில பார் கவுன்சில் முடிந்து ஆறு மாதங்கள் அதிகப்படி காலமாக பதவியில் இருக்கலாம். அதன்பின் 8(A) கமிட்டி என்ற பெயரில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்தச் சட்டப் பிரிவின் பெயரிலேயே அந்த கமிட்டி அழைக்கப்படுகிறது.
அந்த கமிட்டியில் அந்த மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் தலைவராக இருப்பார். அவரைத் தவிர இன்னும் இரு வழக்கறிஞர்கள் கமிட்டிக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்கள் தமிழகத்தில் இருக்கக் கூடிய எந்த வழக்கறிஞராகவும் இருக்கலாம்.
ஆனால், அதன்படி அமைக்கப்பட்ட தமிழக பார் கவுன்சில் 8(A) கமிட்டியில் உறுப்பினர்கள் ஆனவர்கள் யார் தெரியுமா?
மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் விளக்குகிறார்…
பதவிக் காலம் முடிந்த பார் கவுன்சிலின் சேர்மனும், துணை சேர்மனும்தான் அந்த கமிட்டியின் இரு உறுப்பினர்கள் ஆனார்கள். அதாவது பார் கவுன்சிலில் சேர்மன், துணை சேர்மனாக இருந்துவிட்டு அதன் பதவிக் காலம் முடிந்தவுடன் சட்டப்படி அமைக்கப்படும் அந்த கமிட்டியிலும் அவர்களே உறுப்பினர்கள் ஆவது என்பது எதைக் காட்டுகிறது?
சட்டத்தின் சந்துபொந்துகளை வழக்கறிஞர் சங்கங்களைச் சேர்ந்தவர்களே குறுக்கு வழியில் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் தெரிகிறது.
ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக 2-5-17 அன்று முக்கியமான ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. ‘பார் கவுன்சில் தேர்தலில் நிற்க விரும்பினால், எந்தவிதமான கமிட்டியிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது’ என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல். ஆனால், பதவிகள் மீதிருந்த பற்றினால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் அறிவுறுத்தலையும் மதிக்கவில்லை.
அதற்குப் பிறகு அண்மையில் அன்னை மெடிக்கல் கல்லூரி வழக்கின்போது அட்வகேட் ஜெனரலிடத்திலும், நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் சுட்டிக்காட்டப்பட்டு, அதையும் மீறி பார் கவுன்சிலின் சேர்மனும், துணை சேர்மனுமே கமிட்டி உறுப்பினர்களாக இருப்பது தெரியப்படுத்தப்பட்டது.
அதன் பிறகுதான் புதிய அட்வகேட் ஜெனரலாக வந்த விஜய நாராயணன், தொடர்புடைய அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்.
“நீங்கள் பார் கவுன்சில் தேர்தலில் நிற்கப் போகிறீர்களா? அப்படி நிற்க விரும்பினால் உச்ச நீதிமன்ற வழிகாட்டும் நெறிமுறைகளின்படி கமிட்டி உறுப்பினராக இருக்கக் கூடாது. நீங்கள் எப்படி உறுப்பினராக இருக்கிறீர்கள்?” என்று கடுமையாக அட்வகேட் ஜெனரல் கேள்வி எழுப்பிய பிறகுதான் அந்தப் பதவிகளில் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் விட்டு விலகினார்கள்.
ஆக, அப்படியாவது பார் கவுன்சில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரியுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இதற்கு முன்பே ‘சர்ட்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ்’ என்ற சட்டத்தைப் பயன்படுத்தி பார் கவுன்சில் தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கான அத்தனை குறுக்கு வழிகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
சர்ட்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்ற சட்டம் பார் கவுன்சிலால் 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது பெரும்பாலான பார் கவுன்சில்களின் பதவிக் காலம் முடிந்து தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.
இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்ததன் மூலம் பார் கவுன்சிலின் அப்போதைய நிர்வாகிகள் தேர்தலை இழுத்தடித்து, குறுக்கு வழியில் தொடர்ந்து அப்பதவியில் இருக்க முயல்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
பார் கவுன்சில் என்பதே வழக்கறிஞர்களின் தொழில் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதில் ஒரு நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிந்தால், தேர்தல் நடந்து அடுத்த நிர்வாகம் பதவியேற்கப் போகிறது. முந்தைய நிர்வாகம் நன்மைகள் புரிந்திருந்தால் தேர்தலில் மீண்டும் அவர்களே ஜெயிக்கப் போகிறார்கள்.
ஆனால், அந்த நம்பிக்கை இல்லாமல்தான் பல பல குறுக்கு வழிகளை கையாண்டு பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலை விரும்பாமல் கொல்லைப்புறமான நீட்டிப்புகளைச் செயற்கையாக உருவாக்கிக்கொள்கிறார்கள். இதற்காகவே அவர்கள், ‘சர்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ்’ என்ற முறையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சர்டிபிகேட் ஆஃப் பிராக்டிஸ் என்றால் என்ன?
(விளக்கு ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8