கறுப்பு கவுன் தேவையா? மினி தொடர் – 8

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு என்றால் என்ன என்பதன் ரகசியத்தை உடைத்துவிட்டீர்களே என்று வாசகர்கள் தரப்பிடம் இருந்து நமக்கு ஆச்சர்ய அலைபேசி அழைப்புகள்.

எல்.கே.ஜி, யு.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் தேர்வு நடத்தும்போது புத்தகத்தையும் வைத்துக்கொள்ளுமாறு சில பள்ளிகளில் சொல்லுவார்கள். அப்போதுதான் குழந்தை பரீட்சையைக் கண்டு பயப்படாமல் கேள்விக்கான பதிலைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை. இதுவும் இப்போது சில பள்ளிகளில் கிடையாது. ஒன்றாம் வகுப்புத் தேர்வுக்குக்கூட வினாத்தாள் மட்டும்தான் கொடுக்கிறார்கள்.

ஆனால், வழக்கறிஞர் தகுதித் தேர்வு என்ற தேர்வு ஓப்பன் புக் ஃபார்மேட் முறையில் நடக்கும் என்பதும்… கேள்வித் தாளோடு விடைகள் அடங்கிய புத்தகங்களும் கொடுக்கப்படும் என்பதும் வழக்கறிஞர்களைத் தாண்டி பொது சமூகத்துக்குப் பெரிதாகத் தெரியாத ஒரு விஷயம்.

‘இருட்டறையில் ஒரு விளக்கு’என்ற தொடரில் மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் வாயிலாக இந்த விஷயத்தில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

இப்படி விடைகளை அடங்கிய புத்தகங்களைக் கொடுத்துமே நான்காயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்றால்… இன்னும் இறுக்கமான தகுதித் தேர்வுகளை நடத்தினால் இந்த வழக்கறிஞர்கள் என்ன ஆவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் தகுதித் தேர்வைத் தாண்டாத அந்த நான்காயிரம் வழக்கறிஞர்களும் தங்களை இன்னும் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு… கறுப்பு கவுனை மாட்டிக்கொண்டுதான் புழங்குகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி. கறுப்பு கவுன் என்பது வழக்கறிஞர்களின் அடையாளமாக இருக்கிறதே என்ன காரணம்?

நாம் ஏற்கனவே பார்த்த இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன் 49ன்(1)வது பிரிவில் நான்காவது பகுதியில் இந்த கறுப்பு கவுன் பற்றி தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், ஆணையங்கள் ஆகியவற்றில் வாதாடும் வழக்கறிஞர்கள் சீரான, ஒரே மாதிரி சித்திரிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டும்.

கறுப்புப் பொத்தான்களைக்கொண்ட கறுப்பு கோட், நீண்ட கறுப்பு நிற (கவுன்) ஷெர்வானி அணியலாம் அல்லது திறந்த நிலையில் இருக்கும் கறுப்பு கோட், வெள்ளை நிற காலர்கள் கொண்ட சட்டை மற்றும் கறுப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறம் கொண்ட நீண்ட பேண்ட் அல்லது வேட்டி இவற்றை வழக்கறிஞர்கள் உடையாக அணியலாம் என்று வரையறுத்திருக்கிறது இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961.

இது சிலருக்கு வேடிக்கையாகத் தெரியலாம். நீதிபதி சந்துரு போன்றவர்கள் கூட, “ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டங்கள், நீதிமன்றங்களுடன் நமக்குக் கிடைத்த கொசுறுதான் இந்த கறுப்பு கோட்டும் கறுப்பு அங்கியும். 1961ஆம் வருடம் வழக்கறிஞர்கள் சட்டம் (Advocates Act, 1961) நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. அதில் இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் (Bar Council of India) என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. வழக்கறிஞர்களுக்கான கல்வித் தகுதி, நெறிமுறைகள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் போன்றவற்றை உருவாக்க, அந்த அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அவர்கள் ஒரு புதிய சீருடையை (Dress code), நமது நாட்டின் கலாசாரம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உருவாக்கத் தவறி விட்டார்கள். பழைய சம்பிரதாயத்தை மாற்ற முன்வரவில்லை. ஆனால், பின்னர் ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் கறுப்பு அங்கி அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மற்ற கீழ்க் கோர்ட்டுகளில் தேவை இல்லை என்றாலும் வழக்கறிஞர்கள் அந்த அங்கி அணிவதை விடத் தயார் இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால்… நாட்டில் நீதிக்காகப் போராடும் வழக்கறிஞர்கள் அனைவரும் தங்களை இவ்வாறு ஓர் குறிப்பிட்ட உடையின் மூலம் அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது தனித் தன்மையை வெளிப்படுத்துவதோடு, இத்தகைய உடை அமைப்பு தங்களுக்குத் தூய்மையான ஓர் உணர்வைக் கொடுப்பதாக பல வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Bar Council of India and Lawyers Mini Series 8

எவ்வாறு பள்ளிச் சீருடையை அணியும்போது ஒரு மாணவனுக்கு பள்ளியின் கட்டுப்பாடுகள், ஒழுக்கங்கள் பற்றிய ஓர் எச்சரிக்கை உணர்வு தோன்றுகிறதோ… ஒரு காவலர் தனது சீருடையின் மூலம் எப்படி சமூகம் பற்றிய தனது விறைப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறாரோ… அதேபோல இந்தியா முழுதும் வழக்கறிஞர்கள் நீதிக்காக போராடும் களத்தில் தங்களது தூய்மையான போராட்ட உணர்வை இந்தச் சீருடை மேம்படுத்துகிறது என்று நம்புகிறார்கள்.

இது ஆங்கிலேயர் கால பழக்கம், இதை மாற்ற வேண்டும் என்றுகூட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளுக்கு கூட வழக்கறிஞர்கள் கறுப்பு கோட் அணிந்து வாதாட வர வேண்டியிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

இது இந்த உடை பற்றிய ஒரு மேம்போக்கான பார்வை.

இன்னொரு பக்கம் ஆழமாக நாம் சிந்தித்தோம் என்றால்… வழக்கறிஞர்கள் என்ற நீதிக்காக போராடும் பெருந்திரளான கூட்டத்துக்கு ஒரே மாதிரியான உடை இருக்க வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டிருக்கிறபோது உடையைத் தாண்டிய உள்ளார்ந்த சிந்தனைகளுக்கு என்ன மாதிரியான வரையறைகள் வகுக்கப்பட்டிருக்கும்?

வெளித் தோற்றத்தை நிர்ணயிக்கும் உடைக்கே இத்தனை கட்டுப்பாடுகள் என்னும்போது வழக்கறிஞர்கள் தங்களது அறிவு, சிந்தனை, சட்டக் கல்வி கற்பது ஆகியவற்றுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா?

கறுப்பு கவுன் என்பது மரியாதையைக் கொடுக்கக் கூடியது. சமூக அந்தஸ்தை வழங்கக் கூடியது. இதை ஒப்புக்கொள்ளும் அந்த, ‘நான்காயிரம்’வழக்கறிஞர்களும் கறுப்பு கவுனை அணிவதில் காட்டும் அக்கறையை, சட்டக் கல்வியை ஒழுங்காகக் கற்பதிலும் காட்டியிருக்க வேண்டுமே?

வழக்கறிஞர்களும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். அதுவும் சட்டம் அறிந்தவர்கள் என்பதால் மற்றவர்களைவிட சட்டத்தை மதிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் வழக்கறிஞர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. சிவில் சமூகம் செய்யக் கூடிய தவறுகளை வழக்கறிஞர்களும் செய்துவிடக் கூடாது.

சட்ட விரோத சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த தமிழக அரசோ, நீதிமன்றங்களோ, பார் கவுன்சில்களோ என்னதான் நடவடிக்கை எடுத்திருக்கின்றன?

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel