இருட்டறையில் ஒரு விளக்கு – 7
தமிழகத்தின் வழக்கறிஞர் உலகம் என்ற வயலில் களைகளை விதைத்து அவற்றைக் கடுமையாக வளர்த்தும்விட்ட அண்டை மாநிலச் சட்ட விரோத சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த, ஒடுக்க, கட்டுப்படுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது?
**இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமா? உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? மாநில பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?**
இப்படியான கேள்விகளை மூத்த வழக்கறிஞர் வேல்முருகனிடம் முன் வைத்தோம். இதற்கு அவர் அளித்துள்ள பதில்களைக் காண்போம்.
இந்த முறையற்ற சட்டக் கல்லூரிகள் மூலம் அடிப்படை நேர்மையும், அடிப்படை சட்ட அறிவும் இல்லாத அடையாள வழக்கறிஞர்களே உருவாக்கப்படுகின்றனர். அவர்களை வழக்கு + அறிஞர் என்று அழைப்பதற்கே நெருடலாகத்தான் இருக்கிறது.
அப்படி முறையற்ற சட்டக் கல்வி பெற்ற அந்த அடையாள வழக்கறிஞர்கள், நீதிக்காகப் போராடும் ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமுதாயத்தின் மாண்பைப் பெரிதும் குறைக்கிறார்கள் என்று சொல்லித்தான் நீதிபதி கிருபாகரன் அவர்கள் 25 கேள்விகளை முன்வைத்தார்.
ஒரு சராசரி வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தொடர்ந்து மூன்று வருடங்கள் முறையாகப் பயிற்சி செய்தால் இந்த கோர்ட் சிஸ்டம், அவருக்கான பொருளாதார வளர்ச்சியையும் சட்ட அறிவையும் வழங்கி சிறந்த மனிதராகவும், சிறந்த வழக்கறிஞராகவும் அவரை உருவாக்குகிறது. ஆனால், இந்த அடையாள வழக்கறிஞர்களின் சிஸ்டமே வேறு. வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் பிரச்னைக்குரியவர்களை அணுகி பேரம் பேசுவது, பணம் பறிப்பது போன்ற பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதால்தான், வழக்கறிஞர் சமுதாயத்தின் மீது ஒரு தவறான முத்திரை குத்தப்படுகிறது.
சரி… இவற்றுக்கெல்லாம் தோற்றுவாயாக இருக்கக் கூடிய அண்டை மாநில மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளை முறைப்படுத்த யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற கேள்விக்கு, சட்டத்தின் பதிலைப் பார்ப்போம்.
பக்கத்தில் இருக்கும் மாநிலங்களில் இருக்கும் முறையற்ற சட்டக் கல்லூரிகள் மீது நம்முடைய மாநில அரசாங்கமோ, நமது மாநில பார் கவுன்சிலோ கட்டுப்பாடு செலுத்த இயலாது. ஆனால், இந்திய பார் கவுன்சில் இதையெல்லாம் ஒழுங்குபடுத்தவும், வரைமுறைக்குள் கொண்டு வரவும் முடியும்.
நீதிபதி கிருபாகரன் அவர்கள் அண்மையில் ஒரு வழக்கில் வழக்கறிஞர்கள் பற்றி 25 கேள்விகள் கேட்டாரே… அதையொட்டி அதற்கான முயற்சியை இந்திய பார் கவுன்சில்தான் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இதுபோன்ற சட்ட விரோதக் கல்லூரிகளில் பார் கவுன்சில் உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் கல்லூரிகளும் உள்ளதாகப் புகார்கள் வருகின்றன. இங்கிருந்து கூட்டம் கூட்டமாக சென்று அந்த கல்லூரிகளில் சேர்ந்து முறையான சட்டக் கல்வி படிக்காமலேயே, வகுப்புகளுக்கு செல்லாமலேயே, தேர்வு எழுதாமலேயே சட்டத்தில் பட்டங்களைப் பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது.
இதையெல்லாம் தீவிரமாக விசாரித்து வழக்கறிஞர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை பார் கவுன்சிலுக்கு இருக்கிறது.
அதையொட்டி இப்போது சமீபமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுபோல தெரிகிறது. இன்னும் சிறிது காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இந்தப் போலி சட்டக் கல்லூரிகளின் கொட்டம் ஒடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நீதியின்பால் நம்பிக்கைகொண்ட, நேர்மையான சட்டத் தொழிலை மேற்கொள்ள விரும்பும் வழக்கறிஞர்களுடைய விருப்பம். அதுமட்டுமல்ல தினந்தோறும் நீதிமன்றங்களை பிரச்னைகளோடும் கண்ணீரோடும் நாடும் பொதுமக்களின் விருப்பமும் அதுவே.
இதை அகில இந்திய பார் கவுன்சில்தான் தனது சட்டப்படியான நடவடிக்கைகளால் நிறைவேற்றி நிலைநாட்ட வேண்டும்.
இப்படி பார் கவுன்சிலுக்கு முக்கிய கடமைகள் மலை போல் குவிந்திருக்க… பார் கவுன்சில் தேர்தலே பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால்தான் பார் கவுன்சில் தனது முழுமையான பணிகளை முழு வீச்சாகச் செய்ய முடியாமல் தவிக்கிறது என்றொரு கருத்தும் இருக்கிறது என்கிறார் மூத்த வழக்கறிஞர் வேல்முருகன்.
**பார் கவுன்சில் தேர்தலில் என்ன பிரச்னை?**
வழக்கறிஞர்களின் சட்டப்படி மாநில பார் கவுன்சிலின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள். அதேபோல அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். இன்றைக்கு இந்தியா முழுதும் 19 பார் கவுன்சில்கள் இருக்கின்றன. இவற்றில் 17 பார் கவுன்சில்களின் பதவிக் காலமான ஐந்து ஆண்டு காலம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் பார் கவுன்சில்களின் பதவிக் காலம் முடிந்து சராசரியாக மூன்று ஆண்டு காலம் ஆகிவிட்டன.
தமிழக பார் கவுன்சிலின் பதவிக்காலம் முடிந்து ஒரு வருடம் எட்டு மாதங்கள் ஆகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து அகில இந்திய பார் கவுன்சிலின் உறுப்பினரான மன்னன் மிஸ்ராவின் பதவிக் காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
வழக்கறிஞர்கள் சட்டத்தின் 8(A) பிரிவின்படி மாநில பார் கவுன்சில் முடிந்து ஆறு மாதங்கள்தான் அதிகப்படி காலமாக பதவியில் இருக்கலாம். அதன்பின் 8(A) கமிட்டி என்ற பெயரில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்தச் சட்டப் பிரிவின் பெயரிலேயே அந்த கமிட்டி அழைக்கப்படுகிறது. அந்த கமிட்டியில் அந்த மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் தலைவராக இருப்பார். அவரைத் தவிர இன்னும் இரு வழக்கறிஞர்கள் கமிட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த வழக்கறிஞராகவும் இருக்கலாம்.
இந்த வகையில் தமிழக பார் கவுன்சிலில் ஏற்கெனவே அமைந்த 8(A) கமிட்டியில் உறுப்பினர்களான அந்த இரு வழக்கறிஞர்கள் யார் தெரியுமா?
(விளக்கு ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6