தகுதித் தேர்வும் வழக்கறிஞர்கள் தரமும்! மினி தொடர் – 6

அரசியல் சிறப்புக் கட்டுரை

இருட்டறையில் ஒரு விளக்கு! – 6

யார் தவறு செய்தாலும் அது முதல்வராக இருக்கட்டும், பிரதமராக இருக்கட்டும், தலைமை நீதிபதியாக இருக்கட்டும்… யார் தவறு செய்திருந்தாலும் அதை தட்டிக்கேட்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டும்தான். சமுதாயத்தில் இந்தத் தட்டிக்கேட்கும் செயலை பல பேர் செய்தாலும் சட்ட ரீதியாக, சட்டத்துக்கு உட்பட்டு அணுகக்கூடிய பார்வை வழக்கறிஞர்களுக்குத்தான் இருக்கிறது.

அதனால்தான், வழக்கறிஞர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் சமூகத்தில் இருந்து வந்தது. ஆனால், கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தான் வழக்கறிஞர்களின் ‘மிஸ்டர் போல்டு’ மற்றும், ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறத் தொடங்கியிருக்கிறது.

இதற்குக் காரணம், யார் வழக்கறிஞர்கள் ஆகத் தகுதியற்றவர்களோ அவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட்டதும், அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்த அந்தக் கல்லூரிகளும்தான்.

இது வெறும் கல்விப் பிரச்னை மட்டுமல்ல. சட்டக் கல்வியில் நிலவும் இந்த இருட்டால் சமூகமே இருட்டில் தள்ளப்பட்டு வருகிறது. இதன் முதல் பாதிப்பு பார் கவுன்சிலில் தெரிகிறது.

ஆம்… சட்டக் கல்வி, சட்டக் கல்வி நிறுவனங்கள், வழக்கறிஞர்களின் நலன் ஆகியவற்றுக்காகச் செயல்படும் பழம்பெரும் அமைப்பான பார் கவுன்சிலில்… ரெடிமேட் சட்டப் படிப்பு முடித்தவர்களும் உறுப்பினராகி பதவியும் பெறுவதுதான் கொடுமை. இதன் விளைவு பல திசைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதைக் கருத்தில்கொண்டுதான் வழக்கறிஞர் தகுதித் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது என்கிறார் மூத்த வழக்கறிஞர் வேல்முருகன். அவரிடம் உரையாடலைத் தொடரலாம்.

தகுதித்தேர்வு முறையா?

2010ஆம் ஆண்டுக்கு பின் சட்டம் படித்து வழக்கறிஞர்களாகப் பதிவு செய்பவர்கள் கண்டிப்பாகத் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சில், 2009இல் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்தியா முழுவதும், அகில இந்திய பார் கவுன்சில், வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில் பெரும்பாலும் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியவர்களே பயில்கின்றனர். இவர்கள், கடினமாக உழைத்து தேர்ச்சி பெறுகின்றனர். எனவே, மீண்டும் புதிய தேர்வை நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்த வேண்டுமென்றால், பல்கலைக்கழகத் தேர்வுகளுடன் சேர்ந்து நடத்த வேண்டும் என கோரி, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த தகுதித் தேர்வின் நோக்கம் சட்ட விரோத சட்டக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வழக்கறிஞர்கள் ஆகிவிட்ட அந்த ‘ரெடிமேட்’களைக் குறிவைத்துதான்.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் வழக்கறிஞர்களாகப் பதிவு பெற்றவர்கள் 20 ஆயிரம் பேர். இவர்கள் பதிவு செய்யப்பட்ட இரண்டு வருடங்களுக்குள் அகில இந்திய பார் கவுன்சிலால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்வு பெற வேண்டும். அந்தத் தேர்வில் அவர்கள் தோல்வியுற்றால் சட்ட ரீதியாக வழக்கறிஞர் தொழில் செய்ய முடியாது, இப்போது எனக்குக் கிடைத்த தகவலின்படி சுமார் நாலாயிரம் பேர் அந்த தேர்வில் வெற்றி பெறவில்லை. அதன்படி அவர்கள் வழக்கறிஞர்களே இல்லை. ஆனாலும் அவர்கள் இன்னும் தங்களை வழக்கறிஞர்களாகவே சொல்லிக்கொள்கிறார்கள்.

இந்தத் தகுதித்தேர்வு என்பது உண்மையாக படித்துப் பட்டம்பெற்றவர்களுக்கும் ஒரு பிரச்னைதானே…

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் வேல் முருகன் வாய்விட்டுச் சிரித்தார்.

ஏன்?

வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு என்பது கடினமான பாடத் திட்டங்கள் கொண்ட கெடுபிடித் தேர்வு அல்ல. சட்டக் கல்லூரித் தேர்வுகளுக்குத் தயார் செய்திருப்பார்கள் அல்லவா… அதையொட்டிய ஒரு தேர்வுதான் இது. அதாவது அடிப்படை சட்டப் பிரிவுகளைப் பற்றிய கேள்வித் தாள் கொடுக்கப்பட்டு, அதற்குரிய விடைகள் அடங்கிய புத்தகங்களும் தகுதித்தேர்வு எழுதும் ‘வழக்கறிஞர்களுக்கு’ வழங்கப்படும். அவர்கள் அந்த அடிப்படை சட்டப் பிரிவுகள் எது என்பதை தேடி அதை சரியாகக் குறிப்பிட வேண்டும்.

அதாவது வினாத் தாளும் கொடுத்து விடைகள் இருக்கும் புத்தகங்களும் கொடுத்துவிடுவார்கள். இப்படி ஓர் எளிமையான ஒரு தேர்வு முறையிலேயே தமிழகத்தில் நாலாயிரம் பேர் வெற்றி பெறத் தவறியிருக்கிறார்கள் என்றால்… அவர்கள் சட்டக் கல்லூரியில் பயின்றதாகச் சொல்லப்படும் சட்டக் கல்வி பற்றிய மிகப் பெரிய கேள்வி எழுகிறதா இல்லையா?

அதாவது வழக்கறிஞர்கள் பட்டம் பெற்ற நாலாயிரம் பேருக்கு அடிப்படை சட்டப் பிரிவுகள் பற்றிய தேடலே தெரியவில்லை என்றால், அதுவும் சட்டப் புத்தகத்தை கையில் கொடுத்த பிறகும் அது தெரியவில்லை என்றால் எப்பேர்ப்பட்ட அறிவாளிகளை அண்டை மாநில சட்டக் கல்லூரிகள் உருவாகியிருக்கிறது என்பதை உணர முடியும்.

இதற்கான தீர்வு?

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

Bar Council of India and Lawyers Mini Series 6

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *