இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர்- 5
தனியார் சட்டக் கல்லூரிகள் புற்றீசல்கள் என உற்பத்தி செய்யும் ரெடிமேட் வழக்கறிஞர்கள்தான், தமிழகத்தில் வழக்கறிஞர் தொழிலின் மாண்பு குறைந்துவருவதற்கு மிக முக்கியமான காரணம் என்பதை நீதியரசர் கிருபாகரன் அவர்கள் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அவர்களை வழக்கறிஞர்கள் என்று சொல்லி உண்மையான, திறமையான, நீதிமன்றத்தில் நெஞ்சு நிமிர்த்தி வாதாடும் வழக்கறிஞர்களை உள்ளம் புண்படுத்திட வேண்டாம் நாம். எனவே அவர்களை, ‘அடையாள அட்டை வழக்கறிஞர்கள்’ என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
அந்த வகையில் நீதியரசர் கிருபாகரனின் கருத்துப்படி தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றால் அதன் முதல்படியாக அண்டை மாநிலங்களில் இயங்கும் ஏனோதானோ சட்டக் கல்லூரிகளை எல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டும்.
அண்டை மாநில சட்டக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும், முறையான சட்டக் கல்வியின் வாயிலாக வழக்கறிஞர்கள் இந்த சமூகத்துக்குச் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பதே நீதியரசர் கிருபாகரனின் கருத்து.
குறிப்பாக அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளில் மிக முக்கியமானது தனியார் சட்டக் கல்லூரிகளில் பயோ மெட்ரிக் முறையில் வருகைபதிவு ஆவணங்களை நிர்வகிக்க வேண்டும் என்பது. இது மிக முக்கியமான பிரச்னை.
ஏனெனில் சட்டக் கல்வி என்பது மிகச் சிறந்த பேராசிரியர்களாலும், சட்ட வல்லுநர்களாலும் சட்ட மாணவர்களுக்குக் கையளிக்கப்பட வேண்டிய கொடை. முறையாக வகுப்புகளுக்குச் சென்று திறமையான சட்டப் பேராசிரியர்களிடமிருந்து தருவிக்கப்பட வேண்டியது சட்டக் கல்வி. ஆனால், அண்டை மாநில சட்டக் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இந்த நிலை இல்லை.
தேர்வு எழுத மட்டுமே வந்தால் போதும். இடையில் சில நாள்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வரலாம். அப்படி வராவிட்டால் அதற்கும் சேர்த்து பணம் கட்டினால் போதும். அட்டெண்டென்ஸ் அவர்களாகவே போட்டுக் கொள்வார்கள் என்றெல்லாம்… கல்லா பெட்டியை மட்டுமே வைத்துக் கொண்டு கன ஜோராகச் செயல்பட்டு வருகின்றன பல சட்டக் கல்லூரிகள். இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் ‘அடையாள அட்டை வழக்கறிஞர்கள்’ பின் எப்படி இருப்பார்கள்?
2000ஆவது ஆண்டில் இருந்துதான் இந்த திடீர் வழக்கறிஞர்களின் என்ட்ரி அதிகமாகியிருக்கிறது. அதற்கு முன் நமது ஆவணங்களின்படி பார்த்தால் தமிழகத்தில் வருடத்துக்கு அதிகபட்சமாக 1,500 வழக்கறிஞர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். இந்த எண்ணிக்கை கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் மெல்ல மெல்ல அதிகரித்து வருடத்துக்கு ஆறாயிரம் வழக்கறிஞர்களுக்கு மேல் என்ரோல்மெண்ட் செய்யப்படுகிறார்கள் என்ற நிலைக்கு வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்திலுள்ள சட்டக் கல்லூரிகளிலிருந்து மூவாயிரம் வழக்கறிஞர்கள்தான் ஒரு வருடத்துக்குப் பதிவு செய்யப்பட்டுகிறார்கள். மீதி மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வெளி மாநில சட்டக் கல்லூரிகளில் இருந்துதான் வருகிறார்கள். அதாவது, பாதிக்கு மேல், சுமார் அறுபது சதவிகித வழக்கறிஞர்கள் வெளிமாநில சட்டக் கல்லூரிகளில் முறையற்ற வகையில் பயின்றவர்களாக இருக்கிறார்கள்.
கொடுமையிலும் கொடுமையாக அந்தச் சட்ட விரோத சட்டக் கல்லூரிகளை நடத்துவதே பார் கவுன்சில் தொடர்புடைய சிலர்தான் என்று தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் சொல்லும் பதில்தான் என்ன?
நாம் ஏற்கனவே, ‘இருட்டறையில் ஒரு விளக்கு’ என்ற இந்த விழிப்புணர்வுத் தொடரின் முதல் பாகத்திலேயே முக்கியமான ஒரு விஷயத்தைப் பார்த்தோம்.
வழக்கறிஞர்களைப் பதிவு செய்வது, வழக்கறிஞர்களுக்கான சட்டக் கல்வியை ஒழுங்குபடுத்துவது, வழக்கறிஞர் தொழிலை ஒழுங்குபடுத்தக் கூடிய, முறைப்படுத்துவது போன்ற பணிகள்தான் பார் கவுன்சிலின் முக்கியமான பணிகள். இந்த நான்குமே வழக்கறிஞர் சட்டம் 1961இன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. வழக்கறிஞர்கள் சட்டத்தின் 7ஆவது பிரிவில்தான் பார் கவுன்சிலின் பணிகளை வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதில்தான் வழக்கறிஞர்களுக்கான சட்டக் கல்வி பற்றி கூறப்பட்டிருக்கிறது.
இதன்படி இந்தியா முழுவதும் இருக்கும் சட்டக் கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தக் கூடிய அமைப்பாக அகில இந்திய பார் கவுன்சில் இருக்கிறது. பார் கவுன்சிலின் அங்கீகாரமோ, அனுமதியோ இல்லாமல் இந்தியாவில் எங்கும் சட்டக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க முடியாது. அவ்வாறு தொடங்கினால் அதில் சட்டம் பயில்பவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய முடியாது.
ஆக, எந்த பார் கவுன்சில் சட்டக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டுமோ, ஒழுங்குபடுத்த வேண்டுமோ அந்த பார் கவுன்சிலில் இருக்கும் சிலர் மீதே இப்படிப்பட்ட சுட்டு விரல்கள் நீட்டப்படுகின்றன என்பதுதான் வேதனையானது. இந்த புகார்களின் மீது தீவிரமான ஒரு புலனாய்வு செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை.
இதற்கு முகாந்திரமாக முக்கியமான ஒரு விவரம் நம் கையில் இருக்கிறது.
2010 ஆண்டு சோலிசிட்டர் ஜெனரலாக இருந்த மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் அவர்கள் அகில இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.
அவர் 2010இல் என்ன சொன்னார் என்றால்… ‘இந்திய அளவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் முறையாக நடத்தப்படுவதில்லை. அவற்றில் முறையான சட்டக் கல்வி வழங்கப்படுவதில்லை. அதனால் சுமார் ஆயிரம் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம்’ என்று ஓர் அறிக்கையே கொடுத்திருக்கிறார்.
ஆனால், அவருக்குப் பின்வந்த அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகளோ, முக்கிய உறுப்பினர்களோ கோபால் சுப்பிரமணியம் அவர்களின் இந்தக் கருத்துக்குப் போதிய முக்கியத்துவமே அளிக்கவில்லை. தங்களுக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயம் போலவே இதை தள்ளி வைத்துவிட்டார்களே ஏன்? அப்படியென்றால், முறைகேடான சட்ட விரோதமான சட்டக் கல்லூரிகளுக்கும் சிற்சில பார் கவுன்சில் உறுப்பினர்களுக்குமே தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகத்துக்கு சத்து சேர்க்கப்படுகிறதே?
வழக்கறிஞர்களுக்கு இருக்கக்கூடிய உயரிய மரியாதையைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து பார் கவுன்சில் தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன் என்கிறார் மூத்த வழக்கறிஞர் வேல் முருகன்.
வேலியே பயிரை மேய்வது என்பது பழைய உவமை. வேலியே களையைப் பயிரிடுவதுதான் சட்டக் கல்லூரிகள் விஷயத்தில் நடக்கும் கசப்பான உண்மை.
(விளக்கு ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4