நீதியரசரின் நெருப்புக் கேள்விகள்! மினி தொடர் – 4

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

தனியார் சட்டக் கல்லூரிகள் அண்டை மாநிலங்களில் எவ்வித உள்கட்டமைப்பும், கல்விக் கட்டமைப்பும் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக திடீரென பெருகி வருகின்றன. அந்தத் தனியார் சட்டக் கல்லூரிகளில் போய், சட்டப் பட்டம் வாங்கி வந்து இங்கே வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இதுதான் தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தரம் தாழ்வதற்கான முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.

உடனே சட்டக் கல்வி பரவலாவதை எதிர்க்கிறீர்களா என்று சில அறிவுஜீவித்தனமான கேள்விகள் வருகின்றன. யாரும் சட்டக் கல்வி கற்கக் கூடாது என்பதல்ல நோக்கம். யாராக இருந்தாலும் முறையாக சட்டக் கல்வி பயின்று வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தால் அதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் முறையற்ற வகையில், அந்த தனியார் சட்டக் கல்லூரிகளுக்கே போகாமல் இங்கேயே இருந்துகொண்டு பணம்கொடுத்து சட்டத்தில் பட்டங்கள் வாங்கி வந்தது எவ்வளவு பேர் என்று கண்கூடாக நீதித்துறைக்கும் வழக்கறிஞர் உலகத்துக்கும் தெரியும்.

**சரி… அப்படியென்றால் இந்த தனியார் சட்டக் கல்லூரிகளிடம் இருந்து போலியான முறையில் பட்டம் வாங்கி வந்து தமிழகத்தில் வழக்கறிஞர்களாகப் பதிவு பெற்றவர்கள்மீது நீதிமன்றங்கள்கூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லையா?** என்ற கேள்விக்கு மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் தனது பதிலில், நீதியரசர் கிருபாகரனைச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த விவகாரத்தில் நீதியரசர் கிருபாகரன் 2013இல் இருந்து தொடர்ந்து தனது கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். அனந்த முருகன் என்ற வழக்கில்கூட இதுபற்றி பதிவு செய்தார். இதுபோன்ற போலியான சட்டக் கல்லூரிகள் சமூக ஒழுங்கை கெடுத்துவிடும் என்பதில் நீதியரசர் கிருபாகரன் உறுதியாக இருக்கிறார்.

அந்த அடிப்படையில் அண்மையில் ஒரு சம்பவத்தில், வழக்கறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக, மூத்த வழக்கறிஞர்கள் சிராஜுதீன், சிங்காரவேலன் ஆகியோர் நீதியரசர் கிருபாகரன் கவனத்துக்குக்கொண்டு சென்றனர்.

அப்போது நீதியரசர் கிருபாகரன் சட்டக் கல்வியை முறைப்படுத்துவது தொடர்பாகவும், வழக்கறிஞர்களின் நடவடிக்கைகளுக்கு வரம்பு தொடர்பாகவும் 25 கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு பார் கவுன்சில் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

நீதியரசர் கிருபாகரனின் நெருப்புக் கேள்விகளே இன்றைய வழக்கறிஞர் உலகத்தின் நிறம் எப்படி இருக்கிறது என்பதற்கு நிதர்சனமான சாட்சியாக நிற்கிறது.

நீதியரசரின் கேள்விகளில் சிலவற்றை இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது அவசியம்.

* போலீஸ், ரவுடிகளுடன் சேர்ந்து, வழக்கறிஞர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரா?

* வழக்கறிஞர்கள் தொடர்புடைய, கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?

* சட்டக் கல்லூரி மாணவர்களையும், கட்டப் பஞ்சாயத்து நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது, பார் கவுன்சில் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியுமா?

* வழக்கறிஞர்களுக்கு எதிராக புகார்கள் அளித்தால், அதை பதிவு செய்வதில்லையா; புகாரில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கும்படி வற்புறுத்தப்படுகின்றனரா?

* வழக்கறிஞர்கள் என கூறிக்கொள்பவர்கள், உண்மையில் வழக்கறிஞர்கள் தானா; அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய போலீஸார் பயப்படுவது ஏன்?

* தமிழகத்துக்கு வெளியில் இருந்து, சட்டக் கல்லூரிகளில் பட்டங்களை வாங்கிகொண்டு, கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு தேடுவது பற்றி போலீஸுக்கும், பார் கவுன்சிலுக்கும் தெரியுமா?

* இந்தியாவில், 175 சட்டக் கல்லூரிகள் போதுமானது என கூறினாலும், எந்த அடிப்படையில், 800 எண்ணிக்கையில் இருந்த சட்டக் கல்லூரிகள் 1,200 ஆக உயர்த்த, பார் கவுன்சில் அனுமதி வழங்கியது; மேற்கொண்டு சட்டக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க, பார் கவுன்சிலுக்கு ஏன் தடை விதிக்க கூடாது?

* பத்தாண்டுகளில், சட்டக் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்; எத்தனை பேர், பட்டம் பெற்றனர்; எத்தனை பேர், வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துள்ளனர்?

* போலீஸாரும், வழக்கறிஞர்கள் என கூறிக்கொள்பவர்களும் சேர்ந்து, சொத்து பிரச்னைகளில் தலையிடுவதால், அதுகுறித்து வரும் புகார்களை விசாரிக்க, மாநில அரசு ஏன் ஒரு குழுவை நியமிக்கக் கூடாது?

* சட்டக் கல்லூரிகளில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், ‘பயோ மெட்ரிக்’ முறையை ஏன் கொண்டு வரக் கூடாது; வகுப்புகள் நடத்தாமல், உள்கட்டமைப்பு வசதியில்லாமல், எத்தனை கல்லூரிகள், பட்டங்களை விற்கின்றன?

* சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு, ப்ளஸ் 2 படிப்பில் குறைந்தபட்சம், 75 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என பார் கவுன்சில் ஏன் வரையறை செய்யக் கூடாது?

* வழக்கறிஞர்களின் தேவை பற்றி, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து விவரங்களைப் பெற்று, அதன்பின், புதிய சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க, பார் கவுன்சில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

குறிப்பாக தமிழகத்துக்கு வெளியே இருக்கும் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடர்பாக நீதியரசர் கிருபாகரனின் கேள்விகள் ஒவ்வொன்றும் விரிவான தளத்தில் விவாதிக்க வேண்டியவை!

நீதியரசரின் கேள்விகளுக்குப் பதில் தேடிப் பயணத்தைத் தொடருவோம்…

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

Bar Council of India and Lawyers Mini Series 4

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share