பாரிஸ்டர் ரஜினிகாந்த் டு வண்டு முருகன்கள்! மினி தொடர் – 2

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு – 2

சக்தி ராணி வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன சொன்னது என்பதை பார்க்கும் முன்னர்… இந்த தமிழ் சமூகச் சூழலில் வழக்கறிஞர் என்ற ஒரு தொழிலின் மாண்பு எப்படியெல்லாம் பாதை மாறியிருக்கிறது என்பதை மூத்த வழக்கறிஞர் வேல்முருகனின் பார்வையோடு இணைந்து பார்ப்போம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வரலாற்றின்… சமூகத்தின் முக்கியமான ஆளுமைகளைத் தான் ஏற்கும் பாத்திரங்களில் தத்ரூபப்படுத்தினார். வரலாற்று ரீதியாக என்றால் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் என்று வீர புருஷர்களைத் தன் நடிப்பால் மக்கள் முன் நிறுத்தினார். அதேபோல சமூக ரீதியில் என்றால் மருத்துவர், காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் என்ற பாத்திரங்களில் வாழ்ந்து காட்டினார் சிவாஜி கணேசன்.

இந்தப் பாத்திரங்களுக்காக அந்தந்த காலத்திய அத்துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளிடம் சிவாஜி பழகிப் பயின்றார் என்பது பலரும் அறிந்ததே.

அந்த வகையில் கௌரவம் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழக்கறிஞராக நடித்திருப்பார். வழக்கறிஞர் என்ற பிம்பத்துக்கான ஒட்டுமொத்த அடையாளத்தையும் ஒரு சினிமாவுக்குள் நிரூபித்துவிட முடியாது என்றபோதும்… பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற அந்த வழக்கறிஞர் பாத்திரத்துக்கு ஆயிரம் சதவிகிதம் நியாயம் செய்து அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன்.

ஒரு வழக்கறிஞருக்குரிய சிறு சிறு அகக்குறிப்புகள் முதல் புறக்குறிப்புகள் வரை அந்தப் பாத்திரத்தின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டன.

கட்டபொம்மன் என்றால் அவரது வரலாற்றை ஆய்ந்து படித்து அந்த பாத்திரத்தை நடித்துவிடலாம், வ.உ.சி. பாத்திரம் என்றால் அவரது வாழ்க்கைப் பதிவுகளைப் படித்துவிட்டு அந்த பாத்திரத்தை மெருகேற்றலாம்.

ஆனால், வழக்கறிஞர் பாத்திரம் என்றால் என்ன செய்வது?

அப்போதைய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான

அட்வகேட் ஜெனரலாகவும் இருந்து புகழ் பெற்ற கோவிந்த் சுவாமிநாதன் என்ற திறமையான வழக்கறிஞரைதான் சிவாஜி தனது பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரத்தில் பிரதிபலித்தார் என்று இன்றும் பேசப்படுகிறது. வழக்கறிஞர் கோவிந்த் சுவாமிநாதனிடம் பழகிய சிவாஜி கணேசன் அவரது உடல் மொழிகளைப் புரிந்துகொண்டு அவரோடு நீதிமன்றம் சென்று அங்கே நடந்தவற்றைப் பார்த்து கிரகித்துதான் பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரத்தைச் செய்தார்.

அதாவது கௌரவம் படத்தைப் பார்த்தால் பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள் மீது மரியாதை ஏற்பட்டது. வழக்கறிஞர்களின் கறுப்பு கவுன் என்பது நீதிதேவதையின் மானம் காக்கும் ஆடையாக அப்போது பார்க்கப்பட்டது. அதை கௌரவம் படம் உறுதிப்படுத்தியது. பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரத்தைப் பார்த்த மக்களுக்கு சிவாஜியின் நடிப்பு தெரிந்தது. ஆனால், சிவாஜிக்கோ அந்த பாத்திரத்தில் திறமையான வழக்கறிஞரான கோவிந்த் சுவாமிநாதனே தெரிந்தார்.

சினிமாவை நாம் முழு அளவீடாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றாலும் சமூகத்தை சினிமா பிரதிபலிக்கிறது என்பதை நாம் முற்று முழுதாக மறுத்துவிட முடியாது.

அந்த வகையில் பார்த்தால்… அன்று கௌரவம் படம் மூலம் வழக்கறிஞர்களின் கௌரவம் பிரதிபலிக்கப்பட்டது. இன்றைய தினம் வழக்கறிஞர்களை வண்டுமுருகனாக சித்திரிக்கும் சமூக அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இது வழக்கறிஞர்களை வேதனைப்படுத்தக்கூடிய ஒரு விஷயம்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்துகள் நிறைந்த இந்த வழக்கறிஞர் துறை, வண்டு முருகன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அளவுக்கு போய்விட்டது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும்.

இப்போது நாம் சக்தி ராணி வழக்குக்கு வருவோம்.

திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள் அந்தப் பட்டச் சான்றிதழை வைத்துக்கொண்டு சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பிக்க முடியாது என்று 2009ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு கூறிவிட்டது. ஏற்கெனவே 2008ஆம் ஆண்டு லீகல் எஜுகேஷன் ஆக்ட் என்ற சட்டக்கல்வி தொடர்பான சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

அதாவது ப்ளஸ் டூ முடித்து டிகிரி முடித்தவர்களும் அல்லது பொறியியல் போன்ற தொழில் கல்வியில் பட்டம் படித்தவர்களுமே இனி சட்டம் படிக்க முடியும், அவர்கள்தான் வழக்கறிஞர்கள் ஆக முடியும் என்பதை மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகிய இரு அமைப்புகளுமே உறுதி செய்துவிட்டன.

Bar Council of India and Lawyers Mini Series 2

இந்த நிலையில் அடிப்படையாக ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. 2008இல் லீகல் எஜுகேஷன் ஆக்ட், 2009இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதெல்லாம் சரி. ஆனால், அதற்கு முன் ஒருவர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அந்த பட்டப்படிப்பை அடிப்படையாக வைத்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து, சட்டக் கல்லூரியில் சேர்ந்தும் விட்டார். அவரை என்ன செய்வது?

இதன் அடிப்படையில் 243 வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்கள் இனி பிராக்டிஸ் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டது. தற்போது அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதலாவது அமர்வில் விசாரணையில் இருக்கிறது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்… இது மாதிரியான சந்தேகங்களுக்குதான் 2010ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் சக்தி ராணி என்பவர் தொடுத்த வழக்கில் பதில் அளித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான அந்த தேதியில் யார் சட்டப்படிப்பை முடித்திருந்தார்களோ, அவர்களுக்கு விதி விலக்கு அளித்தது உயர் நீதிமன்றம். ஆனால், பார் கவுன்சில் என்ன செய்தது?

அந்த காலத்தில் யார் வழக்கறிஞர்கள் படிப்பு படித்துக் கொண்டிருந்தார்களோ, சேர்ந்தார்களோ அவர்களுக்கெல்லாம் என்ரோல்மென்ட் எனப்படும் வழக்கறிஞர் பதிவை அளித்தது. இது உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் வேல்முருகன்.

இப்படி சட்டத்தையே சட்ட விரோதமாகப் பயின்றவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் துறைக்குள் வந்தது திடீரென நடந்த வித்தை அல்ல. அதற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.

அதை நாளை பார்ப்போம்!

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share