இருட்டறையில் ஒரு விளக்கு – மினி தொடர் – 17
பொதுவாக பார் கவுன்சில் என்றாலே நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது, போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செய்திகள்தான் அடிக்கடி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
இதுபற்றி மூத்த வழக்கறிஞரான ஆர்.கே.சந்திரமோகன் தொடர்ந்து பேசுகிறார்.
“என்னைப் பொறுத்தவரைக்கும் சாதாரண மனிதர்கள் வேண்டுமானால் பல்வேறு போராட்ட வடிவங்களை கையிலெடுக்கலாம். ஆனால், சட்டம் படித்த வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தைச் சட்ட ரீதியாகவே நடத்த வேண்டும் என்று பிரியப்படுகிறவன் நான். ஏனெனில், மற்ற எவரையும்விட சட்டத்தை மதிக்கவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அதிகம் ஒத்துழைப்பு தர வேண்டியது வழக்கறிஞர்கள்தான். அதனால் சில அடையாளப் போராட்டங்களில் ஈடுபடலாமே தவிர, பெரும்பாலும் வழக்கறிஞர்கள் தங்கள் பிரச்னைகளைச் சட்ட ரீதியாகவே போராட வேண்டும் என்பதே என் விருப்பம்.”
**‘தாங்கள் மூன்றாவது முறை பார் கவுன்சில் உறுப்பினராக இருக்கிறீர்கள், ஒருமுறை பார் கவுன்சில் தலைவராக இருந்துள்ளீர்கள். வழக்கறிஞர்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?’**
“வழக்கறிஞர்கள் என்றால் சர்ச்சைகளை மட்டுமே மையப்படுத்தும் ஊடகங்கள் மத்தியில் மின்னம்பலம், வழக்கறிஞர்களின் வாழ்க்கைப் போக்குகள் பற்றியும் கேள்வி கேட்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது” என்று சிரித்த ஆர்.கே.சந்திரமோகன் பதிலைத் தொடர்ந்தார்.
“நான் பார் கவுன்சில் உறுப்பினராக இருந்தபோது பல வழக்கறிஞர்களின் பரிதாப நிலையைப் பார்த்திருக்கிறேன். ‘நேற்று இருப்பவன் இன்று இல்லை என்பதே இந்த உலகத்தின் பெருமை’ என்று சொல்வாரே வள்ளுவர். அதுபோல நேற்று நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் இன்று வாய்மூடி சடலமாக மரணத்தின் பிடியில் கிடக்கும்போது என்னை அந்தக் காட்சிகள் உலுக்கும்.
நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதி அரசிடமிருந்து கிடைத்தாலும், அதுவே வழக்கறிஞர் குடும்பத்துக்குப் போதுமானதாக இருப்பதில்லை. வழக்கறிஞர்கள் தினந்தோறும் பல்வேறு வகைகளிலும் வாழ்க்கையில் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சட்டத்தின் துணையோடுப் போராடுகிறவர்கள் என்ற ரீதியில் வழக்கறிஞர்களுக்கு எந்த முனையில் இருந்தும் அச்சுறுத்தல்கள் வரலாம், ஆபத்துகள் வரலாம்.
அதுபோல பல வழக்கறிஞர்களுக்கு அச்சுறுத்தல்களும் அதனால் ஆபத்துகளும் நேர்ந்ததைப் பார்த்திருக்கிறேன். இளம் வழக்கறிஞர்கள் கொல்லப்படும்போது அல்லது எதிர்பாராத விதத்தில் இறந்துவிடும்போது அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன கதி என்று குழம்பினேன்.
வழக்கறிஞர்களாகிய நாம் எத்தனையோ பேரின் குடும்பத்துக்கு இன்ஷூரன்ஸ் கேட்டு நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி ஜெயித்து, உரிய காப்பீட்டுத் தொகையை அந்தக் குடும்பத்துக்குப் பெற்றுக் கொடுக்கிறோம். ஆனால், வழக்கறிஞர்கள் திடீரென இறந்து போனால், அவர்களின் குடும்பத்துக்கு இன்ஷூரன்ஸ் தொகை பெற்றுக்கொடுப்பது யார்? இதற்கான திட்டம் என்ன? ஏன் வழக்கறிஞர்களுக்கு மட்டும் பணிப் பாதுகாப்பு இல்லை?
இப்படி நிறைய கேள்விகள் என் இதயத்திலும் மூளையிலும் ஒரே நேரத்தில் முளைத்தன.
**அந்த கேள்விகளின் விளைவாக என் மூளையின் குழந்தையாக பிறந்ததுதான் வழக்கறிஞர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்.**
யாவர்க்கும் காப்பீட்டுப் பணத்தை வாதாடிப் பெற்றுத் தரும் வழக்கறிஞருக்குக் காப்பீடு வேண்டும் என்றும், அதற்கான செயல் திட்டங்களைத் தயாரித்துக்கொண்டும் அப்போது பார் கவுன்சில் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசினேன்.
பார் கவுன்சிலின் இளம் உறுப்பினரான நான் அப்போது கொண்டுவந்த இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அப்போதைய பார் கவுன்சில் தலைவர், மூத்த உறுப்பினர்கள் என்று பலரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. ‘வழக்கறிஞர்கள் என்றால் தவணைக் கடனே கொடுக்க மாட்டாங்குறான். இதுல எப்படி காப்பீடு கொடுப்பான்?’ என்று உடனடியாக என்னிடம் கேள்வி கேட்டார்கள். நடைமுறை சாத்தியம் இல்லை என்று விடையளித்தனர்.
ஆனால், என் மூளையின் குழந்தையை மெல்ல மெல்ல வளர்த்தேன். தொடர்ந்து பார் கவுன்சிலில் இதுபற்றிப் பேசி ஒருவழியாக அவர்களைத் திருப்திப்படுத்தினேன். அதன் பின்னர், பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதை எனது வழக்கறிஞர் வாழ்வில் நான் சாதித்த முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன்.
இந்தத் திட்டத்தை முதலில் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நான் இதில் அக்கறை காட்டி பல வாதங்களைக் காப்பீட்டு நிறுவனங்களிடம் முன்வைத்தோம். இன்ஷூரன்ஸ் என்றால் சாலை விபத்துக்கு மட்டுமல்ல. நாங்கள் காப்பீட்டு நிறுவனங்களை அழைத்து இதுபற்றிப் பேசி விபத்துக்கு ஒரு புதிய வரையறையையே உண்டாக்கினோம்.
அந்த திட்டம்தான் இன்றும் பல வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது.
விபத்துக்கு என்ன புதிய வரையறை என்று கேட்கிறீர்களா?” என்று நிறுத்தினார் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.சந்திரமோகன்.
புதிய வரையறையை நாளை பார்ப்போம்.
(விளக்கு ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16