ஆளுநருக்கு ஆலோசகராகும் முதல்வர்! மினி தொடர் – 15

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர்-15

தமிழ்நாடு பார் கவுன்சிலில் நடக்கும் கேலிக் கூத்து பற்றி மிகவும் ரவுத்திரமாகத் தனது கருத்தைத் தொடர்ந்து முன் வைக்கிறார் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவரும், மூன்றாவது முறையாக தமிழக பார் கவுன்சில் உறுப்பினருமான ஆர்.கே. சந்திரமோகன்.

**தமிழக பார் கவுன்சில் நகைச்சுவை மன்றமாகிவிட்டது என்று கூறியிருந்தீர்களே? எப்படி?**

“தமிழ்நாடு பார் கவுன்சிலை மாநில அரசு என்றும், அகில இந்திய பார் கவுன்சிலை மத்திய அரசு என்றும் உருவகப்படுத்திக்கொள்ளுங்கள். சில காரணங்களால் மாநில அரசு கலைக்கப்படுகிறது அல்லது மாநில அரசின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. மீண்டும் தேர்தலை நடத்தாமல் மத்திய அரசு ஆளுநர் மூலம் ஆட்சி செய்ய நினைக்கிறது.

அசாதாரண சூழல் என்றால் தேர்தல் நடத்தும்வரை ஆளுநரின் ஆட்சி நடக்க சட்டம் வழி செய்கிறது. சரி, ஆளுநரே ஆள்கிறார். அப்போது ஆளுநர் தனக்கு சில ஆலோசகர்களை வைத்துக்கொள்கிறார். அது யார் என்றால் மாநில அரசின் முதல்வரையும், பொருளாதாரத்தை கவனிக்கும் முக்கிய அமைச்சரையுமே ஆலோசகர்களாக வைத்துக்கொள்கிறார் என்றால் அது எப்படி இருக்கும்? அது எப்படி பார்க்கப்படும்? பின் எதற்கு ஆளுநர் ஆள வேண்டும் என்ற கேள்வி எழாதா?” என்கிறார் ஆர்.கே. சந்திரமோகன்.

Bar Council of India and Lawyers Mini Series 15

அதாவது சட்ட பாஷையை விட்டு இப்போதைய அரசியல் பாஷையில் சொல்ல வேண்டுமானால், தமிழக அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆட்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? பின் ஏன் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கேள்வி எழாதா? அப்படித்தான் தமிழ்நாடு பார் கவுன்சிலில் அச்சு பிசகாமல் நடந்தது என்பதைக் குறிப்பிடுகிறார் சந்திரமோகன்.

மேலும் தொடர்கிறார்…

‘’அது மாதிரி பதவிக் காலம் முடிந்த தமிழக பார் கவுன்சிலின் தலைவரையும், துணைத்தலைவரையும் தமிழக பார் கவுன்சிலை நிர்வாகிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு கமிட்டியின் உறுப்பினர்களாக நியமித்தார்கள். சுதந்திர இந்தியாவில் சட்டத்துக்கு இதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை நாடு அப்போது நன்கு உணர்ந்தது.

இதை எதிர்த்து பல வழக்கறிஞர்கள் போராடி இது நீதிபதி கிருபாகரன் கவனத்துக்குச் சென்று பின் அட்வகேட் ஜெனரல் தலைமையில் மூத்த வழக்கறிஞர்களையும், தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களையும், அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களையும் கொண்டு தமிழக பார் கவுன்சில் நிர்வாகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்காலிகமாக நடைபெறும் இந்த நல்ல நிர்வாகம் தமிழக பார் கவுன்சிலின் தேர்தலை நல்லபடியாக நடத்தும் என்ற நம்பிக்கை இப்போதுதான் என்னைப் போன்று தமிழகத்திலுள்ள எல்லா வழக்கறிஞர்களுக்கும் வந்திருக்கிறது.

எப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகில இந்திய பார் கவுன்சிலை பற்றி தவறாக நினைக்க வைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோலதான் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தமிழக பார் கவுன்சிலைப் பற்றி தவறான புரிதல் கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பார் கவுன்சிலில் என்ன நடக்கிறது என்பதை நீதிபதிகள் தெரிந்துகொள்வதும் இல்லை, தெரிந்துகொள்ள முனைவதும் இல்லை. தங்கள் பதவிகளை நீட்டித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நிர்வாகிகள் பார் கவுன்சில்கள் பற்றிய தவறான தகவல்களை நீதிபதிகளுக்குக் கொடுக்கின்றனர். அதை நீதிபதிகளும் நம்பிவிடுகின்றனர்.

Bar Council of India and Lawyers Mini Series 15

இப்போது பரவாயில்லை. நீதிபதி கிருபாகரன் இந்த விவகாரத்தில் நல்ல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். நல்ல விஷயம். இந்த சமூகத்தில் வழக்கறிஞர்களுக்கு எப்படியாவது நல்ல பெயர் வேண்டும், பழைய மரியாதையை மீட்டெடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார். நீதிபதி திரு. கிருபாகரன் அவர்களிடத்திலே எனக்குப் பிடித்தது என்னவென்றால், அதை அவருக்கு நன்றியோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் வழக்கறிஞர் கூட்டங்களில் பேசும்போது ஒரு விஷயத்தை மட்டும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுவேன்.

‘சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டு, எழுபது வருடம் ஆகிறதப்பா… இந்த வழக்கறிஞர் தொழிலில் நமக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் இந்த தொழிலின் மாண்பினைப் பாதுகாத்து அதை நம் கையில் கொடுத்திருக்கிறார்கள். நாமும் நம் முன்னோடிகளைப் போன்றே நேர்மையாகவும் திறமையாகவும் செயல்பட்டு நமக்குப் பின்னால் வருகிறவர்களிடம் மாண்பு குறையாமல் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களும் வழக்கறிஞர் துறையின் மாண்பினை மேலும் உயர்த்த முற்படுவார்கள்’’ என்று சொல்லுவேன்.

இந்த நோக்கத்துக்காக எந்த நீதிபதியும் பாடுபடவில்லை என்பது நெடுநாட்களாக எனக்கு ஒரு சங்கடமாகவே மனதில் இருந்து வந்தது. பரவாயில்லை… நீதிபதி திரு. கிருபாகரன் அவர்கள் பாடுபட்டு எங்களின் சிந்தனைக்கு எண்ண ஓட்டத்துக்கு ஏற்பச் செயல்படுகிறார் என்ற சந்தோஷமும் திருப்தியும் இருக்கிறது’’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. சந்திரமோகன்.

சரி… பார் கவுன்சில் தேர்தல் நெருங்கிவிட்டதாக தெரிகிறது. அது பற்றிப் பேசுவோம்.

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share