பார் கவுன்சிலில் புதிய நீரோட்டம்! மினி தொடர் – 12

Published On:

| By Balaji

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர்-12

பல்வேறு விளக்கங்கள், பரிசீலனைகள், குழப்பங்கள், கோரிக்கைகள் எல்லாவற்றையும் தாண்டி பார் கவுன்சிலுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. அதுவும் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற கண்டிப்போடு இந்த உத்தரவை கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில பார் கவுன்சில்களில் தேர்தல் விரைவில் நடக்க வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

இதேநேரம் இனி யார் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவது என்பது அடுத்த கட்டமான முக்கியமான விவாதமாக இருக்கப்போகிறது. வருடக் கணக்கில்,மாதக் கணக்கில் பார் கவுன்சில்களின் தேர்தல் தள்ளிப் போனதற்குக் காரணமே, ஏற்கனவே அப்பதவிகளில் இருந்தோர் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி, தேர்தலை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்து அப்பதவிகளில் தொடர்ந்திருக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு வலுவாக உண்டு.

இந்திய வழக்கறிஞர் உலகின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டிய பார் கவுன்சில், சமீப காலங்களாக புகார்களுக்குரிய அமைப்பாக மாறிவிட்டது என்றும், வழக்கறிஞர்களின் உண்மையான பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காணும் வகையில் பார் கவுன்சிலின் செயல்பாடுகள் இல்லை என்றும் மூத்த வழக்கறிஞர்களே தங்கள் கவலையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பல்வேறு தடைகளைத் தாண்டி நடக்க இருக்கும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடப் போகிறவர்களின் தகுதி பற்றியும், பின்னணி பற்றியும் இப்போது வழக்கறிஞர்களுக்குள் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர் என்ற தொழிலுக்கு மட்டுமல்ல, வழக்கறிஞர் சமூகத்தின் ஆன்மாவாக திகழ்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

அத்தகைய பார் கவுன்சில் நிர்வாகம் என்பது நேர்மையான, திறமையான,ஒழுக்கமான வழக்கறிஞர்களின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பதே சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்தோரின் விருப்பம். நேர்மையாளர்களின் கையில் பார் கவுன்சில் இருந்தால்தான்… வழக்கறிஞர்கள் உலகத்தை சுத்திகரிக்கும் அதன் முயற்சிகளும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கும்.

கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரிமாணவர்கள் 145 பேர் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்றக் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குதான் அண்மையில் பார் கவுன்சில் பற்றியும், வழக்கறிஞர்களின் தகுதிகள் பற்றியும் விவாதத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கான முகாந்திரம் கொண்ட வழக்கு.

இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் ஆஜரானார். இந்த பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே இரு தரப்பினரின் வழக்கறிஞர்களும் வேறு வகையில் இந்த பிரச்னையைக் கையாண்டது பற்றிக் குறிப்பிட்டு…

‘அந்த வழக்கறிஞர்களில் , 42 பேர் உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பெயர்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. சிலர் 2 முறை பதிவு செய்துள்ளனர். ஆறாம் வகுப்பு, 7ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்துவிட்டு நேரடியாக திறந்த வெளிப் பல்கலைக்கழகங்களில் எம்ஏ முடித்துவிட்டு சட்டப்படிப்பை முடித்துள்ளனர். அதன்பிறகு பதிவு செய்துகொள்கிறார்கள். இது பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது. தற்போது, வழக்கறிஞர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன’’ என்று உண்மைகளை உடைத்துப் பேசினார் அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன்.

இதைக்கேட்ட நீதிபதி கிருபாகரன், ‘வழக்கறிஞர் தொழிலில் ஏற்கனவே ஏராளமான சட்டவிரோத கும்பல் நுழைந்துவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தால்தான் பார் கவுன்சிலுக்கு சரியான, நியாயமான தேர்தலை நடத்த முடியும் என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குதான் தற்போது தமிழக வழக்கறிஞர் சமுதாயத்தின் நிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தமிழ்நாடு பார் கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏப்ரல் 2016ல் முடிந்துவிட்ட நிலையில்… தற்போது நாம் ஏற்கனவே குறிப்பிடப்படி 8(ஏ) கமிட்டியின் தலைவராக இருக்கும் அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணனின் ஆக்கபூர்வமான பணிகளை மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் பாராட்டுகிறார்.

’’அட்வகேட் ஜெனரல் பதவியில் இருப்பவர்களுக்கு பல்வேறு விதமான பணி அழுத்தங்கள் இருக்கும். எனவே அவர்கள் பார் கவுன்சில் தலைவராக இருந்தால் கூட அவர்களின் பணி என்பது ஆக்டிவ் ஆக இருக்காது என்பதே பொதுவான ஓர் உண்மை.

Bar Council of India and Lawyers Mini Series 12

ஆனால்…இப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன் வழக்கறிஞர் தொழிலையும், வழக்கறிஞர் சமுதாயத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற முயற்சி எடுத்து, மிகவும் உண்மையாகவும் ஈடுபாட்டோடும் உழைத்து வருகிறார். இது வரவேற்கத் தகுந்த முயற்சி.

அவர் வழக்கறிஞர்களின் ஆவண சரிபார்ப்புப் பணிகளில் தினமுமோ அல்லது தேவைப்படும் போதெல்லாம் சென்று தீவிரமான பணியாற்றுகிறார். ’சிஸ்டம் சரியில்லை’ என்ற வெற்றுப் புலம்பல் இல்லாமல் சிஸ்டத்தை சரிசெய்வது எப்படி என்ற அடிப்படை முனைப்போடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன்.

வழக்கறிஞர்களுக்கான தகுதியே இல்லாத பலர் வழக்கறிஞர்களாக இருப்பது, திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வழக்கறிஞர்களாக இருப்பது போன்ற பல புள்ளி விவரங்கள் வெளியாகக் காரணமாக இருந்தது அட்வகேட் ஜெனரல் அவர்களுடைய ஆய்வுகள்தான்.

இதே ரீதியிலான அவரது பணிகளால் பார் கவுன்சிலில் படிந்திருக்கும் பாசிகள் விரைவில் அகற்றப்படும், தேங்காத புதிய நீரோட்டம் பார் கவுன்சிலில் பாயும் என்ற நம்பிக்கைகள் சாத்தியப்படுகின்றன ‘’ என்கிறார் மூத்த வழக்கறிஞர் வேல் முருகன்.

(விளக்கு ஒளிரும்)

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel