மினி தொடர் : இருட்டறையில் ஒரு விளக்கு – 11
பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவுகள், விளக்கங்கள் வேண்டி பல மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அதாவது சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸின் என்ற முறையில் வழக்கறிஞர்களின் ஆவணங்களை சரிபார்த்தலுக்கும், பார் கவுன்சில் தேர்தலுக்கும் முடிச்சுப் போட்டு தேர்தலைத் தாமதப் படுத்துகிறார்கள் என்ற முறையீட்டை வைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்தான் சில விளக்கங்களை அவர்கள் கோரினார்கள்.
இந்த முறையீடுகளின்பேரில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அபய் மனோகர் சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
“இந்தியாவில் மொத்தமுள்ள 15,34,531 பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களில் வெறும் 6,44,768 வழக்கறிஞர்களே தங்கள் சரிபார்ப்பு விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
மேற்கண்ட விவரங்களை வைத்து பார்க்கையில் தங்களது பட்டப்படிப்பு சான்றிதழோடு சரிபார்ப்பு விண்ணப்பங்களை அளித்துள்ள 6,44,768 வழக்கறிஞர்களும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதியானவர்கள்’’ என்று தீர்ப்பளித்தனர்.
இந்திய அளவில் சுமார் ஆறு லட்சம் வழக்கறிஞர்கள்தான் பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்கிறது உச்ச நீதிமன்றம். இதையே தமிழ்நாடு என்ற அளவில் பார்க்கும்போது…
தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் வரை வழக்கறிஞர்களாகப் பதிவு பெற்றிருந்தாலும், சுமார் 55 ஆயிரம் வழக்கறிஞர்கள்தான் தங்கள் தகுதிச் சான்றிதழ்களை தகுதி சரிபார்ப்புக்காக அனுப்பியிருக்கிறார்கள். எனவே, 55 ஆயிரம் பேர்தான் பார் கவுன்சில் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள். அதிலும் குறிப்பாக சுமார் நாலாயிரம் பேர் வரை வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வு எழுதாதவர்கள் என்பதால் அவர்கள் போக மீதி சுமார் 50 ஆயிரம் வழக்கறிஞர்கள்தான் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள்.
உச்ச நீதிமன்றம் மேலும் 30-11-17க்குள் வாக்காளர் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவிட்டது. இதில் பார் கவுன்சிலுக்குக் கஷ்டமே இருக்காது. ஏனென்றால் ஏற்கெனவே சரிபார்ப்புக்கு விண்ணப்பித்த வழக்கறிஞர்களின் பெயர் பட்டியல் ஒவ்வொரு மாநில பார் கவுன்சிலிடமும் இருக்கிறது. தமிழகத்தில் 55 ஆயிரம் வழக்கறிஞர்கள் சரிபார்ப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் பார் கவுன்சிலிடம் இருக்கிறது. ஏற்கனவே, நாம் குறிப்பிட்டது மாதிரி தகுதித் தேர்வு எழுதாத நாலாயிரம் பேரையும் நீக்கினால் 50 ஆயிரம் பேர் வாக்காளர்கள் ஆகிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பார் கவுன்சில் 15 நாள்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த அனுமதிக்க வேண்டும், ஒரு வாரத்துக்குள் வேட்புமனுத் திரும்பப் பெற அவகாசம் அளிக்க வேண்டும், அடுத்த ஒரு வாரத்துக்குள் மனுக்கள் பரிசீலனை செய்து வேட்பாளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்று கால அட்டவணையும் வகுத்துக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
மாநில பார் கவுன்சில்கள் தேர்தல் தொடர்பான அனைத்து செயல் திட்டங்களையும் வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அனைத்து சட்டப் பல்கலைக்கழங்களும் தங்களது சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
ஆனால், இந்திய பார் கவுன்சில் தரப்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்திடம் ஒரு முறையீடு வைக்கப்பட்டது. அதாவது, ‘சில மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் நவம்பர் 24ஆம் தேதி கொடுத்த தீர்ப்பைச் சற்று மாற்றி அமைக்க வேண்டும். கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது பார் கவுன்சில்.
இந்த முறையீட்டைப் பரிசீலித்த நீதிபதிகள் டிசம்பர் 14ஆம் தேதி ஓர் உத்தரவைப் பிறப்பித்தனர்.
‘’அகில இந்திய பார் கவுன்சிலின் கோரிக்கைகளின்படி இனியும் தேர்தல் நடத்துவதற்கு அதிக அவகாசம் கொடுக்க முடியாது. ஏற்கெனவே 24ஆம் தேதி அளித்த தீர்ப்பில் வாக்காளர் பட்டியலை வெளியிட 30-11-17 கடைசி தேதி என்று உத்தரவிட்டிருந்தோம். இந்த நிலையில் இப்போது வாக்காளர் பட்டியல் வெளியிட 15-1-18 என்பதை கடைசி தேதியாக நிர்ணயிக்கிறோம். மேலும் 2018 பிப்ரவரி 15ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளை கட்டாயமாகத் தொடங்கி ஆறு வாரங்களுக்குள் முடித்துவிட வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாநில பார் கவுன்சில்கள் ஏற்கனவே உத்தரவிட்டபடி தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கலாம்’’ என்று உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.
ஆக… பார் கவுன்சில் தேர்தல் பல தடைகளைத் தாண்டி அடுத்த வருடம் நடைபெறப்போவது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இன்னும் சில தெளிவுகளை நாம் தொடர்ந்து பார்ப்போம்…
(விளக்கு ஒளிரும்)
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10