‘சட்டம் ஓர் இருட்டறை, வழக்கறிஞரின் வாதம் அதில் விளக்கு’ என்றார் பேரறிஞர் அண்ணா. அந்தச் சொற்றொடர் என்றைக்கும் பொருந்தும் நிலைப்புத் தன்மைமிக்கதாக இருக்கிறது.
சட்டம் மட்டுமல்ல, அந்தச் சட்டத்தைப் பயிற்றுவிக்கும் சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்டம் பழகும் வழக்கறிஞர்கள் என்று சட்டத்தை அமல்படுத்தும் வழக்கறிஞர் உலகத்திலேயே இப்போது குழப்பம் என்ற இருட்டு சூழ்ந்திருக்கிறது. யார் தகுதியான வழக்கறிஞர் என்று வழக்குகள் நடக்கின்றன.
வழக்கறிஞர்களாகத் தகுதி பெற்றவர்கள் யார்? வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய தகுதி பெற்றவர்கள் யார்? பார் கவுன்சில் என்றால் என்ன? பார் கவுன்சிலில் இருந்து ஏன் சில வழக்கறிஞர்கள் நீக்கப்படுகிறார்கள்?
இப்படி நிறைய கேள்விகள் சட்ட உலகத்துக்கு வெளியே இருக்கும் பொதுமக்களுக்குப் புரியாத புதிராக இருக்கின்றன. எதிர்காலத்தில் சட்டம் பயில வேண்டும், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று துடிக்கும் இன்றைய மாணவர்களுக்குள்ளும் இந்த கேள்விகள் விடை காணாத வினாவாகத் துளைத்துக் கொண்டிருக்கின்றன.
வழக்கறிஞர்கள் என்றால் நீதியின் தூதுவர்கள். மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்க்கப்பட்டவர்கள். ஆனால், இன்று வழக்கறிஞர்கள் உலகத்துக்குள் நிறைய சலசலப்புகள், பரபரப்புகள் என்று ஒரு குழப்ப மேகம் குவிந்திருக்கிறது.
வழக்கறிஞர்கள் உலகத்துக்குள் என்ன நடக்கிறது? தினந்தோறும் பார் கவுன்சில் பற்றிய செய்திகள் வருகின்றன. வழக்கறிஞர்களின் கூட்டமைப்பான பார் கவுன்சில் பற்றியே நீதிமன்றங்களில் சூடாக வழக்குகள் நடக்கின்றன. இதெல்லாம் எதை நோக்கிச் செல்கின்றன?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக… அண்ணா சொன்ன அந்த விளக்காக அமையப் போகிறது இந்த மினி தொடர்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான வேல்முருகன் அவர்களிடம் இன்றைய வழக்கறிஞர் உலகம் சந்தித்து வரும் சவால்கள் பற்றிப் பேசினோம். வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர். தமிழ்நாடு பார் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தவர். வழக்கறிஞர்களுக்கு எதிரான பார் கவுன்சிலின் போக்கைக் கண்டித்து பார் கவுன்சிலில் இருந்து விலகியவர் வேல்முருகன்.
இன்றைய வழக்கறிஞர்கள் உலகின் நிலை பற்றி வேல்முருகனிடம் நாம் பேசியதை கேள்வி – பதில் என்ற உரையாடல் வடிவில் மின்னம்பலம் வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்.
**பார் கவுன்சில் என்றால் என்ன?**
பார் கவுன்சில் என்றால் என்ன என்று அறிவதற்கு முன் வழக்கறிஞர்கள் சட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அகில இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961 என்பது வழக்கறிஞர்கள் தொழிலை முறைப்படுத்துவதற்காகவும் ஒழுங்குபடுத்துவதற்காகவும், அவர்களுடைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் 1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதற்கு முன்பாக பிரிட்டிஷ் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட, ‘இந்தியன் பார் கவுன்சில் ஆக்ட்’ என்ற சட்டம்தான் நடைமுறையில இருந்தது. அப்போதெல்லாம் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில்தான் வழக்கறிஞர்கள் என்ரோல்மென்ட் எனப்படும் பதிவைச் செய்துகொள்ள வேண்டும்.
இதையெல்லாம் சரி செய்து இந்தியாவில் இருக்கும் அனைத்து வழக்கறிஞர்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனையின் விளைவாகத்தான் 1961இல் அகில இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி மாநிலங்களுக்கென்று ஒரு பார் கவுன்சில், மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அகில இந்திய பார் கவுன்சில் என்ற இரண்டு அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. அந்தந்த மாநில பார் கவுன்சிலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்களாகச் செல்வர்.
5 ஆயிரம் வழக்கறிஞர்கள் வரை மாநில பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தால் அவர்கள் சார்பாக 10 பேர் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்கள் இருப்பார்கள். 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வழக்கறிஞர்களைக் கொண்ட மாநில பார் கவுன்சிலுக்கு அகில இந்திய அளவில் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் அகில இந்திய பார் கவுன்சிலில் 25 பேர் இடம் பிடிப்பார்கள்.
பார் கவுன்சில் என்ற இந்த அமைப்பின் பணிகள் என்னென்ன?
வழக்கறிஞர்களைப் பதிவு செய்வது, வழக்கறிஞர்களுக்கான சட்டக் கல்வியை ஒழுங்குபடுத்துவது, வழக்கறிஞர் தொழிலை ஒழுங்குபடுத்தக் கூடியது, முறைப்படுத்துவது போன்ற பணிகள்தான் பார் கவுன்சிலின் முக்கியமான பணிகள். இந்த நான்குமே வழக்கறிஞர் சட்டம் 1961இன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
இதில் வழக்கறிஞர்களின் சட்டக் கல்வியை முதலில் பார்ப்போம்…
வழக்கறிஞர்கள் சட்டத்தின் 7ஆவது பிரிவில்தான் பார் கவுன்சிலின் பணிகளை வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதில்தான் வழக்கறிஞர்களுக்கான சட்டக் கல்வி பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.
இதன்படி இந்தியா முழுவதும் இருக்கும் சட்டக் கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய அமைப்பாக அகில இந்திய பார் கவுன்சில் இருக்கிறது. பார் கவுன்சிலின் அங்கீகாரமோ, அனுமதியோ இல்லாமல் இந்தியாவில் எங்கும் சட்டக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க முடியாது. அவ்வாறு தொடங்கினால் அதில் சட்டம் பயில்பவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய முடியாது.
இதன் அடிப்படை என்னவென்றால், பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சட்டக் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாகப் பதிவு செய்ய முடியும், பணியாற்ற முடியும்.
இதில் சில குழப்பங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டன. குறிப்பாகப் பார்த்தால் 2008இல்தான் இந்தச் சட்டக் கல்வி பற்றிய பிரிவு அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் 5(இ) யார் சட்டக்கல்விப் பயில முடியும் என்று வரையறுக்கிறது.
அதாவது 10, +2, +3 கல்விமுறையில் ரெகுலர் கோர்ஸ் படித்திருக்க வேண்டும். அல்லது 10, +2, +5 என்ற இரண்டு கல்வி முறையில் படித்திருக்க வேண்டும். ப்ளஸ் டூ முடித்தபின் ஒரு பட்டப்படிப்பு, அல்லது தொழில்முறைப் படிப்பு படித்திருந்தால்தான் சட்டம் பயில முடியும் என்று 14-9-2008இல்தான் இந்த அமைப்பு முறையே அமலாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு முன்பு வரை திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் படித்ததாகச் சான்று பெற்றவர்கள்கூட வழக்கறிஞர்களாக ஆகிவிட்டார்கள்.
திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களை மேல்படிப்புக்காகவோ, வேலை வாய்ப்புக்காகவோ பயன்படுத்த முடியாது என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றம் 2009இல் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.
அதாவது திறந்தநிலை பல்கலைக்கழகம் என்பது பள்ளிகளில் நான்காவது, ஐந்தாவது படித்தவர்கள் கட பட்டம் பெறும் ஒரு வழிமுறையாக இருந்தது. எனவே, திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்களை வைத்து அதைத் தொடர்ந்த மேல் படிப்புக்கோ, வேலை வாய்ப்புக்கோ பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
2008ஆம் ஆண்டு சட்டக் கல்வி பற்றிய சட்டம், 2009ஆம் ஆண்டு திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற சட்டம் செல்லாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் வழக்கறிஞர்கள் உலகத்தில் சலசலப்பு எழத் தொடங்கியது.
அப்படியென்றால் 2008க்கு முன்னதாக திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்று அதன் அடிப்படையில் சட்டம் படித்தவர்கள் வழக்கறிஞர்களாகத் தொடர முடியாதா?
இந்தக் கேள்விக்குத்தான் சக்திராணி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியான பதிலை அளித்தது.
அது என்ன தீர்ப்பு என்பதை நாளை பார்ப்போம்.
(விளக்கு ஒளிரும்)
பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் – 1
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 2
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 3
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 4
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 5
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 6
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 7
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 8
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 9
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 10
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 11
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 12
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 13
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 14
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 15
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 16
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 17
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 18
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 19
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 20
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 21
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 22
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 23
இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் – 24