பார் கவுன்சில் தேர்தலில், அரசியல் கட்சிகள் தலையிடலாமா என்பதைக் கடந்த அத்தியாயத்தின் வினாவாக முடித்திருந்தோம்.
தற்போதும், ஏராளமான வழக்கறிஞர் சங்கங்களின் முன்னணி நிர்வாகிகள் அரசியல் தொடர்புகள் உடையவர்கள் தான். ஆனாலும் நேரடியாக கட்சி அரசியலை அவர்கள் வழக்கறிஞர் சங்கங்கள் மீது திணிப்பதில்லை. வழக்கறிஞர்கள் அதற்கு இடம் கொடுப்பதுமில்லை. ஆனால், தற்போது நிலமைகள் தலைகீழாகிறது. அரசியல் கட்சிகள் நேரடியாக பார் கவுன்சில் தேர்தலில் களமாடுகின்றன. தங்களது கட்சி கூட்டங்களை கூட்டி பார் கவுன்சிலுக்கான தங்களது வேட்பாளர்களை பகிரங்கமாக அறிவிக்கின்றன அரசியல் கட்சிகள்.
அரசியலில் ஈடுபடுபவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளைத் தமிழ்நாடு பார் கவுன்சில் இடைக்கால குழு கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆனால், அகில இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் இதை நிறைவேற்ற இயலவில்லை. இது மிகத் தவறான நிபந்தனையாக வழக்கறிஞர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. அதேநேரம் பார் கவுன்சிலுக்குள் அரசியல் கட்சிகள் புகுவது நல்லதா என்ற விவாதமும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால் அரசியல் ஊடுருவாத இடம்தான் ஏது? அது பார் கவுன்சிலை மட்டும் விட்டு வைக்குமா என்ன?
திமுக சட்டப் பிரிவு சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா சென்னை உயர் நீதிமன்றம் வளாகம் எதிரே உள்ள ஒய்எம்சிஏ ஹாலில் மார்ச் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. திமுக சட்டப்பிரிவு தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சண்முகசுந்தரம் தலைமையில், செயலாளர் கிரிராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்கள் அணியில் திமுகதான் பலமாக உள்ளது. எனவே நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தேர்தலில் மூத்த வழக்கறிஞர் விடுதலை மற்றும் வழக்கறிஞர் கோவை தண்டபாணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார்.
இதில் இருந்தே தெரியவில்லையா, பார் கவுன்சில் தேர்தலில் கட்சிகளின் ரோல் என்னவென்று!
பாமகவின் முக்கிய ஆளுமையாக அறியப்படும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலு, தனது 22 வருட வழக்கறிஞர் அனுபவத்தில் முதன் முறையாக இப்போது பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அவர் வழக்கறிஞர்களிடையே வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரித்தும் வருகிறார்.
‘’பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். 22 என்பது எனக்குரிய எண். பார் கவுன்சில் தேர்தலில் இந்த முறை தேர்தலை சரியாக நடத்துவதற்காக பார் கவுன்சிலும், உயர் நீதிமன்றமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் வழக்கறிஞர்களின் நலன், கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பணியாற்றுவேன்.
பார் கவுன்சில் தனது உறுப்பினர்களையே பழிவாங்கும் போக்கில் கடந்த காலங்களில் செயல்பட்டிருக்கிறது. அதை மாற்றுவேன்’’ என்ற கே.பாலு இன்னும் ஒரு முக்கியமான வாக்குறுதியை தான் செல்லும் இடங்களில் எல்லாம் முன் வைத்து வருகிறார்.
அது என்ன?
‘’உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு மட்டுமே மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தை இந்திய வழக்கறிஞர் சட்டம் வழங்குகிறது. ஆனால் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் எத்தனை வருட அனுபவம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் சிறந்த வழக்கறிஞர்களுக்கும் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கிடைக்கச் செய்யும் வகையில் பார் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நான் வெற்றி பெறும் பட்சத்தில் முனைவேன்’’ என்று அறிவித்திருக்கிறார் கே.பாலு. இது மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
இதுபோல பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளின் அணிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர்.
வேட்பாளர்களை அறிவித்தது மட்டுமின்றி, எல்லா ஊர்களிலும் கட்சி வழக்கறிஞர்களின் கூட்டங்களைக் கூட்டி, நேரடி பிரச்சாரங்களை உன்னிப்பாகவும் நுட்பமாகவும் முடுக்கி விட்டுள்ளன அரசியல் கட்சிகள்.
இத்தகைய பகிரங்க நடவடிக்கைகள் பார் கவுன்சிலுக்கு புதியவைதான். இலைமறை காயாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தவை, எண்ணிக்கையில் பெருகிவிட்டதோடு, நேரடியாக களமிறங்கி குத்தாட்டம் ஆடுகின்றன. போகிற போக்கை பார்த்தால், அடுத்து வருகிற தேர்தல்களில் கட்சி சின்னங்கள் ஒதுக்க கோரிக்கை எழுந்தாலும் எழலாம்’’ என்று போகிற போக்கில் சில வழக்கறிஞர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.
பார் கவுன்சில் கட்சி அரசியலுக்கான இடமா? அல்லது வழக்கறிஞர்களுக்கானதா? பார் கவுன்சிலை அரசியல் கட்சிகளின் மேடையாக மாற்றினால் விளைவுகள் என்னென்ன? அப்படி தேர்வு செய்யப்படுவோர் வழக்கறிஞர்களின் உணர்வுகளை பார் கவுன்சிலில் பிரதிபலிப்பார்களா அல்லது தங்கள் அரசியல் தலைவர்களின் உணர்வுகளுக்கு செவிமடுப்பார்களா?
இன்னும் விவாதிக்கலாம்…
(பயணம் தொடரும்)
எழுத்தாக்கம்: ஆரா
[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-6]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-7]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-8]