மதுரையில் நடந்த பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வைத்து நடத்தப்பட்ட, நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஒன்பது வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் வழக்கறிஞர்கள் கேள்விகள் கேட்க அதற்கு அவர்கள் பதிலளிக்க சுவாரஸ்யமாக சென்றது நிகழ்ச்சி.
பொது விஷயங்களுக்காக போராடும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் அவர்களது வழக்கறிஞர் பதிவுக்கு தடையாக இருப்பது, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர இன்னும் தாமதம் ஏன் என்பது பற்றிய வழக்கறிஞர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் முதல், நீதித்துறையின் பொதுவான அம்சங்கள் வரை இந்த சிந்தனை அரங்கத்தில் விவாதிக்கப்பட்டது.
”குற்றவியல் வழக்குப் பதியப்பட்டிருந்தால் அந்த வழக்கறிஞரின் என்ரோல்மென்ட் அதாவது வழக்கறிஞராக பதிவு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சட்டக் கல்லூரி மாணவர்கள்தான்.
சட்டக்கல்லூரியில் படிக்கும்ப்போது பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காக போராடுகிறார்கள்:. ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால் அரசின் தடையை மீறுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப் பதியப்படுகிறது. அவர்கள் சட்டப் படிப்பை முழுமையாக நிறைவு செய்து வழக்கறிஞராக பதிவு செய்யப் போகும்போதுதான்… குற்றவியல் வழக்குகள் இருந்தால் வழக்கறிஞராக பதிவுசெய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தாமதம் ஏற்படுகிறது.
இதனால் போராட்ட குணமுள்ள இள ரத்தங்கள் வழக்கறிஞர் பதிவு பெறுவது தாமதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்ற கேள்வி மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வேட்பாளர்கள், ‘’கண்டிப்பாக இது முக்கியமான விவகாரம். பொதுப் பிரச்னைகளுக்காக போராடிய சட்டக் கல்லூரி மாணவர்கள் அந்த போராட்ட குணத்தை வழக்கறிஞரான பிறகும தொடர்வதற்கு இதுபோன்ற வழக்குகள் இடைஞ்சலாக இருக்கின்றன. இதற்கு ஒரு நிரந்தரத்தீர்வினை ஏற்படுத்துவோம்’’ என்று பதில் அளித்தனர்.
இதேபோன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ் குறித்தும் விரிவான விவாதம் நடத்தப்பட்டது. இவ்வாறு வழக்கறிஞர்களின் தனிப்பட்ட பிரச்னை முதல், வழக்கறிஞர் சமூகத்தின் பிரச்னைகள், பொது சமூகத்தின் பிரச்னைகள் என்று மூன்றுவிதமான முக்கிய கோணங்களில் இந்த சிந்தனை அரங்கம் செம்மையாக விவாதித்தது.
இந்த விவாதத்தை சென்னை உயர்நீதிமன்ற ஜோதிமணி தனது பேஸ்புக்கில் பாராட்டியிருக்கிறார்.
’வாழ்த்துகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு’ என்று வழக்கறிஞர் ஷாஜி செல்லனின், சிந்தனை அரங்கம் பற்றிய ஃபேஸ்புக் இடுகையில் பின்னூட்டம் இட்டு ஊட்டம் அளித்திருக்கிறார் நீதிபதி ஜோதிமணி. இவரைப் போன்ற இன்னும் பல நீதிபதிகள் லாஸ் சட்ட மையத்தின் இந்த நிகழ்வை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது இதேபோன்ற சிந்தனை அரங்கங்களை தமிழகம் முழுதும் நடத்த வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. சென்னை, திருச்சி, கோவை போன்ற இடங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கப்படுமா என்பதும் வழக்கறிஞர்கள் வட்டாரத்து எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுமட்டுமல்ல, பார் கவுன்சில் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்னரும் கூட, இதேபோன்று 25 உறுப்பினர்ளையும் வைத்து இதேபோன்ற ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதும் இந்த சிந்தனை அரங்கத்தை நடத்திய லாஸ் சட்டமையத்தின் இன்னொரு திட்டம்.
இந்த சிந்தனை அரங்கத்தால் விளைந்த இன்னொரு நிகழ்வு என்ன தெரியுமா?
மார்ச் 20-ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் இணைந்து மீண்டும் இதேபோன்ற வேட்பாளர் -வாக்காளர் சந்திப்பு நிகழ்வை நடத்துகின்றன. இதில் வழக்கறிஞர் பிரனைகளும், வாக்குறுதிகளும் விவாதிக்கப்படுகின்றன.
பார் கவுன்சில் தேர்தல் அலுவலர்கள் வாக்குறுதி அளிக்கப்படக் கூடாது என்று விதித்த விதியை மீறி நடக்கும் இதுபோன்ற ஜனநாயக ரீதியான நிகழ்வுகள் உண்மையிலேயே பார் கவுன்சில் தேர்தலை ஜனநாயகப் படுத்துகின்றன
பார் கவுன்சில் தேர்தலில் அரசியல் கட்சிகள் பங்கேற்பது என்பது சரியா?
விவாதிப்போம்.
(பயணம் தொடரும்)
எழுத்தாக்கம்: ஆரா
[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-6]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-7]