பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்- 5

அரசியல் சிறப்புக் கட்டுரை

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இப்போது பார் கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அந்தந்த மாநிலங்களில் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ‘நான் பார் கவுன்சில் உறுப்பினர் ஆகும்பட்சத்தில், வழக்கறிஞர்களுக்கு இன்னின்ன நன்மைகளைச் செய்வேன், இன்னின்ன உரிமைகளை மீட்டுக் கொடுப்பேன், இன்னின்ன பிரச்னைகளைத் தீர்த்து வைப்பேன்’ என்று பரப்புரை செய்கிறார்கள், தங்கள் வாக்குறுதிகளை அச்சடித்து துண்டுப் பிரசுரம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் நீதிமன்ற வளாகங்களில்தான் செய்கிறார்கள்.

ஆனால்… தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடத்தும் அலுவலர்களோ அண்மையில் ஓர் புது உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். அது என்னவென்றால்… ’பார் கவுன்சில் விதிகள் 37(2)ன்படி வேட்பாளர்கள், ‘தவறான செல்வாக்கு’ செலுத்தி ஓட்டுகள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாக்கு சேகரிக்கும்போது வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகள், சுய விளம்பரங்கள், தற்புகழ்ச்சி மூலமாக வாக்கு சேகரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது’ என்கிறது தமிழ்நாடு பார் கவுன்சில்.

அதாவது பார் கவுன்சிலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் நீதிமன்ற வளாகங்களில் துண்டுப் பிரசும் விநியோகிக்கக் கூடாது. ’நான் இந்த எண்ணில் போட்டியிடுகிறேன் எனக்கு வாக்கு அளியுங்கள்’ என்று பிரசாரம் செய்யக் கூடாது.

இந்தக் கட்டுப்பாடுகளுக்கு பதில் அளிக்கும் வகையில்தான் மதுரையில் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்களை ஒரே மேடையில் ஏற்றி, ‘கனவுகளும் கருத்துகளும்’ என்ற தலைப்பில் ஒரு சிந்தனை அரங்கத்தையே ஏற்பாடு செய்தது , ‘லாஸ் சட்ட செயல்பாட்டு மையம்’ என்ற அமைப்பு.

இந்த நிகழ்வு பற்றி பார்க்கும் முன் இந்த நிகழ்வின் நெறியாளரான வழக்கறிஞர் ஷாஜி செல்லன் நம்மிடம் இதுகுறித்துப் பேசுகிறார்.

” தமிழ்நாடு தவிர எங்கேயுமே இப்படி ஒரு கட்டுப்பாடு கிடையாது. போஸ்டர், பிளக்ஸ் போர்டுகளை தடை செய்வது வரவேற்கத் தகக்து. ஆனால் ஒரு வேட்பாளர் ஒரு பிட் நோட்டீஸ் கூட கொடுக்கக் கூடாது என்பது தவறான முன்னுதாரணம்.

பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பதால் நீதிமன்ற வளாகம் அசுத்தமாகிவிடுகிறது என்று இதற்குக் காரணம் சொல்கிறார்கள். நகைச்சுவையாக இருக்கிறது. நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்காக பிரசாரம் செய்வதால் அசுத்தமாகிவிடுமாம். ஒருவேளை துண்டுப் பிரசுரங்களில் சில நீதிமன்ற வளாகத்தில் விழுந்து கிடந்தால் அதை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யுங்கள்.

வேட்பாளர்களுக்கு அறிவுரை கூறலாம். துண்டுப் பிரசுரங்கள் இத்தனை சென்டி மீட்டர் அளவுதான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யுங்கள். ஆனால் துண்டுப் பிரசுரங்களே விநியோகிக்கக் கூடாது என்பது அடிப்படை ஜனநாயகத்துக்கு எதிரானது.

இது வேட்பாளர்களுக்கு மட்டுமான உரிமை மறுப்பு கிடையாது, இந்த பார் கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்குமான உரிமை மறுப்புதான் இந்த நடவடிக்கை’’ என்கிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன்.

எப்படி?

Bar Council Election Mini Series 5

”உதாரணத்துக்கு மதுரையில் ஒரே ஒரு பெண் வழக்கறிஞர்தான் தேர்தலில் நிற்கிறார். நீதிமன்ற வளாகத்திலும், சட்ட வகுப்புகள் எடுப்பதன் மூலமும் அவர் ஒரு வட்டத்துக்கு தெரிந்தவர். இப்போது அவர் தேர்தலில் நிற்கிறார். அவர் தான் பார் கவுன்சில் தேர்தலில் நிற்பதையும், தனக்கு இந்த எண் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எவ்வாறு மற்ற வழக்கறிஞர்களுக்கு தெரியப்படுத்துவார்? தேர்தலில் நிற்கும் தன்னைப் பற்றிய அடிப்படைத் தகவலைக் கூட மற்றவர்களுக்குத் தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று சொன்னால் தேர்தலில் எதற்காக நிற்கிறோம்?

மதுரை என்பது ஒரு தொகுதி என்று வரையறுத்து, நீங்கள் மதுரைக்கார் அதனால் உங்களைத் தொகுதிக்குள் அனைவருக்கும் தெரியும், எனவே நீங்கள் மதுரைக்குள் துண்டுப் பிரசுரம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அதில் ஒரு குறைந்தபட்ச நியாயம் உண்டு. அதுவும் குறைந்தபட்ச நியாயம் தான்.

ஆனால் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தமிழ்நாடு முழுதும் வாக்குகள் இருக்கின்றன. பார் கவுன்சில் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி முழுதும் ஒரே தொகுதிதான்.

மதுரையைச் சேர்ந்த நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றால் மதுரையில் வழக்கறிஞர்கள் மத்தியில் என்னைத் தெரியும். ஆனால் என் ஓட்டுகள் நாகப்பட்டினத்தில் இருக்கிறது, திருச்சியில் இருக்கிறது, சென்னையில் இருக்கிறது. அங்கிருக்கும் வழக்கறிஞர்களுக்கு எல்லாம் என்னை எப்படி தெரியும்?

எனவே பார் கவுன்சிலில் போட்டியிடும் வேட்பாளர்களை துண்டுப் பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று தடுப்பது அடிப்படை ஜனநாயகத்தைத் தகர்ப்பதாகவே கருதப்படும்’’ என்கிறார் வழக்கறிஞர் ஷாஜி செல்லன்.

இந்த உத்தரவை உற்று நோக்கினால்தான் தெரியும்… பார் கவுன்சிலில் புதியவர்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பழையவர்கள் செய்யும் தந்திரம் என்று. பழையவர்கள் என்றால் யார்?

(பயணம் தொடரும்)

எழுத்தாக்கம்: ஆரா

[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *