தமிழக பார் கவுன்சில் மட்டுமல்ல; இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சில்களுக்கும் அவற்றின் நிர்வாகம் காலாவதியான பின்னரும் தேர்தல் நடத்த முடியாத சூழல்தான் சில வருடங்களாகவே நிலவி வருகிறது. அதையெல்லாம் தாண்டி தேர்தல் நடப்பதற்கான சூழல் படிப்படியான சட்டப் போராட்டங்களுக்குப் பின்னால் கிடைத்ததை நாம் இப்போது பார்ப்போம்.
பார் கவுன்சில் தேர்தல் தாமதமானதற்கு அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக, அகில இந்திய பார் கவுன்சில் 2015ஆம் ஆண்டு ‘சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ்’ தொடர்பாக வகுத்த விதி கருதப்படுகிறது.
அதென்ன?
1976க்குப் பிறகு பதிவுபெற்ற அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது கல்விச் சான்றிதழ்களையும், வழக்கறிஞராகப் பணிபுரிந்தமைக்கான சான்றையும் (அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் தன் பெயரில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வக்காலத்து ஆவணம்) பார் கவுன்சிலுக்குக் கொடுக்க வேண்டும். இதில் மூத்த வழக்கறிஞர்களுக்கும் உச்ச நீதிமன்றத்தில் பதிவில் இருக்கும் வழக்கறிஞர்களுக்கும் விலக்கு உண்டு என்று அறிவித்தது இந்திய பார் கவுன்சில்.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது எல்லா மாநில பார் கவுன்சில்களிலும் தேர்தல் மிக நெருக்கமாக இருந்தது. சர்ட்டிஃபிகேட்
ஆஃப் பிராக்டிஸ் முறையை அமல்படுத்தினால், அந்தச் செயல்முறை (process) முடிவதற்கே நீண்ட காலம் ஆகும் என்பதால், பார் கவுன்சில் தேர்தல் தள்ளிப்போகும் என்று பல மாநிலங்களில் இருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் கருதினார்கள்.
ஆனால், “வழக்கறிஞராகப் பதிவு செய்தவர்களில் கணிசமானவர்கள் பிராக்டிஸ் செய்யாமல் இருக்கிறார்கள். அதாவது, வழக்கறிஞர் என்ற பதிவு பெற்றதோடு சரி… அவர்கள் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடாமல் இருப்பார்கள். நீதிமன்றங்களுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால், வழக்கறிஞர்களுக்கான பல்வேறு நல நிதிகளை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்.
இப்படி உழைக்கும் வழக்கறிஞர்களுக்கான சலுகை பொத்தாம் பொதுவாக எல்லாருக்கும் சென்று சேர்கிறது. இந்த சர்ட்டிஃபிகேட்
ஆஃப் பிராக்டிஸ் மூலம் நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் என்ற பதிவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு வேறு கன்சல்டன்சி நடத்தும் வழக்கறிஞர்களையும் பிரித்துப் பார்க்கலாம். உழைக்கும் வழக்கறிஞர்களுக்குக் கிடைக்கும் அரசின் சலுகைகளை மழைக்குக்கூட நீதிமன்றத்துக்குள் ஒதுங்காத பெயரளவு வழக்கறிஞர்கள் தட்டிப் பறிப்பதைத் தடுத்து நிறுத்தலாம்” என்றார்கள் சர்ட்டிஃபிகேட்
ஆஃப் பிராக்டிஸ் முறையை ஆதரித்தவர்கள்.
நல்ல திட்டம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால், இதனால் பார் கவுன்சில் தேர்தல் தள்ளிப்போவது எப்படி என்பதை இருட்டறையில் ஒரு விளக்கு தொடரில் மூத்த வழக்கறிஞர் வேல்முருகன் சொல்லியிருந்தார்.
அந்தப் பதிலை மட்டும் ஒரு மீள்பார்வை பார்த்துவிடுவோம்.
“சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ் சட்டதிட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பதிவுச் சான்றிதழையும், நீதிமன்ற வக்காலத்து ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அந்த முதல் கெடுவான ஆறு மாதங்கள் முடிந்ததும் மீண்டும் ஆறு மாத காலம் நீட்டித்தனர். அப்புறம் இன்னொரு ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதில் ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தி ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். அதற்குப் பிறகு இன்னொரு ஆறு மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதில் மாதத்துக்கு நூறு ரூபாய் அபராதம்.
சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸை முழுமைப்படுத்தினாலே மூன்று வருடங்கள் முடிந்துவிடும். ஆக, மூன்று வருடங்களுக்கு பார் கவுன்சில் தேர்தல் நடத்த முடியாது என்பது வெளிப்படையான விஷயம். இந்த நடைமுறை முடியாமல் தேர்தல் நடத்த முடியாது என்ற நிலைமை” என்பதே மூத்த வழக்கறிஞர் வேல்முருகனின் விளக்கம்.
ஆக, வழக்கறிஞர்களின், ‘வழக்காடிச் சான்றிதழ்’ கேட்பது என்ற பெயரில் பல பார் கவுன்சில்களின் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டன. அதில் ஒன்றுதான் தமிழக பார் கவுன்சில் தேர்தலும்.
அகில இந்திய பார் கவுன்சிலின் இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன. ‘சர்ட்டிஃபிகேட் ஆஃப் பிராக்டிஸ்’ முறை வழக்கறிஞர்கள் உலகத்துக்குள் சீர்திருத்தம் கொண்டுவரும் முயற்சிதான். ஆனால், இந்தச் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பார் கவுன்சில் தேர்தல்கள் தொடர்ந்து தள்ளிப் போடப்படுகின்றன. இதன்மூலம் ஏற்கெனவே பதவியில் இருக்கும் நிர்வாகிகள் கொல்லைப்புற தொழில்நுட்பத்தின் மூலம் அப்பதவிகளில் தொடர்கிறார்கள். மாறாக வழக்கறிஞர்களின் வாக்குகளைப் பெற்ற புதிய நிர்வாகம் அமைவது வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது. எனவே, பார் கவுன்சில் தேர்தல் விரைவில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே நீதிமன்றத்திடம் பல மூத்த வழக்கறிஞர்களின் இறைஞ்சுதலாக இருந்தது.
அங்கே ஆரம்பித்த சட்டப் போராட்டம்தான் பல படிகளைத் தாண்டி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து இப்போது பார் கவுன்சில் தேர்தலை நடக்க வைத்திருக்கிறது.
போராட்டங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
(பயணம் தொடரும்)
எழுத்தாக்கம்: ஆரா
[பாதை தெரியுது பார்-மினி தொடர் 1]