இன்று பார் கவுன்சில் தேர்தல்… சுமார் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வாக்கு செலுத்த 55 ஆயிரம் வழக்கறிஞர்கள் தயாராகிறார்கள். எத்தனை மனுக்கள், எத்தனை வழக்குகள், எத்தனை அமர்வுகள். எத்தனை விசாரணைகள், எத்தனை ஆணைகள்… இத்தனையையும் தாண்டி இதோ இன்று தமிழ்நாடு வழக்கறிஞர் சமுதாயத்தின் அடுத்த சில ஆண்டுகளுக்கான தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த பார் கவுன்சில் தேர்தலில் ஒவ்வொரு நகர்வும், பொது ஆர்வம் மிக்க வழக்கறிஞர்களின் பொதுநல மனுக்களால்தான் முன்னோக்கிச் சென்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. தேர்தல் நடக்குமா என்றிருந்த கால கட்டத்தில் இருந்து, இன்று தேர்தல் நடக்கிறது என்ற நிகழ்கால கட்டம் வரை பல்வேறு வழக்குகளுக்கும் அவற்றில் வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளுக்கும் பெரும் பங்கியிருக்கிறது.
இந்த நிலையில்தான் இந்த பார் கவுன்சில் தேர்தலை ஒட்டிய கடைசி வழக்கு என்று பெயர் பெற்றிருக்கிறது, வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு.
என்ன வழக்கு அது?
பார் கவுன்சில் தேர்தலில் முறைகேடுகளை ஒழிக்க வேண்டும் என்று நேர்மையான வழக்கறிஞர்களும், நீதிமன்ற உத்தரவுகளும் முனைப்பாகச் செயல்பட்டாலும். பல ‘பார்’களை சில வழக்கறிஞர்கள் விலை கொடுத்து வாங்கும் கொடுமையும் நடந்துகொண்டுதான் இருந்தது. இதைத் தடுக்க கடைசி நேர ஆயுதமாகத்தான் வழக்கறிஞர் செல்வி ஜார்ஜின் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு ‘பூத்’கள் இருக்கும். இந்த ‘பூத்’களை வாங்கிவிடுகிற சில வழக்கறிஞர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது குறிப்பிட்ட ‘பூத்’களில் தனக்கு ‘வாக்குறுதி’ கொடுத்த மாதிரியும், தான் வாரிக்கொடுத்த மாதிரியும் வாக்குகள் விழுந்திருக்கிறதா என்று கண்காணிப்பார்கள். இது எப்போது சாத்தியம் என்றால் பூத் வாரியாக எண்ணும்போது மட்டுமே சாத்தியம். இந்த நடைமுறை இருப்பதால் கட்டாயம் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டதுதான் மிச்சம்.
பணம் போன்ற தரங்கெட்ட விஷயங்களைச் செய்துவிட்டு அந்த பூத்தில் அதற்கேற்றது போல ஓட்டுகள் விழுகிறதா என்பதை தரகர்கள் மூலம் சில வேட்பாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதனால், வழக்கறிஞர்கள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாத சூழல் நிலவியது. இந்த நிலையில், வழக்கறிஞர்களின் ரகசிய வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாத்து அவர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக, ஓட்டுகளை பூத் வாரியாக எண்ணக்கூடாதெனவும், மாநில அளவில் ஒன்றாகக் கலந்து எண்ண வேண்டும் எனவும் உத்தரவிடக்கோரி வேட்பாளர்களில் ஒருவரான செல்வி ஜார்ஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 27) ரிட் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்து அவரது கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பூத் வாரியாக ஓட்டுகளை எண்ணக்கூடாதெனவும் மாவட்ட அளவில் ஒன்றாகக் கலந்து எண்ண வேண்டும் எனவும் நேற்று உத்தரவிட்டுள்ளது.
“பார் கவுன்சில் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகளை பூத் வாரியாக எண்ணாமல், மாவட்ட அளவில் எல்லா ஓட்டுக்களையும் ஒன்றாகக் கலந்து எண்ண வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறார்கள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் ஆகிய நீதிபதிகள்.
ஏற்கெனவே, பிரசாரத்தில் துண்டு பிரசுரங்கள்கூட கொடுக்கக் கூடாதென பார் கவுன்சில் உத்தரவிட்டபோது அதை எதிர்த்து முறையிட்டு அந்த உத்தரவைத் தளர்வு செய்ய வழிவகுத்தவர் இதே வழக்கறிஞர் செல்வி ஜார்ஜ் தான்.
இந்தத் தீர்ப்பு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
நம்மிடம் பேசினார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன்.
“பார் கவுன்சில் தேர்தலில், வழக்கறிஞர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்கத் தேர்தல் அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. ஆனால், பதிவாகும் வாக்குகளை பூத் வாரியாகவோ அல்லது மாவட்ட வாரியாகவோ எண்ணினால், எந்த பூத்தில் எவ்வளவு ஓட்டுகள் தனக்கு விழுந்துள்ளது என்பதை கில்லாடி வேட்பாளர்கள் கணக்கிட முடியும்.
ஓட்டுப்போடும் வழக்கறிஞர்களுக்கு இது மேலும் ஒரு நிர்பந்தமாகவும் மாறிவிடுகிறது. பதிவாகிற வாக்குகள் எந்த மாவட்டத்தில் எந்த பூத்தில் பதிவானவை என்பதை வேட்பாளர்கள் யூகிக்க முடியாத அளவுக்குத் தேர்தலை நடத்துவதுதான், ரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையாகும். அதுதான் தேர்தல் அதிகாரிகளின் திறமைக்கு அளவுகோல். மேலும் அப்படி ரகசியம் காக்கப்பட்டால்தான், நிர்பந்தங்களுக்கு இரையாகாமல், வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க இயலும்.
தான் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது மறைமுகமாகக் கண்காணிக்கப்பட்டால், வாக்காளர்களின் ரகசிய வாக்களிக்கும் சுதந்திரம் பறி போகிறது என்பதும் உண்மை. எனவே, பூத் வாரியாகவோ, மாவட்ட வாரியாகவோ வாக்குகளை எண்ணாமல், மாநில அளவில் எல்லா ஓட்டுக்களையும் ஒன்றாகக் கலந்து எண்ண வேண்டும். அப்படிச் செய்தால், வாக்காளர்களின் ரகசியம் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க இயலும். மேலும், இப்படி ஒன்றாகக் கலந்து வாக்குகளை எண்ணினால், பல தரங்கெட்ட முறைகேடுகளைக் குறைத்துவிட முடியும். எனவே, மரியாதைக்குரிய தேர்தல் அதிகாரிகள், பதிவாகிற வாக்குகள் ஒன்றாகக் கலந்து எண்ணப்படும் என அறிவித்தால், தேர்தல் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதோடு, நல்ல தேர்தலாகவும் இருக்கும்” என்கிறார் ஷாஜி.
மார்ச் 26ஆம் தேதி இதை வலியுறுத்தி இவர் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டார். மறுநாள் 27ஆம் தேதி இதையே வழக்காகப் போட்டார் செல்வி ஜார்ஜ். இந்த வழக்கால் பார் கவுன்சில் தேர்தலுக்கு முதல் நாள் நீதியை நிலைநாட்டும் ஒரு தீர்ப்பு வந்துள்ளது.
இதுமட்டுமல்ல பார் கவுன்சில் தேர்தல் பூத் பணிகளில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
பார் கவுன்சில் தேர்தல் நடக்குமா என்ற காலகட்டத்தில் இருந்து தேர்தல் நடக்கிறது என்ற காலகட்டம் வரை வந்திருக்கிறோம். இன்னும் இருக்கிறது அடைய வேண்டிய பாதை.
(தொடர்ந்து பயணிப்போம்)
எழுத்தாக்கம்: ஆரா
[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-6]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-7]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-8]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-9]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-10]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-11]