பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் 11

அரசியல் சிறப்புக் கட்டுரை

பார் கவுன்சில் தேர்தலில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கத் தடை, வாக்குறுதிகள் வழங்கத் தடை என்றெல்லாம் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், நீதிமன்றங்கள்தோறும் பிரசாரம் நடக்கத்தான் செய்கிறது. வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் நடக்க இன்னும் நான்கு நாள்களே இருக்கின்றன. மார்ச் 28ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி முழுதும் 55 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

சரி, அவர்கள் பதிவு செய்த வாக்குகள் எங்கே, எப்போது எண்ணப்படப் போகிறது? அதுதானே தேர்தலின் முழுமை. அந்த அம்சமே அறிவிக்கப்படாமல் தேர்தல் நடத்துவது எப்படி? இந்தக் கேள்விக்குப் போட்டியிடும் பல வழக்கறிஞர்களிடம் இருந்து பதில் இல்லை. பார் கவுன்சில் தேர்தல் அறிவிக்கையில் வாக்கு எண்ணிக்கை தேதி இல்லையே என்று ஆச்சர்யமாகப் பதில் சொல்கிறார்கள்.

தேர்தல் அறிவிப்பு என்றால், மனு தாக்கல், மனு பரிசீலனை, மனு வாபஸ், தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை ஆகிய அம்சங்கள் இடம்பெற வேண்டும். இதுதான் சட்டம். பார் கவுன்சிலுக்கும் இது பொருந்தும். ஆனால், பார் கவுன்சில் தேர்தல் அறிவிப்பில் முதல் நான்கு அம்சங்களும் தேதியோடு இடம்பெற்றிருக்கின்றனவே தவிர, தேர்தல் நடந்து முடிந்தபின் ஓட்டு எண்ணும் தேதியே குறிப்பிடப்படவில்லை. வாக்கு எண்ணப்படுவதுதானே தேர்தல் நடத்துவதற்கே முக்கிய நோக்கம். அதுதானே தேர்தல் என்ற செயல்திட்டத்தின் முழுமையாக இருக்க முடியும்.

வாக்கு எண்ணிக்கை தேதியே அறிவிக்காமல் எப்படி ஒரு தேர்தலை நடத்த முடியும் என்ற கேள்வி இப்போது ஆங்காங்கே வழக்கறிஞர் உலகத்துக்குள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

“எந்த ஒரு தேர்தலுக்கும் அடிப்படையாக அமைவது தேர்தல் அறிவிப்பு (Election Notification) தான். முறையற்ற விதிமீறிய தேர்தல் அறிக்கை தேர்தலையே செல்லாததாக்கிவிடலாம். நமது பார் கவுன்சில் தேர்தல் விதி 5இன்படி, தேர்தல் அறிவிப்பில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாள், வேட்புமனுத் தாக்கல் முடியும் நாள், வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்யும் நாள், வேட்புமனுக்களை வாபஸ் பெறும் தேதி, வாக்குப் பதிவு தேதி மற்றும் வாக்கு எண்ணும் இடம், நேரம், தேதி ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், தற்போது நடக்கும் தேர்தலுக்கான பார் கவுன்சில் அறிவிப்பில் (Election Notification) வாக்கு எண்ணும் தேதி, இடம், நேரம் ஆகியவை இல்லவே இல்லை. இப்படி வேறு ஏதேனும் தேர்தல் நடக்குமா? வாக்கு எண்ணிக்கை உண்டா, இல்லையா? உண்டென்றால், அது சென்னையிலா அல்லது டெல்லியிலா? வாக்கு எண்ணிக்கை எந்தத் தேதியில் நடைபெறும்? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலில்லை.

இது அப்பட்டமான பார் கவுன்சில் தேர்தல் விதிமீறல்தான். விதிகளின்படி முறையான தேர்தல் அறிவிப்பு (Election Notification) இல்லாமல் நடக்கும் ஒரு தேர்தல் சட்டப்படி செல்லுமா? செல்லாதா? வேட்பாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற பார் கவுன்சில் தான் அதைப் பின்பற்ற வேண்டாமா?’’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன்.

ஒவ்வொரு நிபந்தனையை எதிர்த்தும் பல பேர் நீதிமன்றத்துக்குச் சென்றார்களே… இதை எதிர்த்து ஏன் யாரும் நீதிமன்றம் செல்லவில்லை?

இதுவரை யாரும் நீதிமன்றம் போகவில்லை. பல வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நெருக்கடிக்குப் பயந்து இதுபோன்ற விஷயங்களை எதிர்க்கத் தயங்குகிறார்கள். இதுபற்றிக் கேள்வி கேட்டு, இதன் விளைவாகத் தேர்தல் மீண்டும் தள்ளிப் போய்விடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வோடு, முதலில் தேர்தல் நடைபெறட்டும் என்ற ஒற்றை மனநிலையில்தான் பல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், வழக்கறிஞர்களிலே மேலும் சிலர் வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிக்கப்படாததால் பிரச்சினை இல்லை என்கிறார்கள். சட்டங்களைவிட அவற்றை அமல்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்புகளே இந்திய நீதித் துறையில் முக்கியத்துவம் பெறுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

“இப்போது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் என்பது சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, நீதிமன்ற உத்தரவுகளாலும் நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டும்தான் நடக்கிறது. இந்தியாவில் நீதிமன்ற உத்தரவுகள் பல சமயங்களில் சட்டத்தைவிட அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

எத்தனையோ சட்டங்கள் நீதிமன்றத் தீர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன, திருத்தப்பட்டுள்ளன, மறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதோ இப்போதுகூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. எனவே, பார் கவுன்சில் சட்டப்படி தேர்தல் தேதி எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் போனால்கூட அது தேர்தலைப் பாதிக்காது. இதற்கு நீதிமன்றம் இன்னோர் உத்தரவிடலாம்” என்கிறார்கள்.

இன்னும் சில வழக்கறிஞர்களோ, “இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களைப் பார்த்தவர்கள் இந்தக் கேள்வியை எழுப்ப மாட்டார்கள். வாக்கு எண்ணுவதற்குத் தேதிகளை நிர்ணயிக்க முடியாது. வாரக்கணக்கில் செல்லும். Single transferable vote என்பதால் இந்த நிலைமை” என்று இன்னொரு விளக்கம் தருகிறார்கள்.

இப்படி பல விளக்கங்கள் கொடுத்தாலும், பார் கவுன்சில் தேர்தல் அறிவிக்கையில் வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடப்படவில்லை என்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது குழப்பங்கள் ஏற்படுமோ என்ற கேள்வியும் இப்போதே எழுகிறது.

விவாதிப்போம்…

(பயணம் தொடரும்)

எழுத்தாக்கம்: ஆரா

[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-6]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-7]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-8]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-9]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-10]

Bar Council Election Mini Series 8

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *