பார் கவுன்சில் கட்சி அரசியலுக்கான இடமா? அல்லது வழக்கறிஞர்களுக்கானதா? பார் கவுன்சிலை அரசியல் கட்சிகளின் மேடையாக மாற்றினால் விளைவுகள் என்னென்ன? அப்படி தேர்வு செய்யப்படுவோர் வழக்கறிஞர்களின் உணர்வுகளை பார் கவுன்சிலில் பிரதிபலிப்பார்களா அல்லது தங்கள் அரசியல் தலைவர்களின் உணர்வுகளுக்குச் செவிமடுப்பார்களா?
பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்களின் திசை நோக்கி இப்படி வரிசையாக வினாக்கள் முன் வைக்கப்படுகின்றன.
இந்த வினாக்களை நாம் பாமக வேட்பாளராக இருந்து இப்போது பார் கவுன்சில் வேட்பாளராக இருக்கும் கே.பாலுவிடம் முன்வைத்தோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிற்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு எதிராக பாமக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.பாலு. பாமக தொடர்புடைய பல்வேறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்தியிருக்கிறார். இவர்தான் இப்போது பார் கவுன்சில் தேர்தலில் 22ஆம் எண்ணில் போட்டியிடுகிறார்.
பார் கவுன்சிலில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?
இனி பாலு பதில் சொல்கிறார்.
“பொதுவாக வழக்கறிஞர்கள் தங்களை சமூகப் பணிகளில், சமூக இயக்கங்களில் ஈடுபடுத்திக்கொள்வது என்பது இயற்கையான ஒன்று. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து, மொழிப் போர் காலத்தில் இருந்து, சமூக நீதிக்கான போராட்டக் காலத்தில் இருந்து எல்லா போராட்டக் களங்களிலும் வழக்கறிஞர்கள்தான் முதன்மையாக நின்றிருக்கிறார்கள்.
அதனால் களத்தில் போராடுவதற்கோ, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கோ சட்ட ரீதியான அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் அதைச் செய்வது என்பது இயற்கையானது. எனவே, வழக்கறிஞர்களையும் அரசியலையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்கவே கூடாது. அரசியல் என்பது பொதுச் சேவையின் ஒரு பெரும் அங்கம்.
அந்த அடிப்படையில் நாடாளுமன்றத்திலும் சரி, சட்டமன்றத்திலும் சரி, மக்கள் அரங்கத்திலும் சரி வழக்கறிஞர்களின் பணி மகத்தானதாக இருந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது வழக்கறிஞராக எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஓர் அமைச்சராக எப்படி நடந்துகொள்ள வேண்டும், பார் கவுன்சில் உறுப்பினராக எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறைக்கு உட்பட்டுதான் இதுவரை அந்தப் பதவிகளை, பொறுப்புகளை வகித்த வழக்கறிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஏதோ அரசியல்வாதி என்றால் மோசமானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது மேம்போக்கான, மேலோட்டமான அரைவேக்காட்டுத் தனமான பார்வை. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது எடுத்துக் கொள்ளவும் கூடாது. .
அதனால் ஒரு பொறுப்புக்கு போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்கள் அந்தப் பொறுப்புக்கு வந்து பொறுப்புணர்வோடு முழுமையாக தன் கடமைகளைச் செயல்படுத்துகிறார்களா என்றுதான் பார்க்க வேண்டும். இன்னார்தான் இங்கே வர வேண்டும், இன்னார்தான் இந்தக் களத்தில் நிற்க வேண்டுமென்றால் அதுவே சமூக நீதிக்கு எதிரானதுதானே. அதற்கு அளவுகோலாக அரசியலை வைப்பது எப்படி முறையாகும்? இது மீண்டும் பழைய பாதைக்கே இட்டுச் செல்வதாகத் தோற்றம் அளிக்கவில்லையா?’’ என்று கேட்கிறார் பாலு.
துண்டுப் பிரசுரம் கொடுக்கக் கூடாது; வாக்குறுதிகள் அளிக்கக் கூடாது என்ற பார் கவுன்சில் இடைக்காலக் குழுவின் நிபந்தனைகளைப் பற்றியும் பாலுவிடம் கேட்டோம். ஏனெனில் இவர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று வாக்குறுதிகள் அளித்து ஓட்டு கேட்டு வருகிறார்.
“கடந்த கால பார் கவுன்சில் தேர்தல்களில் துண்டுப் பிரசுரங்கள் கொடுப்பதாகச் சொல்லி பல வேட்பாளர்களும் கொடுப்பார்கள். உயர் நீதிமன்ற வளாகத்தில் குப்பைகளாக அவை குவிந்து கிடப்பதை நானே பார்த்திருக்கிறேன். பின் அவற்றை அள்ளுவார்கள். இந்த முறை அந்த வழக்கம் இல்லாமல் போயிருப்பது நல்ல அணுகுமுறை. வழக்கறிஞர்கள் கற்றறிந்தவர்கள். துண்டுப் பிரசுரங்கள், காகிதங்கள் மூலமாகத்தான் அவர்களை அணுக வேண்டும் என்று அவசியமில்லை” என்று துண்டுப் பிரசுரங்கள் தடைக்கு வரவேற்பு தெரிவிக்கும் கே.பாலு மேலும் நம்மிடம் பேசுகையில்,
“ஆனால், அதேசமயத்தில் பார் கவுன்சில் உறுப்பினராக நான் வெற்றி பெற்றால் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்லக் கூடாது என்பது ஆரோக்கியமானதே அல்ல. நான் செல்லுமிடங்களில் எல்லாம் வாக்குறுதிகள் அளிப்பதோடு இதையும் சொல்லி வருகிறேன்” என்கிறார்.
ஆக, பார் கவுன்சில் என்பது அரசியலுக்கு அந்நியமானது அல்ல என்கிறார் பாலு.
இன்னோர் அரசியல் வேட்பாளரைச் சந்திப்போம்…
(பயணம் தொடரும்)
எழுத்தாக்கம்: ஆரா
[பாதைதெரியுது பார் மினிதொடர்-1]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-6]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-7]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-8]
[பாதை தெரியுது பார் மினிதொடர்-9]