பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் – 1

அரசியல் சிறப்புக் கட்டுரை

பார் கவுன்சில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ‘வரும், ஆனால் வராது’ என்று வடிவேலு பாணியில் யூகங்களும், அதற்கு ஏற்றாற்போல் தடைக் கற்களும் போடப்பட்ட நிலையில், பலகட்ட போராட்டங்களைத் தாண்டி வரும் மார்ச் 28ஆம் தேதி தேர்தலுக்கான நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு பார் கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் பதவிக் காலம் இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால், ஒருவரல்லர்; இருவரல்லர்… பல பேர் மீண்டும் தேர்தல் வந்துவிடக் கூடாது என்பதற்காக பலமாகக் காய் நகர்த்தினர். ஆனால், பல்வேறு தடைகளைத் தாண்டி சட்ட சமர்கள் நிகழ்த்தி, இதோ மார்ச் 28ஆம் தேதி தேர்தல் என்று உச்ச நீதிமன்றம் வரை போய் தேர்தல் தேதியை உறுதி செய்தாகிவிட்டது.

“அகில இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961 என்பது வழக்கறிஞர்கள் தொழிலை முறைப்படுத்துவதற்காகவும் ஒழுங்குபடுத்துவதற்காகவும், அவர்களுடைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் 1961ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக பிரிட்டிஷ் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட, ‘இந்தியன் பார் கவுன்சில் ஆக்ட்’ என்ற சட்டம்தான் நடைமுறையில் இருந்தது. அப்போதெல்லாம் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில்தான் வழக்கறிஞர்கள் என்ரோல்மென்ட் எனப்படும் பதிவைச் செய்துகொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சரி செய்து இந்தியாவில் இருக்கும் அனைத்து வழக்கறிஞர்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனையின் விளைவாகத்தான் 1961இல் அகில இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி மாநிலங்களுக்கென்று ஒரு பார் கவுன்சில், மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அகில இந்திய பார் கவுன்சில் என்ற இரண்டு அமைப்பு முறை உருவாக்கப்பட்டது. அந்தந்த மாநில பார் கவுன்சிலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்களாகச் செல்வர்” என்பதை எல்லாம் நாம் ஏற்கெனவே இருட்டறையில் ஒரு விளக்கு மினி தொடரில் விரிவாகப் பார்த்திருக்கிறோம்.

இப்போது, ‘பாதை தெரியுது பார்’ தொடரில், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்துவந்த முள் பாதைகளையும், அதைத் தாண்டி நீதி நிலைநாட்டப்பட்டதையும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான அட்டவணைகள் பல கொடுக்கப்பட்டு, பின் அவை மாற்றப்பட்டு இறுதியாகத் தேர்தல் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் என்று அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்தது. பிப்ரவரி 1ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 15ஆம் தேதி வரை மனுத் தாக்கல் செய்தனர். மனுவை வாபஸ் பெற 22ஆம் தேதி கடைசி நாள். 23ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மார்ச் 1ஆம் தேதி போட்டியிடுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்போது பார் கவுன்சில் தேர்தல் களத்தில் 192 வேட்பாளர்கள் நிற்கிறார்கள். அனைவருக்கும் அவரவரது எண்ணே சின்னமாகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 56 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்காளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் வாக்கு செலுத்தி இந்த 192 வேட்பாளர்களில் இருந்து 25 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அனைத்து வாக்காளர்களுக்கும் 25 வாக்குகள் உண்டு. இந்த 25 வாக்குகளையும் முன்னுரிமை அடிப்படையில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது பெரும்பாலான முன்னுரிமை பெற்றவர்கள் அந்த வரிசையின்படி 25 பேர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

இந்த 25 பேரும் தங்களுக்குள் ஒன்றுகூடி ஒருமனதாகவோ அல்லது தேர்வின் மூலமாகவோ தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரையும், துணைத் தலைவரையும் தெரிவு செய்வார்கள்.

இந்தத் தேர்தல் நடைமுறை இப்போது தெளிவாக இருக்கிறது. ஆனாலும் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் பிரசாரம் செய்வதில்கூட இப்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வழக்கறிஞர் என்றால் தன் கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். ஆனால், தேர்தலில் போட்டியிடும் தனக்காக நீதிமன்ற வளாகத்தில் வாதாடக் கூடாதா… அதாவது, பிரசாரம் செய்யக் கூடாதா என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.

தேர்தல் முடியும் வரை கட்டுப்பாடுகள் குறையாதா என்று குமுறுகிறார்கள் பல வழக்கறிஞர்கள்.

அவர்களின் வாதங்களோடு தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பற்றிய பயணத்தைத் தொடர்கிறோம்.

(பயணம் தொடரும்…)

எழுத்தாக்கம்: ஆரா

மினி தொடர்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம், சாத்தியமா? – முரளி சண்முகவேலன்

Bar Council Election Mini Series 1

[பாதை தெரியுது பார் மினிதொடர்-2]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-3]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-4]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-5]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-6]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-7]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-8]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-9]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-10]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-11]

[பாதை தெரியுது பார் மினிதொடர்-12]

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *