”அ.தி.மு.க., ஆட்சியில் துணைவேந்தர் பதவி, 50 கோடி ரூபாய் வரை விற்கப்படவில்லை. அதில் எந்த தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு கவர்னரே” என அக்கட்சியின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தபோது மோசமான அனுபவம் ஏற்பட்டது. அங்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பன்வாரிலால் கருத்துக்கு அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்போதே மறுப்பு தெரிவித்தேன்!
தர்மபுரியில் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியது போல், தமிழகத்தில் எந்த நிகழ்வும் இல்லை.
தமிழக ஆளுநராக அவர் இருந்தபோது, துணைவேந்தர் நியமனத்திற்கு கோடிக் கணக்கில் வாங்குகிறார்கள் என இதேப்போன்று ஒரு விழாவில் பேசினார்.
நான் அப்போதே அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளேன்.
ஒரு துணைவேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன் தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அக்குழு 10 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு அனுப்புகிறது.
அதில், மூவரை தேர்வு செய்து அவர்களிடம் கவர்னர் நேர்காணல் நடத்துகிறார். இந்த நேர்காணலில் அரசுக்கோ, முதல்வருக்கோ மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருகோ எந்தவித தொடர்பும் இல்லை.
இந்நிலையில், தமிழகத்தில் துணைவேந்தர் பதவி, 40 கோடி முதல், 50 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது என பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
தவறுகள் நடந்திருந்தால் கவர்னரே முழு பொறுப்பு!
தற்போது, பஞ்சாப் மாநிலத்தில் துணைவேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு, அங்கு கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு இல்லை என்பதால் அவர் தமிழகத்தின் மீது குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க, முழுக்க கவர்னரை சார்ந்தது. அதில் எந்த தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு கவர்னரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ, முதல்வருக்கோ, கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை.
ஒருவேளை அவ்வாறு பணம் கைமாறி இருந்தால், அது கவர்னரையை சாரும். மேலும், 22 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என அவர் சொல்கிறார்.
இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்திருந்தால், அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல்.” என்று அவர் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”தனியார் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம் மாநில அரசிற்கு இல்லையா?” – மநீம கேள்வி
எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?: ஓபிஎஸ் தரப்பு கேள்வி!