‘துணைவேந்தர் பதவிக்கு ரூ.50 கோடியா?’: விசாரணை நடத்த இ.கம்யூ வலியுறுத்தல்!

அரசியல்

“கடந்த காலத்தில் நடைபெற்ற துணைவேந்தர் நியமனம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்று (அக்டோபர் 21) செய்தியாளர்களிடம் பேசியபோது, ”தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் நான் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் மிக மோசமானதாக இருந்தது. அங்கு துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது” என்ற அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆளுநரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் துணைவேந்தர் நியமனம் குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூபாய் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நான்காண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

அந்தக் காலத்தில் 27 துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் ’புகாரை’ வெறும் செய்தியாக கடந்து சென்றுவிட முடியாது. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை அரசு விரிவாக விசாரிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள துணைவேந்தர் நியமனம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் தவறுகள் நேர்ந்திருப்பதை உறுதி செய்து, ஊழல் முறைகளில் துணைவேந்தர் பதவியில் அமர்ந்துள்ளவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் துணைவேந்தர் பணி நியமனம் ஊழல், முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காத, வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமைந்திட, தமிழக அரசு பொருத்தமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

துணைவேந்தர் நியமன அதிகாரம், கவர்னரிடம் இருப்பதை நீக்கி, மக்கள் பிரதிநிதித்துவ அரசிடம் வழங்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றத் தடை? ஸ்டாலின் ஆலோசனை! 

கனடாவில் துப்பாக்கி விற்பனைக்கு தடை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *