வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம், கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தது. மேலும், வேலையில்லா திண்டாட்டம், இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டம் மிகவும் தீவிரமடைந்ததால், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை நேற்று (ஆகஸ்ட் 5) ராஜினாமா செய்தார். இதனையடுத்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
டெல்லி வந்த அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். மேலும். இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார். டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை ஷேக் ஹசீனா சந்தித்தாக தெரிகிறது.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின் போது வங்கதேச எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவது, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பது, அவரை வேறு நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் நடக்கும் உள்நாட்டு கலவரம் காரணமா ஏர் இண்டியா மற்றும், இண்டிகோ விமான சேவை, ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாரிஸ் ஒலிம்பிக் 2024: கடைசி நம்பிக்கையும் போச்சு… வெண்கலத்தை தவறவிட்ட லக்சயா சென்
டாப் 10 நியூஸ்: கோவை மேயர் தேர்தல் முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!