வைஃபை ஆன் செய்ததும், நேற்று காலமான பங்காரு அடிகளார் திருவுடல் தமிழ்நாடு அரசின் இறுதி மரியாதையோடு அடக்கம் செய்யப்படும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”பங்காரு அடிகளாரின் மரணச் செய்தி வெளிவந்த சில மணி துளிகளிலேயே தமிழ்நாடு அரசு அவருக்கு முழுமையான அரசு மரியாதைகளோடு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அறிவித்தது.
நேற்றிலிருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை உள்ளிட்ட பல்வேறு அரசியல் ஆளுமைகள் மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதே நேரம் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆதிபராசக்தி செவ்வாடை மன்றத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் திரளாக வந்து தங்களது அம்மாவின் திருவுடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
இன்று (அக்டோபர் 20) காலை முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமைச்சரவை சகாக்களோடு மேல்மருவத்தூர் சென்றார். அங்கே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்தினரிடம் தனது இரங்கலை தெரிவித்தார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி என பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை பங்காரு அடிகளாரின் இறுதி சடங்குகள் தமிழ் சித்தர் முறைப்படி நடப்பதற்கு முன்பாக அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது ஆளுநர் ரவி பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இறுதி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆளும் திமுகவினர், எதிர்க்கட்சியான அதிமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்காரு அடிகளாருக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அது மட்டுமல்ல பல்வேறு பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் திரண்டு வந்து பங்காரு அடிகளாருக்கு தங்களுடைய மரியாதையை செலுத்தினார்கள். இது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.
பங்களாரு அடிகளார் மரணமடைந்த நிலையில் அவரைச் சுற்றி இத்தனை அரசியல் புள்ளிகள் திரண்டனர். அவர் இருந்தபோது ரகசியமாகவும், பகிரங்கமாகவும் பல அரசியல் புள்ளிகள் அவரை சந்தித்துள்ளனர். ஆனால், பங்காரு அடிகளார் அரசியலில் சிக்கிக் கொண்டவர் கிடையாது.
இந்த கட்சிக்கு ஆதரவானவர், அந்தக் கட்சிக்கு எதிரானவர் என்ற முத்திரை அவர் மீது எப்போதும் விழுந்ததில்லை. தனது சமூகத்தை சேர்ந்தவர்கள் கட்சி நடத்திய போதும் அந்த அரசியல் வலையிலும் எப்போதும் சிக்கிக் கொள்ளாதவர் பங்காரு அடிகளார்.
அதே நேரம் அவர் அரசியலை விட்டு தள்ளி இருந்தாலும் அவரை விட்டு அரசியல் தள்ளி நின்றதில்லை. 1980 களில் இருந்து இதோ நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் பங்காரு அடிகளாரின் பங்கு இருந்திருக்கிறது என்கிறார்கள் அஞ்சலி செலுத்த திரண்ட அரசியல் வட்டாரத்தினர்.
1980 களில் திமுகவின் முக்கிய புள்ளியாக திகழ்ந்த ஆற்காடு வீராசாமி ‘எதிரொலி’ என்னும் பத்திரிக்கை நடத்தி வந்தார். அதிலே மூத்த பத்திரிக்கையாளர் சின்ன குத்தூசி அப்போது பங்காரு அடிகளாரை பற்றிய விமர்சனக் கண்ணோட்டத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
இதை பார்த்துவிட்டு அடிகளாரின் அடிப்பொடிகள், அவரிடம் சென்று, ‘உங்கள பத்தி தவறாக எழுதி இருக்காங்க’ என்று தெரிவித்தனர். அவர் அதை பெரிது படுத்தவில்லை. அதே நேரம் அடிகளாரைச் சுற்றியிருந்தவர்கள் அந்த தேர்தலில் ஆற்காடு வீராசாமி போட்டியிட்ட ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு சென்று பெண்களிடம் காமாட்சி விளக்கை ஏற்றி, ‘நமது அம்மாவுக்கு எதிரானவர் ஆற்காடு வீராசாமி. அவருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்று விளக்கின் மீது சத்தியம் வாங்கிக் கொண்டதாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த தேர்தலில் ஆற்காடு வீராசாமி தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் திமுக சீனியர்கள்.
ஒவ்வொரு தேர்தலிலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பல்வேறு வேட்பாளர்கள் பங்காரு அடிகளாரை மேல்மருவத்தூருக்கு தேடிச்சென்று தரிசனம் செய்து அவரது ஆசிகளையும் ஆதரவையும் கேட்பார்கள். ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவையோ எதிர்ப்பையோ அவர் வழங்கியது இல்லை. அதே நேரம் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வெவ்வேறு வேட்பாளர்களுக்கு ஆதிபராசக்தி மன்றத்தினர் தேர்தல் பணி ஆற்றியிருக்கிறார்கள் என்பது சுவாரசியமான உண்மை.
இன்று மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், ‘கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் ஆதிபராசக்தி மன்றத்தினர் வலிமையாக இருப்பதை அறிந்து எங்களது சில நிர்வாகிகள் மேல்மருவத்தூர் சென்று அங்கிருக்கும் சில நிர்வாகிகளை சந்தித்தனர்.
இதன் விளைவாக ஜவாஹிருல்லாவுக்கு பாபநாசம் தொகுதியில் ஆதிபராசக்தி மன்றத்தினர் தேர்தல் பணியாற்றினார்கள் என்பது பெரிதாக வெளியில் பேசப்படாத அரிதான உண்மை’ என்று நெகிழ்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இவ்வாறு 1980 களில் இருந்து கடைசியாக நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வரை தமிழ்நாடு பாலிடிக்சில் பங்காரு அடிகளாரின் பங்கு நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக அதேநேரம் பாசிட்டிவாக இருந்திருக்கிறது. பங்காரு அடிகளாரை அரசியல் உலகமும் சமூகமும் என்றும் நினைவுகூர்ந்துகொண்டே இருக்கும்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.