சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 19) தடை விதித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர் விதிமுறைகளை மீறி பல்கலையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள சொந்தமாக PUTER என்ற அமைப்பை தொடங்கி, போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாக அப்பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று சாதிப்பெயரைச் சொல்லி ஊழியரை அழைத்ததாகவும் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர்.
எனினும் இதுதொடர்பான வழக்கில் சேலம் நீதிமன்றம் ஜெகநாதனுக்கு ஜாமீன் வழங்கியது.
இதனை எதிர்த்து காவல்துறை தரப்பிலும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஜெகநாதன் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாளை (இன்று) உத்தரவு வழங்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
அதன்படி இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதாகவும், எனவே வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கவும் அரசு தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்ததுடன், ஆவணங்களை சரிபார்த்ததில் சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்றும், ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதி, தடையை நீக்க வேண்டும் என்றால் தனியாக மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் அப்பீல் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
’டிடி தமிழ்’… மக்கள் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகள் இருக்கும்: எல்.முருகன்