ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில்.. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் 24ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் கடைசிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் மூலம் சில காய் நகர்த்தல்கள் செய்யப்படுவதாக நாம் தமிழர் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
திண்ணைப் பிரச்சாரம் அனுமதி இல்லாமல் மேற்கொண்டதாக நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்… இது தொடர்பாக இன்று அவர் தேர்தல் அலுவலரை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பரப்புரை கூட்டத்தில் அருந்ததியர்கள் தொடர்பாக பேசிய விவகாரத்தில் விளக்கம் கேட்டு கட்சியின் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிப்ரவரி 21ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சமூக நீதி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் வடிவேல் ராமன் புகாரின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
“13 -2 -2023 அன்று மாலை நாம் தமிழர் கட்சியின் சீமான் ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சாரம் செய்த போது இங்கு வாழும் அருந்ததியர்கள் தூய்மை பணிக்காக விஜய நகர பேரரசு காலத்தில் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் எனவும்,
அருந்ததியர் மக்களின் வரலாற்றை அடிப்படை ஆதாரம் இன்றி கேவலமாக சித்தரித்தும் இம்மக்களின் அடிப்படைத் தொழில் தூய்மை பணியாக உருவாக்கப்படுத்தியும் பொது வெளியில் அவமானப்படுத்திய சீமான் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று பிப்ரவரி 16ஆம் தேதி வடிவேல் ராமன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மீது தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அருந்ததியர் மக்கள் மற்றும் சமூக நீதி மக்கள் கட்சி சார்பாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார்களின் அடிப்படையில் பிப்ரவரி 21ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுப்பிய நோட்டீஸில்,
“மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 123 (4) இன் படி சாதி சமூகம் மற்றும் மொழியின் அடிப்படையில் வெவ்வேறு வகுப்பு குடிமக்களிடையே பகை அல்லது வெறுப்பை தூண்டுதல் மற்றும் பிரிவு 125 படி தேர்தல் தொடர்பாக பல்வேறு வகுப்பினரிடையே பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளை மீறி தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற தவறியதால் தேர்தல் நடத்தை சட்ட விதிகளின்படி கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டின் மீது கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் விளக்கம் தெரிவிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என்று தேர்தல் நடத்தும் அலுவலர் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று மாலைக்குள் மேனகா நவநீதன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
அவர் அளிக்கும் விளக்கம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படவும் அதன் மூலம் கடைசி மூன்று நாட்கள் அவர்கள் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பும் தடைபடவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தகவல் ஈரோடு முழுதும் பரவி வருகிறது.
இதுகுறித்து ஈரோட்டில் தேர்தல் பணியாற்றி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசுவிடம் பேசினோம். அருந்ததியர் பற்றி சீமான் அவதூறாக பேசிவிட்டார் என்ற சர்ச்சையில் ஈரோட்டில் வாக்கு சேகரிக்க சென்றபோது தாக்கப்பட்டவர் அன்பு தென்னரசு. அவர் நம்மிடம்,
“சீமான் பேசிய வார்த்தைகளில் ஒரு சொல் கூட தவறாக இல்லை. வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படிதான் பேசினார். அருந்ததியர் சமூக நிர்வாகிகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள்.
எங்கள் கட்சியில் வேட்பாளர்களாகவும் போட்டியிட்டிருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியினர் உயிர்ம நேயர்கள். அவர் பேசிய காணொளி இருக்கிறது. ஊடகங்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இப்படி ஒரு புகாரை சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.
ஆனால்… 24 மணி நேரத்துக்குள் பதில் சொல்லுங்கள் என்று எங்கள் வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் திமுக கட்டுப்பாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை இதற்கு மேல் எப்படி நிரூபிக்க முடியும்?
தேர்தல் களத்தில் இலவசங்கள் கொடுக்கக் கூடாது என்பது சட்ட விதி. குக்கர் கொடுக்கிறார்கள், கொலுசு கொடுக்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள். இது பற்றியெல்லாம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் கொடுத்ததா? எங்கள் அண்ணன் சீமான் பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்றும், எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால் கூட அவருக்கு வெற்றிச் சான்றிதழை அளிக்கக் கூடாது என்பதற்காகவும் தான் இதுபோன்று நடக்கிறது. இதை நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.
-ஆரா
சென்னையில் நிலநடுக்கம்? மெட்ரோ விளக்கம்!
அனுமதியின்றி பிரச்சாரமா? நாம் தமிழர் வேட்பாளர் மேனகா பதில்!