முன்னாள் அமைச்சர் சம்பத்துக்கு முன் ஜாமீன்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Aara

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கி கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயத்தில், இந்த வழக்கில் கைதான இருவருக்கு பண்ருட்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல் குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத். சம்பத்திடம் உதவியாளராக இருந்தவர் குமார். சம்பத்தின் சொந்த பெரியப்பா மகன் ராமச்சந்திரனின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார் குமார்.

மாஜி அமைச்சர் குடும்பத்தினருக்கும், ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டு அது பூதாகரமானது. மாஜி அமைச்சர் சம்பத் உதவியாளராக இருந்த குமாரின் மாமனாரான ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 2ஆம் தேதி பண்ருட்டி போலீஸார் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் ஏசி பெட்டிக்குள் 60 லட்சம், 200 ஏக்கர்: மாஜி அமைச்சர் சம்பத் தலைமறைவு? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையே பதியப்பட்ட வழக்கில் (குற்ற எண் 2/2023) முதல் குற்றம் சாட்டப்பட்டவராக (ஏ1) எம்.சி தங்கமணி, ஏ2 வாக எம். சி. சம்பத், ஏ3 பழனி, ஏ4 கள்ளிப்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில் கள்ளிப்பட்டு ராஜேந்திரன் மற்றும் ராதா ஆகிய இருவரை சம்பவம் நடந்த அன்றே போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தை இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

சட்ட ரீதியாக எம்.சி சம்பத் மற்றும் அவரது சகோதரர் எம்.சி தங்கமணி இருவரும் முன் ஜாமீன் கேட்டு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியின் செயலாளர் மாசிலாமணி தாக்கல் செய்தார்.

bail for former minister M.C.Sambath


இந்த மனு நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜவஹர் முன்னிலையில் ஜனவரி 5 காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாசிலாமணி தலைமையில் 50 அதிமுக வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

bail for former minister M.C.Sambath

இந்த விசாரணையின் போது எதிர் மனுதாரரான குமார் சார்பாக பிரமாண வாக்கு மூலத்துடன் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “நான் இந்த மனுவில் நிகழ்நிலை புகார்தாரர் ஆவேன். கடந்த 02.01.2023 அன்று காலை 07.30 மணியளவில் எனது மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் ஆகியோர் வீட்டிலிருந்தபோது மேற்படி முதல் தகவல் அறிக்கையில் உள்ள எதிரியான எம்.சி சம்பத், பழனி, கள்ளிப்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் 10 நபர்களுடன் வந்து எனது மாமனாரை வெளியில் வாடா …. மகனே, உன்னை அடித்தால் தான் பணம் வரும் என பனியனுடன் வீட்டிலிருந்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் அடித்ததில் என் மாமனாரும், மாமியாரும் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்கள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

bail for former minister M.C.Sambath

இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் சார்பில் வழக்கறிஞர் மாசிலாமணி வாதிட்டார்.

“முன்னாள் விழுப்புரம் அரசு வழக்கறிஞர் தமிழரசனும், குமாரும் ராமச்சந்திரனின் மகள்களைத் திருமணம் செய்தவர்கள். புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமாரும், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சந்திரனும் தமிழரசன் உறவினர்கள் ஆவர்.

தற்போது பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பொறுப்பு பார்க்கும் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு புனையப்பட்ட வழக்கு. நடக்காத சம்பவத்துக்கு பிரமாண வாக்குமூலம் கொடுத்துள்ள குமாருக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமே இல்லை.

இது ஒரு குடும்ப பிரச்சினை, ஊர் பிரச்சினை. முன்னாள் அமைச்சரால் எந்த பிரச்சனையும் வராது. அந்த சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை” என்று அவர் வாதத்தில் குறிப்பிட்டார்.

அரசு வழக்கறிஞர் பக்கிரி, ”எம்.சி சம்பத் ஃபவர் ஃபுல் நபர். அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளார். அதனால் பிணையில் விடக்கூடாது” என வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜவஹர் உத்தரவை நேற்று மாலைக்கு தள்ளி வைத்தார்.

மீன்டும் மாலை விசாரணை வாதங்களின் அடிப்படையில் முதல் எதிரி எம்.சி.தங்கமணிக்கு முன்ஜாமீன் மறுத்தும்,

இரண்டாவது எதிரி எம்.சி சம்பத்துக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் செல்லவும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.

முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அவரது சகோதரருக்கு கிடைக்காததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

வணங்காமுடி

குடும்பத்தை வீட்டுக்குள் பூட்டி வைத்து மிரட்டிய இளைஞர்: சென்னையில் பரபரப்பு!

சென்னையில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel