வருமான வரித்துறையினர் மீது தாக்குதல்: 19 பேருக்கு ஜாமீன்!

Published On:

| By Monisha

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 19 பேருக்கு கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கடந்த மே 26 ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்தினர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். காயமடைந்த அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 19 பேருக்கும் கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மோனிஷா

எதிர்க்கட்சிகள் மீட்டிங்: தேதியை மாற்றக் கோரும் மு.க.ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: கையில் கட்டுடன் சசிகலா… தஞ்சை திருமணத்தில் மூவர் சந்திப்பு நிகழுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel