முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதன் மூலம் ஏற்கனவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள செந்தில்பாலாஜி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் அவர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத் துறை இந்த வழக்கின் டிஜிட்டல் ஆவணங்களை திருத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், இன்னும் செல்வாக்குமிக்க நபராகவே இருக்கிறார். அவரை ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்று வாதிடப்பட்டது.
‘இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் தான் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்’ என்றும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார்
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘சிறையில் அடைக்கப்பட்டும் தொடர்ந்து எட்டு மாதங்களாக செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தார். குறிப்பாக இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்தார்.
இது சிறையில் இருக்கும் போதும் அவர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் என்பதையும். அவருக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும் காட்டுகிறது.
அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் தமிழகத்தில் ஆட்சியை நடத்தும் அதே கட்சியை சேர்ந்த எம்எல்ஏவாக தொடர்கிறார். இதன் மூலம் மனுதாரர் தொடர்ந்து அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தி வருகிறார் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.
எனவே ஜாமீனில் விடுவித்தால் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது.
மனுதாரர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதால் நேர்மையானவர்களுக்கு வேலை கிடைக்காமல், அவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் பணம் கொடுத்தவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதுபோன்ற வழக்கில் மனுதாரர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அது பொது நலனுக்கும் எதிரானது.
மனுதாரருக்கு எதிரான பணமோசடி குற்றத்தில் போதுமான ஆதாரங்களை அமலாக்கத் துறை சேகரித்துள்ளது. எனவே முழு அளவிலான விசாரணையை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையோ அல்லது மத்திய குற்றப் பிரிவோ மின்னணு ஆவணங்களை திருத்தியிருக்கலாம் என்ற வாதத்தையும் ஜாமீன் வழக்கில் ஏற்றுகொள்ள வில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மூன்று மாதங்களில் விசாரிக்க உத்தரவு
பிஎம்எல்ஏ பிரிவு 45(1)ன்படி ஜாமீன் வழங்குவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அவை, மனுதாரர் குற்றவாளி அல்ல என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், ஜாமீனில் விடுவித்தால் குற்றம் சாட்டப்பட்டவர் எந்தக் குற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்று நீதிமன்றத்தை திருப்தி படுத்த வேண்டும்.
இந்த இரண்டு நிபந்தனைகளின் படி மனுதாரர் இந்த வழக்கில் நீதிமன்றத்தை திருப்திப்படுத்தவில்லை என கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜாமீன் மறுத்துள்ளார்.
செந்தில் பாலாஜி 250 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, கடைநிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஆனால் செந்தில் பாலாஜி 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தும் அமைச்சராக நீடிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. இதனால் ஜாமீன் கிடைக்கும் என்று செந்தில் பாலாஜி தரப்பு நம்பிக்கையுடன் இருந்தது.
எனினும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், ஒரு எம்.எல்.ஏ.வாக மாநில அரசில் செல்வாக்குடன் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக அடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டிய சட்ட ரீதியான நிலைக்கு செந்தில்பாலாஜி தள்ளப்படுகிறாரா என்ற கேள்விக்கும் இன்றைய விசாரணை வித்திட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–கவிப்பிரியா
பா.ரஞ்சித்தின் ‘ஜெ பேபி’ ரிலீஸ் தேதி இதுதான்!
பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் குறைப்பு; பயணிகள் மகிழ்ச்சி
ஓடிடி-யில் வெளியாகும் ‘ப்ளூ ஸ்டார்’ வெளியீட்டு தேதி இதுதான்!
மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் காங்கிரசுக்கு நிதி கேட்டு ஸ்டிக்கர்!
கேட்டது ஒரு வாட்ச் பில் தானே!
🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🤣🤣🤣🤣🤣🤣🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️ எவ்ளோ உயரம் போனாலும் மனுசனுக்கு மமதை மட்டும் கூடாது 5 கட்சி பாலாஜி..