டிஜிட்டல் திண்ணை: டேட்டா ஷீட்…எடப்பாடி டெபாசிட்… ஸ்டாலின் போன் கால்- ஈரோடு ஹாட்!

அரசியல்

வைஃபை  ஆன்  செய்ததும் ஈரோடு அப்டேட்டுகள் வந்து விழுந்தன.  மெல்ல கிரகித்துவிட்டு மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.

“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் உச்சகட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். இந்நிலையில்  தான் தொகுதிக்கு வருவதற்கு முன்பே ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும்  238 பூத்களுக்குமான பூத் முகவர்களிடமும்  (பாக முகவர்) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவிட்டார் ஸ்டாலின்.

இப்போது ஈரோடு இடைத் தேர்தல் களம் திருவிழா போல இருந்தாலும் பிப்ரவரி 25 ஆம் தேதி மாலையோடு வெளியூர்க்காரர்கள் அனைவரும் வெளியேற வேண்டியது கட்டாயம். அதன் பின் ஒவ்வொரு பூத்திலும் இருக்கும்  பாக முகவர்கள்தான் தேர்தலை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் திமுக கூட்டணி வாக்காளர்கள் யார், அதிமுக கூட்டணிக்கான வாக்காளர்கள் யார், நடு நிலை வாக்காளர்கள் யார் என்பதை எல்லாம் அறிந்தவர்கள் பாக முகவர்கள்தான். இவர்கள்தான் வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குப் பதிவு ஒழுங்காக சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

தங்களுக்கு சாதகமான வாக்காளர்கள் எல்லாம் வாக்களிக்க வந்துவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் கட்சியினரிடம் சொல்லி அழைத்து வரச் சொல்ல வேண்டும். வாக்குப் பதிவு எல்லாம் முடிந்த பிறகு பதிவான வாக்கு எண்ணிக்கை வாக்கு இயந்திரத்தில் சரியான எண்ணிக்கையில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து,  வாக்கு இயந்திரம் சீல் வைக்கப்படும் வரை கண்காணிக்க வேண்டும்.

பிறகு வாக்கு எண்ணிக்கை தினத்தன்றும்  அங்கே இருந்து எண்ணிக்கை சரியாக நடக்கிறதா என்பதை கவனித்து வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் கிடைக்கும் வரையில் உடன் இருப்பதுதான்  பாக முகவர்களின் தலையாய பணி.

திமுக கூட்டணியில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சியினர் கூட விசிடிங் ப்ரஃபசர்கள் போல  வந்து செல்கிறார்கள். ஆனால் திமுக வேட்பாளரைப் போல அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை களமிறங்கியிருக்கிறார்கள். காரணம் இந்த ஆட்சியின் இருபது மாத நிர்வாகத்துக்கான சான்றிதழாக இந்த இடைத் தேர்தல் முடிவுகள் அமையப் போகிறது.

இதற்காகத்தான் ஒவ்வொரு பாக முகவர்களாக தொலைபேசியில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். மொத்தமுள்ள 238 பாக முகவர்களிடமும் ஒரு ரவுண்டு பேசிவிட்டவர், அடுத்த ரவுண்டும் பேசி வருகிறார். உதாரணமாக 21 ஆவது வார்டுக்கு உட்பட்ட 81 ஆவது  பூத்தின் பாக முகவர் ரியாஸிடம் தொடர்புகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,

‘உங்க பூத்துல நம்ம கூட்டணி வாக்காளர்கள் எத்தனை பேர் இருக்காங்க… எதிரணிக்கு போகும் வாய்ப்புள்ள வாக்காளர்கள் எத்தனை பேர், நடு நிலை வாக்காளர்கள் எத்தனை பேர்?’ என்று கேட்டிருக்கிறார். ரியாஸ் பதில் சொன்னவுடன், ‘சரி… இனி வரும் நாட்கள்ல நடுநிலை வாக்காளர்களை நம் வாக்காளர்களாக மாத்தப் பாருங்க’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

28 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தில்  கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக ஜெயித்து பின் திமுகவில் சேர்ந்தவர். அவரது வார்டுக்கு உட்பட்ட பாக முகவர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் செந்திலிடமும் பேசியிருக்கிறார். இவ்வாறு பாக முகவர்களிடம் பேசியதோடு அவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் கட்சி நிர்வாகிகளிடமும் பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் ஏன் இப்படி இறங்கியிருக்கிறார் என திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஜனவரி மாதம் கடைசியில் தொடங்கி பிப்ரவரி 2 ஆம் வாரத்துக்குப் பிறகான நிலையை ஆய்வு செய்து திமுக கூட்டணிக்கு சாதகமான வாக்குகள் எவை எவை என்று துல்லியமாக பட்டியல் ஒவ்வொரு பூத்திலும் தயாரித்து அது தலைமைக்கு அனுப்பப்பட்டது.

அதில் பல கிராஸ் செக்குகள் செய்து ஸ்டாலின் ஒரு  டேட்டா ஷீட்டை தயார் செய்திருக்கிறார். அந்த டேட்டா ஷீட்டை வைத்துக் கொண்டுதான் ஸ்டாலின் ஒவ்வொரு பாக முகவருக்கும் பேசி உளவியல் ரீதியாக அவர்களை உற்சாகப்படுத்துகிறார் . இவ்வளவு இறங்கி வந்து ஸ்டாலின் ஒவ்வொரு பாக முகவராக பேசுவதற்கு என்ன காரணம்? திமுகவினர் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிட்டதா?

திமுக நிர்வாகிகள் மத்தியில் இதுகுறித்து விசாரித்தால், ‘ஒவ்வொரு பூத் பற்றி தனக்கு வந்திருக்கும் டேட்டா ஷீட்டுகளை வைத்துக் கொண்டு அறிவுரையும் ஆலோசனையும் சொல்லும் முதல்வர் அதை விட கடுமையான எச்சரிக்கையும் சொல்லியிருக்கிறார்.

அதாவது வரும் தேர்தலில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். அதுதான் நமக்கு கிடைக்கும் உண்மையான வெற்றி. அதை விட்டுவிட்டு இத்தனை வாக்கு வித்தியாசம் அத்தனை வாக்கு வித்தியாசம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. அதிமுக வேட்பாளர் உட்பட  நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அத்தனை பேரும் டெபாசிட் இழக்க வேண்டும்’ என்பதுதான் முதல்வரின் கணக்கு.

அதற்காகவே பூத் முகவர்கள் வரை விடாமல் பேசியிருக்கிறார் ஸ்டாலின்’ என்கிறார்கள். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கணக்கு நிறைவேறுமா என்பது பிப்ரவரி 27 இடைத் தேர்தலைத் தொடர்ந்து நடக்கும் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று தெரிந்துவிடப் போகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து  ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கிரிக்கெட் வீரரை தாக்கிய நடிகைக்கு ஜாமின்!

மீனவர் விவகாரம்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இந்தியா வெற்றி: அரையிறுதிக்கு முன்னேற்றம்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *