தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவராக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த திமுகவின் மாநில விவசாய அணி இணைச் செயலாளரான குறிஞ்சி சிவகுமார் நேற்று (நவம்பர் 13) அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பதிலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நீரஜ் மிட்டல் அந்த நிறுவனத்தின் தலைவராக செயல்படுவார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே கட்சியினருக்கு வாரிய பதவிகள் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குறை திமுக நிர்வாகிகளிடையே நிலவுகிறது.
இந்த நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனம் போன்ற அரசுப் பதவியில் இருந்த திமுக பிரமுகரான குறிஞ்சி சிவகுமார் நீக்கப்பட்டிருப்பது, இதுபோன்ற பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கட்சியினருக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சி சிவகுமாரின் பதவிப் பறிப்புக்கான பின்னணி என்று ஈரோடு முதல் சென்னை வரை அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் விசாரித்தோம்.
பெரியார் வீட்டுக்குப் பின் வீடு
“திராவிடர் கழகத் தலைவரான தந்தை பெரியாரின் குடும்பம் ஈரோட்டில் மிகப் பெரிய செல்வச் செழிப்பான குடும்பம். ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கு பின் பக்கமுள்ள வீட்டைச் சேர்ந்தவர் ஈரோடு நாராயணன்.
பகுத்தறிவுக் கொள்கையில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், ஒரு கட்டத்தில் சென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா தொடங்கியபோது பெரியாரை விட்டு விட்டு அந்த திமுக தொடக்க விழாவுக்கு சென்றார்.
ஈரோட்டில் அதுவும் பெரியாரின் பின் வீட்டில் இருப்பவரே பெரியாரை விட்டு அண்ணா பின்னால் சென்றுவிட்டார் என்று அப்போது திராவிடர் கழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
துரைமுருகன் வாங்கிக் கொடுத்த பதவி!
அப்படிப்பட்ட ஈரோடு நாராயணனின் மகன் தான் குறிஞ்சி சிவகுமார். தந்தை வழியில் திமுகவில் ஈடுபாடாக இருந்த சிவகுமார் கேபிள் டிவி தொழில் செய்துவந்தார். தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார் சிவகுமார்.
இந்த நிலையில்தான் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு திமுகவின் பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினிடம், ‘எனக்காக ஒரே ஒரு விஷயம் பண்ணிக் கொடுங்க. திமுகவில் அண்ணா காலத்து சீனியரான ஈரோடு நாராயணனோட பையன் சிவகுமாருக்கு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பதவி கொடுங்க. ஏற்கனவே கேபிள் பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கறவன். நல்லா செய்வான்’ என்று சொல்ல முதல்வரும் துரைமுருகனே சிபாரிசு செய்ததால் 2021 ஜூலை 7 ஆம் தேதி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவராக குறிஞ்சி சிவகுமாரை நியமனம் செய்து அறிவித்தார்.
வேலூர்- காட்பாடி- குறிஞ்சி சிவகுமார்
சிவகுமாருக்கு துரைமுருகன் சிபாரிசு செய்ததற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினராக துரைமுருகனுக்கு அறிமுகமானவர் குறிஞ்சி சிவகுமார்.
மெல்ல மெல்ல துரைமுருகனோடு நெருக்கமானவர். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் 2019 ஆகஸ்டு மாதம் நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். மே மாதம் எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த நிலையில் வேலூர் தொகுதியில் அதிக அளவு பணம் கைப்பற்றப்பட்டதால் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்துவிட்டது.
அதனால்தான் வேலூர் தொகுதிக்கு மட்டும் தனியாக ஆகஸ்டு மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போது கதிர் ஆனந்துக்காக தேர்தல் செலவு செய்ய பணமின்றி துரைமுருகன் கஷ்டப்பட்ட நிலையில், குறிஞ்சி சிவகுமார் வேலூரில் முகாமிட்டு கதிர் ஆனந்துக்கு தேர்தல் வேலை செய்ததோடு, பண உதவியும் செய்திருக்கிறார். அப்போது துரைமுருகனின் மனதுக்கு மேலும் நெருக்கமானவராக ஆனார் சிவகுமார்.
துரைமுருகனின் தேர்தல் ஏஜென்ட்!
இதைத் தொடர்ந்து கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்டபோது வாக்கு எண்ணிக்கை தினத்தன்று துரைமுருகனுக்கான ஏஜென்ட்டாக பணியாற்றியவர் சிவகுமார். கதிர் ஆனந்துக்காக சிவகுமார் செய்த பணியைப் பார்த்துதான் தனக்கே ஏஜென்ட் ஆக சிவகுமாரை நியமித்தார் துரைமுருகன்.
வாக்கு எண்ணிக்கையின் போது துரைமுருகனுக்கும் அதிமுக வேட்பாளரான ராமுவுக்கும் இடையே மிக நெருக்கமான போட்டி போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் துரைமுருகன் தான் தோல்வி அடைந்துவிடுவோம் என்று நினைத்து, அங்கிருந்து வெளியே செல்ல முடிவு செய்துவிட்டார்.
அப்போது சிவகுமார்தான், ‘ஐயா… நிச்சயம் நீங்க ஜெயிப்பீங்க. கொஞ்சம் பொறுங்கய்யா கட்சிக்காரங்க உங்களை கைவிட மாட்டாங்க’ என்று சொல்ல அவர் சொல்படியே கடைசியாக 746 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டார் துரைமுருகன்.
இந்த பின்னணியில்தான், ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலினிடம் குறிஞ்சி சிவகுமாருக்காக பேசி அவருக்கு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்தார்.
குறிஞ்சி சிவகுமார் அரசு கேபிள் டிவி கழக தலைவரான பிறகு, அந்த நிறுவனத்துக்கு சென்னையில் எட்டு லட்ச ரூபாய் வாடகையில் இருந்த மிகப்பெரிய அலுவலகத்தைப் பார்த்துவிட்டு… ‘எதுக்கு இவ்வளவு பெரிய அலுவலகம்?’ என்று கேட்டு நான்கு லட்ச ரூபாய் வாடகையில் அலுவலகத்தை மாற்றினார். அரசுக்கு சிக்கனத்தையும் ஏற்படுத்தினார்.
இந்த சூழலில்தான் நேற்று (நவம்பர் 13) குறிஞ்சி சிவகுமாரின் பதவி பறிக்கப்பட்டது. “அரசு கேபிள் டிவி தலைவர் பதவியில் அரசியல் பிரமுகரை விட ஐ.ஏ.எஸ், அதிகாரியை அமர வைத்தால்தான் இன்னும் வேகமாக செயல்பட முடியும்” என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.
தனக்கு எதிராக சில லாபிகள் நடப்பதை அறிந்த குறிஞ்சி சிவகுமார், தான் இந்த பதவியில் இருந்து செயல்பட்டு வரும் விதம் பற்றி முழுமையான ஒரு ஃபைல் தயார் செய்து முதல்வருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் அந்த கோப்பு முதல்வரின் பார்வைக்கு சென்றதா இல்லையா என்பதே தெரியவில்லை என்கிறார்கள் சிவகுமார் தரப்பினர்.
குறிஞ்சி சிவகுமாரின் பதவி பறிக்கப்பட்டது அவரை விட துரைமுருகனுக்கு கூடுதல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இது தொடர்பாக தன்னிடம் பேசிய சிவகுமாரிடம் ஆறுதல் சொல்லியிருக்கிறாராம் துரைமுருகன்.
அமைச்சர் முத்துசாமியின் அழுத்தம்!
இந்த நிலையில் குறிஞ்சி சிவகுமாரின் பதவிப் பறிப்புக்கு ஈரோடு மாவட்ட அரசியலும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்கள் ஈரோடு திமுக வட்டாரத்தில். “அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவராக பதவியேற்ற நாள் முதலே தன்னை ஈரோடு மாவட்ட திமுகவில் முன்னிலைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார் சிவகுமார்.
இது மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, கட்சியில் மட்டுமல்லாமல் போலீஸாரிடமும் சிவகுமார் தன் செல்வாக்கை காட்டியிருக்கிறார்.
அதாவது அமைச்சருக்கு நிகராக தனக்கும் போலீஸ் எஸ்கார்டுகள் பாதுகாப்புக்கு வரவேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார் சிவகுமார்.அதேநேரம் கேபிள் டிவி தலைவராக அவர் சரிவர செயல்படவும் இல்லை.
கடந்த ஆட்சியில் அரசு கேபிள் டிவி தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்தபோது, ‘தனியார் தொலைக்காட்சிகளில் அரசுக்கு எதிராக செய்திகள் வந்தால் உடுமலை ராதாகிருஷ்ணனே சம்பந்தப்பட சேனல் எடிட்டர்களிடம் பேசி அதைக் குறைப்பார்.
தொடர்ந்து எதிரான செய்திகள் வந்தால் அரசு கேபிள் வரிசையில் குறிப்பிட்ட சேனல்கள் பின்னோக்கி தள்ளப்பட்டதும் உண்டு. அதுபோல குறிஞ்சி சிவகுமார் செயல்படவே இல்லை. அரசுக்கு எதிராக பல சேனல்களில் செய்திகள் வந்தபோதும் அதை உடனுக்குடன் இவர் தடுத்திட நடவடிக்கை இல்லை.
மேலும் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு நிர்வாக ரீதியிலும் பெரிய லாபம் இல்லை. தனியார் கேபிள் நிறுவனங்களோடு மற்றும் சேனல்களோடு இணக்கமாக இருந்து அரசு கேபிள் டிவிக்கு இழப்பை ஏற்படுத்துகிறார் என்றெல்லாம் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலினிடம் புகார்களை அடுக்கியிருக்கிறார்கள் அமைச்சர் முத்துசாமி தரப்பினர்.
இதன் விளைவாகத்தான் முதல்வர் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.
அமைச்சர் முத்துசாமி தரப்பின் புகார்கள் குறித்து ஈரோடு சிவகுமார் வட்டாரத்தில் பேசினோம். “அதிமுக ஆட்சியில் உடுமலை ராதாகிருஷ்ணன் அரசு கேபிள் தலைவராக இருந்தபோது அவருக்கு செயல்பட சுதந்திரம் இருந்தது. ஆனால் சிவகுமாருக்கு அப்படி எதுவும் இல்லை.
அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு நிதி ஒதுக்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. காரணம் நிதித்துறை அமைச்சரிடம் இருந்து போதிய ஃபண்ட் ஒதுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் குறிஞ்சி சிவகுமார் செயல்படவில்லை என்று எப்படி சொல்ல முடியும்? அமைச்சர் முத்துசாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அழுத்தத்தால்தான் குறிஞ்சி சிவகுமாரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.
வேந்தன்
10% இட ஒதுக்கீடு: மௌனம் கலைத்த ஓபிஎஸ்
மக்கள் படகில் செல்வதை ஸ்டாலின் பார்க்கவில்லையா?: களத்தில் எடப்பாடி