தமிழ்நாட்டில் தடை? : நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு… சேகர்பாபு மறுப்பு!

அரசியல்

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கை கொண்டாட தமிழ்நாட்டில் திமுக அரசு தடைவிதித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதனை முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தி என்று அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை (ஜனவரி 22) ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வெளியான தினமலர் பத்திரிகை தலைப்பு செய்தியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நாளை கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும்  அன்னதானம் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது என்றும், இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்றும் செய்தி வெளியானது.

இந்து விரோத செயலை கண்டிக்கிறேன்!

இதனை தனது பக்கத்தில் பகிர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதில், “ நாளை (ஜனவரி 22) நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. ஆனால் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதியில்லை.

தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தின் பல பகுதிகளில் பஜனைகள் ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல், இனிப்புகள் வழங்கி கொண்டாடுதல் போன்றவற்றிற்காக மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ராமர் கோயில் குடமுழுக்கு நேரடி ஒளிபரப்பின்போது கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது I.N.D.I.A கூட்டணிக் கட்சியான திமுகவின் இந்து விரோத முயற்சி.

நேரலை ஒளிபரப்பு தடையை நியாயப்படுத்த தமிழக அரசு அதிகாரப்பூர்வமற்ற முறையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கூறி வருகிறது. அது பொய்யும் புரட்டுமான கதை. தமிழ்நாட்டில் ராமரை கொண்டாட மக்கள் தாமாக முன்வந்து பங்கேற்பது இந்து விரோத திமுகவைக் கொந்தளிக்க வைத்துள்ளது” என்று நிதியமைச்சர் கூறியிருந்தார்.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பானச் செய்தி!

நிர்மலா சீதாராமனின் இந்த பகிரங்க குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தற்போது விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!” என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’SK21’ ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிய நெல்சன்: ரிலீஸ் தேதி இதுதானா?

நடிகை ஷகீலாவை அட்டாக் செய்த வளர்ப்பு மகள்… காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *