ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கும் நிலையில் அதை முன்னிட்டு ஜனவரி 19, 20, 21 தேதிகளில் பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பயணம் அரசியல் ரீதியாக மட்டுமல்ல ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜனவரி 19 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
அதன் பின் ஜனவரி 20 காலை விமானத்தில் திருச்சி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற மோடி, அங்கே ரங்கநாத பெருமாளை வழிபட்டார். பிறகு கம்பராமாயண பாராயணத்தை தமிழில் ரசித்துக் கேட்டார். அதன் பின் நேற்று பிற்பகல் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்கே ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டார். அக்னி தீர்த்தம் எனப்படும் ராமேஸ்வரம் கடலில் நீராடிய பிரதமர், அதன் பின் கோயிலுக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களிலும் நீராடினார்.
ஸ்ரீரங்கம் கோவில் தரிசனம் பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “ஶ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த கோவிலுடனான பிரபு ஶ்ரீராமரின் தொடர்பு நெடியது. பிரபு ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை பாக்கியமாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடத்தில் நேற்று இரவு தங்கிய பிரதமர் மோடி இன்று ஜனவரி 21 ஆம் தேதி காலை அரிச்சல் முனை கடற்கரையில் தியானம் மேற்கொண்டு வழிபட்டார். இந்தியாவின் தென்கோடி முனையான தனுஷ்கோடிக்கு சென்று அங்கே கோதண்டராமர் கோயிலிலும் வழிபட்டுள்ளார்.
அயோத்திக்கு செல்வதற்கு முன்பாக மோடி தமிழ்நாட்டின் திருவரங்கத்துக்கும், ராமேஸ்வரத்துக்கும் வந்து செல்வதற்கான காரணம் இந்தியா முழுதும் ஆன்மீக வட்டாரங்களிலும் பொது மக்கள் வட்டாரங்களிலும் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆன்மிகம் தொடர்பான ஒரு விஷயம் இவ்வளவு விரிவாக நாட்டின் எல்லா பகுதிகளிலும் விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் முன் மோடி ஸ்ரீரங்கத்துக்கும், ராமேஸ்வரத்துக்கும் வந்து செல்லும் காரணம் என்ன?
ராமரை வணங்கும் முன், ராமர் யாரை வணங்கினாரோ அவர்களை வணங்கி ஆசிபெற்றுச் செல்வதுதான் பிரதமர் மோடியின் இப்பயணத்துடைய நோக்கம் என்கிறார்கள் ஆன்மீக வட்டாரங்களில்.
அப்படியென்றால் ராமருக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் என்ன தொடர்பு? ராமருக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன தொடர்பு?
இதுகுறித்து ஸ்ரீரங்கம் ஆன்மிக வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் நம்மிடம் காட்டியது கோயிலொழுகு என்ற நூலைத்தான்.
வைணவ வட்டாரத்தில் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம்தான். ஸ்ரீரங்கம் கோயிலின் வரலாற்றை இதிகாச, புராணங்களில் இருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை தொகுக்கப்பட்ட தொகுப்புதான் கோயிலொழுகு.
அதாவது இதிகாச, புராண காலங்களில் இருந்து ராமானுஜருக்கு முந்தைய வைணவ ஆச்சாரியர்களின் காலங்கள் தொட்டு, அதன் பின் ராமானுஜர் ஸ்ரீரஙக்த்தில் செய்த சீர்திருத்தங்கள், ராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலின் தன்மை என்ன என்பது வரை 18 ஆம் நூற்றாண்டு வரைக்குமான ஸ்ரீரங்கம் கோயிலை மையமாகக் கொண்ட முழுமையான தகவல்கள் இடம்பெற்றிருப்பதுதான் கோயிலொழுகு.
இதில் ராமானுஜர் காலத்து நிகழ்வுகள் விரிவாக இடம்பெற்றிருப்பதால் அவர் காலத்தில்தான் இது தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் வைணவ ஆய்வாளர்கள்.
இப்படிப்பட்ட கோயிலொழுகு நூலின் முதற் பகுதியிலேயே அயோத்திக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி கருடபுராணத்தை மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருக்கிறது.
அதாவது கருட புராணத்திலேயே ஸ்ரீரங்க மகாத்மியம் இடம்பெற்றுள்ளது. இதில்தான் அயோத்திக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையிலான தொடர்பு கூறப்பட்டுள்ளது. அயோத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சூரிய குல வம்சத்து மன்னர்கள், அதாவது ராமனின் முன்னோர்கள் ரங்கநாத பெருமாளை தங்கள் குல தெய்வமாக ஆராதித்து வந்தார்கள்.
இந்த நிலையில்தான் சூரிய வம்ச மன்னரான ராமன் தனது மனைவி சீதாவை ராவணன் கவர்ந்து சென்றதை அடுத்து இலங்கை வரை சென்று போர் செய்து சீதாவை மீட்டார். இந்த போரில் ராவணன் அதர்மம் பக்கம் நிற்பதாக கருதிய ராவணனின் சகோதரன் விபீஷணன், தன் அண்ணனையே எதிர்த்துக் கொண்டு ராமனுக்கு ஆதரவு தெரிவித்தார்.
சீதாவை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பிய ராமன் அரசனாக பட்டம் சூட்டிக் கொண்டார். அந்த விழாவில் ராவணன் தம்பி விபீஷணனும் கலந்துகொண்டார். தனக்கு உதவிய விபீஷணனுக்கு மறக்க இயலாத பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்த ராமன், தனது பரம்பரையே குல தெய்வமாக வணங்கிய ரங்கநாத பெருமாளை விபீஷ்ணனுக்கு கொடுத்து இலங்கையில் இவரை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு தெரிவித்தார்.
அதன்படியே விபீஷணன் ரங்கநாத பெருமாள் விக்ரகத்தை அயோத்தியில் இருந்து எடுத்துச் செல்லும் வழியில் காவிக்கரையான இப்போதைய ஸ்ரீரங்கம் பகுதியில் வைத்தார். ஆனால் ரங்கநாத பெருமாளுக்கு காவிரிக் கரை பிடித்துப் போய்விட்டதால் அதை விட்டு அவர் நகரவில்லை. விபீஷணன் வேண்டுகோளுக்கு இணங்க, ‘உனது ஊரான தெற்கு திசை பார்க்க நான் காட்சி தருகிறேன்’ என்று சொல்லி, தெற்கு முகம் நோக்கி காட்சி தருகிறார் ரங்கநாதன்.
அனேகமாக எல்லா பெருமாள் கோயில்களிலும் பெருமாள் கிழக்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டும்தான் தெற்கு நோக்கிய சன்னிதி இருக்கிறது.
இவையெல்லாம் கருடபுராணத்திலும் அதை ஒட்டிய ஸ்ரீரங்க கோயில் வரலாற்றுத் தொகுப்பான கோயில் ஒழுகு தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன. இந்த குறிப்பு ஆழ்வார்களின் பாசுரங்களிலும் இருக்கிறது. ’மன்னுடைய விபீடணிற்கா மதினிலங்கை திசை நோக்கி மலர்க்கண் வைத்த’ என்று பெரியாழ்வார் தனது திருமொழியிலே குறிப்பிடுகிறார்.
அதாவது ராமரின் முன்னோர்கள் வணங்கிய குல தெய்வமான ரங்கநாத பெருமாள்தான் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார் என்பது ஆன்மீக ரீதியான பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டது என்பதால்தான், அயோத்திக்கு செல்லும் முன்னர் மோடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாத பெருமாளை வழிபட்டு அங்கே கம்பராமாயண பாராயணத்தையும் கேட்டிருக்கிறார்.
சரி… ராமேஸ்வரத்துக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு?
ராமன் + ஈஸ்வரன்= ராமேஸ்வரன் இதுவே ராமேஸ்வரம் என்று ஆனது. ஈஸ்வரன் என்பதற்கு வடமொழியில் சிவன் என்று பொருள் உண்டு.
இலங்கைக்கு சென்று ராவணனோடு போர் தொடுக்க புறப்பட்ட முன்னும், பின்னும் ராவணன் சிவ பக்தன் என்பதால் ராமேஸ்வரத்திலுள்ள சிவலிங்கத்தை வழிபட்டார் ராமர் என்பது புராணக் குறிப்புகளில் இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் இந்த பகுதிக்கு ராமநாதபுரம் என்றும், அந்த சிவனுக்கு ராமநாத சுவாமி என்றும், ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்திருக்கிறது.
இவ்வாறு அயோத்திக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆன்மீக ரீதியாக இருக்கும் பிணைப்பை புதுப்பிக்கும் விதமாகவும் இதுபற்றிய விவாதங்களை விரிவான அளவில் எழுப்பும் வகையிலும்தான் பிரதமர் மோடியின் இந்த ஆன்மீக பயணம் அமைந்திருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
தமிழ்நாட்டில் தடை? : நிர்மலா சீதாராமன் பகீர் குற்றச்சாட்டு… சேகர்பாபு மறுப்பு!
’SK21’ ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டிய நெல்சன்: ரிலீஸ் தேதி இதுதானா?
Comments are closed.